Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் காணி மீட்புப் போராட்டத்தினை இன்று வெள்ளிக்கிழமை 11வது நாளாக முன்னெடுத்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை போராட்டக்காரர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று வியாழக்கிழமை சந்தித்து பேசியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றது. பிரதமர் அலுவலகத்தில் கேப்பாபிலவு மக்கள் நேரடியாக பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் போது செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணியில் புதுக்குடியிருப்பு மக்களின் 49 சொந்த வீடுகள் உள்ளடங்கியிருப்பது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் தனியாருடைய காணிகளில் இராணுவம் இருப்பது தொடர்பில் அதற்கான சான்றுகள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன. அருகில் உள்ள அரச காணிகளுக்கு இராணுவத்தை நகர்த்தி அம்மக்களின் காணிகளை விடுவிக்கும்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதிப் பாதுகாப்பு அமைச்சரையும், இராணுவ அதிகாரிகளையும், அரசாங்க அதிபரையும் தொடர்பு கொண்டு நிலைமைகளை உடனடியாக ஆராய்ந்தார்.

இதன் அடிப்படையில் இராணுவ வசமுள்ள குறித்த 49 வீடுகளையும், காணிகளையும் உரிமையாளர்களிடம் உடன் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதி அளித்தார்.

மக்கள் சார்பாக கலந்து கொண்ட பிரதிநிதிகள் தமது சொந்த வீடுகள் விடுவிக்கப்படாததால் தாம் நிரந்தர வாழ்விடமின்றி பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து வருவதாகவும் 7 வருடங்களாக தாம் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லையெனவும் குறிப்பிட்டனர். இதற்கு பிரதமர் உடனடியாக துரித நடவடிக்கை எடுப்பதாகவும் இராணுவத்தினருடன் கலந்தாலோசித்து உரிய காணிகளை மக்களிடம் கையளிப்பதாகவும் உறுதியளித்தார்.

0 Responses to கேப்பாபுலவு போராட்டக்காரர்கள், த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுடன் சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com