Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் குற்றங்களில் ஈடுபடும் வாள்வெட்டுக் குழுவினர் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் துணைப்பிரிவினரா?, என்கிற கேள்விக்கு பதிலளிக்காது சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்க நழுவிச் சென்றார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு சாகல ரட்ணாயக்க கருத்து வெளிட்டார்.

அப்போது, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போதே, அதிலிருந்து அவர் பதில்கள் எதனையும் கூறலாம் நழுச் சென்றார்.

சாகல ரட்ணாயக்க  தெரிவித்துள்ளதாவது, “யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில், கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக, பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயரிழக்கக் காரணமாக இருந்த சம்பவத்தை அடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டுமல்லாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், யாழ்ப்பாண சிவில் சமூகம், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், பொதுமக்கள் எனப் பலரும், நிலைமையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு பெரிதும் ஒத்துழைத்து செயற்பட்டிருந்தனர்.

அதற்கான சகல தரப்பினருக்கு நன்றியை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அவ்வாறு இல்லாத பட்சத்தில், பெரும் குழப்பமான நிலைமையொன்று ஏற்பட்டிருக்கக்கூடும்.

யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினர், மோட்டார்  சைக்கிள்களைப் பயன்படுத்திவரும் நிலையில், அந்தக் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பொலிஸார், அங்கு உஷார்  நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற அன்றும், இவ்வாறானதொரு உஷார் நிலையிலேயே பொலிஸார் இருந்தனர். அப்போது, வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு, பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். இரண்டு தடவைகள் சமிக்ஞை செய்துள்ளனர். அவ்விருதடவைகளையும் மீறி, மேற்படி மாணவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றதையடுத்தே, பொலிஸாரினால் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து அறியமுடிந்துள்ளது.” என்றுள்ளார்.

அப்போது, குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள்,  இந்தச் சம்பவம் தொடர்பிலான உங்களது அர்த்தப்படுத்தலுக்கு அமைய, அது எந்த வகையில் இன ஒற்றுமைக்குப் பாதிப்பதாக அமைந்திருக்கக்கூடும் என்று அமைச்சரிடம் வினவினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சாகல, “பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் இரு தமிழ் மாணவர்களின் உயிரிழப்பு என்பவற்றை, சம்பவத்தின் பாரதூரமான விடயங்களாக சுட்டிக்காட்டியதுடன், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி, சிலர் தூண்டுதல்களில் ஈடுபடுவதற்குக் காத்திருந்திருக்கலாம்.” என்றார்.

எவ்வாறிருப்பினும், யாழ். குடாநாட்டில் குற்றங்களில் ஈடுபடும் வாள்வெட்டுக் குழுவினர், இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் சம்பந்தப்பட்டவர்களாகவே இருப்பதாக தமிழ் மக்களால் தெரிவிக்கப்படுகிறதே என்றும்  ஊடகவியலாளர்களினால் வினாவப்பட்டது.

இக்கேள்விக்கு எவ்விதமான பதிலையும் அளிக்காமல், ஆசனத்திலிருந்து எழுந்து கதவை நோக்கி நடந்தார் அமைச்சர். எனினும், கேள்வி கேட்ட ஊடகவியலாளர் விடவில்லை.   “நீங்கள் அமைதியாகச் செல்வதை, நான் ஆம் என்ற பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?” என மீண்டும் வினவினார், கேள்வியை எழுப்பிய அந்த  ஊடகவியலாளர். அப்போது கதவுக்கு அருகில் சென்றுவிட்ட அமைச்சர் சாகல, “இல்லை, நான் எதுவும் சொல்லவில்லை” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

0 Responses to யாழில் குற்றங்களில் ஈடுபடும் வாள்வெட்டுக் குழு புலனாய்வுப் பிரிவின் துணைப் பிரிவா? கேள்விக்கு பதிலளிக்காது நழுவினார் சாகல ரட்ணாயக்க!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com