Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரச நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றனவா?, என்கிற சந்தேகம் தோன்றியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்தானது பாரதூரமானது, இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாதது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.

இந்தக் கருத்தின் பின்னணியில் மக்களின் ஆணை மீறப்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  “நேற்று (நேற்றுமுன்தினம் புதன்கிழமை) நடந்த நிகழ்வொன்றின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையில் கூறிய விடயம் ஒன்றை இன்று வெளியான சகல பத்திரிகைகளும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன.

குற்றப் புலனாய்வு திணைக்களம், நிதி குற்ற விசாரணைப் பிரிவு, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு என்பன அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்றனவா என சந்தேகம் வெளியிட்டு, ஜனாதிபதி கூறியிருந்த கருத்தை பாரதூரமானதாகவே நாம் பார்க்கின்றோம்.

கடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளுக்கு எதிராக மற்றும் நல்லாட்சி, ஜனநாயகத்திற்காகவும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த 62 இலட்சம் வாக்காளர்களின் அபிலாஷைகள் மற்றும் ஆணைக்கு ஜனாதிபதி தனது உரையில் சவால் விடுத்துள்ளார்.

கடந்த காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தவறாக அர்த்தப்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிராக தோல்வியடைந்த ராஜபக்ஷ அணி, படையினருக்கு மத்தியில் சில நிலைப்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்குமாக இருந்தால், அந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டுமே அன்றி? விசாரணைகளை நடத்தி வரும் நிறுவனங்கள் தளர்ந்து போகும் வகையில் செயற்படக் கூடாது.”  என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to மக்களின் ஆணையை மீறும் ஜனாதிபதியின் கருத்து பாரதூரமானது; ஜே.வி.பி சுட்டிக்காட்டல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com