Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டு எதிரணியில் (மஹிந்த ஆதரவு அணி) இயங்கும், சுதந்திரக் கட்சித் தலைவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபடுகின்றார். இது, ஜனநாயக விரோதச் செயற்பாடாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் ஏதும் தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய பரிசோதனை உற்பத்தி உதவி அதிகாரிகளின் சங்கத்தின் 19வது சம்மேளனக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கூட்டு எதிரணியினர் புதிய கட்சியை ஆரம்பித்தால், அவர்களின் இரகசியங்களை வெளியிட்டு வீதியில் இறங்க முடியாத நிலையை உருவாக்குவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு நிகழ்வில் தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். அதில், “முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நேரப்போகின்றது.

அமரர் ரணசிங்க பிரேமதாச கட்சிக்குள் இருந்த முக்கியத் தலைவர்களை அச்சுறுத்தி ஓரம் கட்டிவிட்டு தனது அரசியல் பயணத்தை தொடர முற்பட்டதாலேயே அவர் எவரது ஆதரவும் இன்றி இறுதியில் உயிரிழந்தார். அந்த நிலை தற்போது மைத்திபால சிறிசேனவுக்கும் ஏற்பட்டு வருகின்றது.

அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான உரிமை. எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்தபோது இவ்வாறு அச்சுறுத்தியிருந்தால் என்னவாகியிருக்கும்? டி.எஸ் கூறியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? கட்சி உருவாகியிருந்திருக்குமா? அப்படி கட்சி உருவாகும். அதனை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது. நான் அப்படி கட்சி ஒன்றை ஆரம்பிக்கமாட்டேன். அதன் அர்த்தம் என்னவென்றால் அப்படியான சுதந்திரமொன்று காணப்பட வேண்டும்.

தீர்மானம் எடுப்பதற்கான சுதந்திரம் மக்களுக்கு இருக்கவேண்டும். அச்சுறுத்தினால் அதனை எவ்வாறு செய்வது? நன்றாக கூறியிருந்தால் அதில் வித்தியாசம் இல்லை. ஆனால் அச்சுறுத்தல் விடுத்தால் இல்லாததொன்றும் உருவாகும். அச்சுறுத்தல் மற்றும் சிறைதள்ளுதல் போன்றவற்றினால் மனிதர்களது அரசியல் சிந்தையை இல்லாதொழிக்க முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரி அச்சுறுத்தலில் ஈடுபடுகின்றார்; நான் தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டேன்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com