Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒருங்கிணைக்கப்பட்ட நாட்டில் தேசிய நல்லிணக்கத்தின் தகுதியாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் மீன்பிடித்துறை, வர்த்தகத்துறை ஆகியன வளர்ச்சி கண்டுள்ளமை இதற்கான நல்ல ஆரம்பநிலையைக் காட்டுகின்றது. வடக்கு மாகாணத்தின் நியம வளர்ச்சி 2015ஆம் ஆண்டில் 12.1 சதவீதமாகக் காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற வடக்கு மாகாண  முதலீட்டாளர்கள் சம்மேளன நிகழ்வில் கலந்து கொண்டு  உரையாற்றிய போதே மத்திய வங்கி ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்திற்கு மத்தியிலும், சீனாவின் பொருளாதார மையங்கள் ஜரோப்பிய ஆசியப் பொருளாதார மையங்களுக்கு இடையில் இலங்கையின் பொருளாதாரம் பல சவால்களை எதிர்நோக்குகின்றது.

தாழ் நிலை வருமானத்தில்  மட்ட நிலையில் இருந்த  இலங்கை தற்போது நடுநிலை வருமான மட்ட நாடாக வளர்ச்சியடைந்து விட்டதாகவும் தெரிவித்தவர், அபிவிருத்திக்கு முன் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவ நிலைக்கு மனித வளம் மாற்றப்பட வேண்டும்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் மொத்த தேசிய உற்பத்தியில் 90 சதவீதத்தை ஏற்றுமதியாகக்  கொண்டவைகள்  மூலம் அதிக வருவாய் கிடைக்கின்றது. ஆனால் இலங்கையில் மொத்த தேசிய  உற்பத்தியில் 17 சதவீதமானவையே ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு பயன்படுகின்றன.

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்தல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல், உள்ளுர் முதலீட்டாளர்களை ஊக்குவித்தல் போன்றவை கடன்படு சுமைக்கு உடனடித் தீர்வாக அமையும்.

இந்திய, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் ஏற்படுத்தப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் எமது நாட்டின் தொழில்நுட்பத்துறை, முதலீட்டுத்துறை போன்றவற்றை மேலும் வளர்க்க உதவும். இந்தியா பாகிஸ்தானுடன் செய்யப்பட்ட சுதந்திர வர்த்த உடன்படிக்கையைப் போல் சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய பொருளாதாரம் முன்னேற்றமடைவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

இந்தியா, சீனா, சிங்கப்பூர், யப்பான் போன்ற நாடுகள் இலங்கையின் முக்கிய நகரங்களில்  தமது முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளன.

ஒன்றிணைக்கப்பட்ட இந்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தின் மிக முக்கிய தகுதியாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் மீட்கப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தின் மீன்பிடித்துறை, வர்த்தகத்துறை வளர்ச்சி கண்டுள்ளமை இதற்கான நல்ல ஆரம்பநிலையைக் காட்டுகின்றது. வடக்கு மாகாணத்தின் நியம வளர்ச்சி 2015ஆம் ஆண்டில் 12.1 சதவீதமாகக் காணப்படுகின்றது.” என்றுள்ளார்.

முதலீட்டு தொடர்பாக தேசிய மட்டத்திலும், வடக்கு மாகாணத்திலும் இருக்கக் கூடிய  சந்தர்ப்பங்கள் பற்றியும், இலங்கையின் பொருளாதாரத்தில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு பற்றியும்,  முதலீட்டாளர்களுக்கு வடக்கு மாகாணத்திலே என்னென்ன தெரிவுகள் உள்ளன என்பது பற்றியும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் எடுத்துரைத்துள்ளார்.

0 Responses to தேசிய நல்லிணக்கத்தின் தகுதியாக வடக்கின் பொருளாதாரம் மீட்டு வளர்க்கப்பட வேண்டும்: இந்திரஜித் குமாரசுவாமி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com