Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதுரை அவனியாபுரத்தில் ஒன்று கூடுவோம். மகிழ்ச்சியோடு வெற்றியினை கொண்டாடுவோம்.

ஒரு முறை ஒரே ஒரு முறை என் தமிழினம் ஒற்றைப்புள்ளியாகி எங்கள் உரிமையினை மீட்க ஒன்று கூடாதா என ஏங்கி தவித்த பாரதியின் கனவு பாரதிதாசனின் ஏக்கம் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் எதிர்பார்ப்பு யுகங்கள் கடந்து 2017 சனவரி 14 தொடங்கி 23 வரை நடந்த தமிழினத்தின் (வி)தைப்புரட்சியினை இந்திய ஒன்றியம் மட்டுமல்ல இந்த உலகமே தரிசனம் செய்ததை வரலாறு பெருமையோடு பதிவெடுத்துக்கொண்டது.

ஏறுதழுவுதல் உரிமைக்கான இந்த வெற்றி முழுக்க முழுக்க தமிழினத்தின் மாணவர்கள், இளைஞர்களையே சாரும் என்பதை தமிழினத்தில் பிறந்து அவர்களோடு நின்று போராடிய கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில் பெருமிதம் கொள்கிறேன். ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழினத்தை, இந்த பூமிப்பந்தின் மூத்த மொழியான தமிழ் மொழியினை பன்னெடுங்காலமாக ஒரு கூட்டம் வேரறுக்க துடித்துக் கொண்டிருப்பதை நாங்கள் அடையாளம் கண்டுகொண்டதின் விளைவே இந்த யுகப்புரட்சி என்பதை எங்களை விடவும் எங்களின் தொன்மையான கலை, கலாச்சாரம் பண்பாடு, வாழ்வியல், வரலாற்றினை அழிக்க நினைத்தவர்களுக்கு அடிவயிற்றில் புலியினை கரைத்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழின் செறிவான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் அதனைப்படைத்த தொல்காப்பியரே பரிசுத்தமான என் தமிழ் மொழியில் எத்தனை எத்தனை பிற மொழி கலப்புகள். இனி ராமனை இராமன் என்றும் லஷ்மனனை இலக்குமனன் என்றும் தமிழ் படுத்தி எழுதுங்கள் என கவலையோடு இலக்கணப்படுத்தியிருக்கிறார். காலம்காலமாக எம்முன்னோர்களில் ஒரு சிலர் ஏமாந்திருக்கலாம் அல்லது ஏமாற்றப்பட்டிருக்கலாம். ஆனால் இனிமேல் நாங்களோ எங்களின் பின்னால் வரப்போகும் தலைமுறையினரோ ஏமாறவும் மாட்டோம் ஏமாற்றவும் விடமாட்டோம் என்பதின் அடையாளமே இந்த (வி)தைப்புரட்சியும் தமிழர் எழுச்சியும்.

வேடம் தரிப்பதை விட்டு விட்டு உரிமைகளை மீட்டெடுக்க தமிழக தலைவர்கள் உண்மையாக போராடியிருந்தால் அவனியாபுரத்திலிருந்து அமெரிக்கா வரை தமிழினம் நெருப்பென எழுந்து நின்று போராடியிருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. இனியாவது உணருங்கள். இல்லையேல் மாணவர்கள் தலையெடுத்து மானமிக்க தலைமையினை உருவாக்கும் சூழல் உருவாகிவிடும். இதுதான் தக்க சமயமென்று சில ஒப்பனையாளர்கள் உள்ளே நுழைவதையும் தமிழினம் இனம் கண்டு துரத்தியடிக்க வேண்டும்.

தமிழின வரலாற்றில் போராட்டக்காலத்திற்குள்ளாகவே அதன் வெற்றியை காண்பதும் ருசிப்பதும் இதுவே முதல்முறை என்பதினால் ஆளும் அதிகார வர்க்கங்களுக்கு பொறுக்கமுடியாமல்தான் இறுதி நிலையில் எங்கள் மீது ஏவப்பட்ட அந்த கொடூர வன்முறை. இயற்கையாகவும் செயற்கையாகவும் எத்தனையோ சிதைவுகளை இந்த இனம் தாங்கித்தாங்கிதான் விழ விழ எழுந்து நின்று போராடிக்கொண்டிருக்கிறது. எத்தனை அடக்குமுறை வந்தாலும் தன் தேவைக்கேற்ப அது மீண்டும் மீண்டும் எழுந்து நின்று போராடும். இனி யாராலும் தடுக்க முடியாது. எல்லோரையும் போல எங்களை சமமாக நடத்தினால் எங்களைவிடவும் அது உங்களுக்குத்தான் நல்லது என்பதை மீண்டும் ஒருமுறை அதிகாரவர்க்கங்களுக்கு அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எது எப்படி இருந்தாலும் இப்பொழுது நாம் நம் வெற்றியை கொண்டாட வேண்டும். கடந்த 14ந்தேதி முதல் போராட்டமாக நடந்து நான் இரத்தம் சிந்திய மதுரை அவனியாபுரத்தில் பிப்ரவரி 5ந்தேதியும் அதன்பின்பு 9, 10 தேதிகளில் அலங்காநல்லூர், பாலமேட்டிலும் நடக்கவிருக்கிற ஏறுதழுவுதல் விளையாட்டில் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக பங்கெடுப்போம். விண்ணை முட்டும் மகிழ்ச்சியோடு கூக்குரலிட்டு வெற்றியினை கொண்டாடுவோம். காலம் காலமாக வாடிவாசல் வழியாக காளைகள் சீறட்டும். இனி வரும் காலத்திற்காக நம் உரிமைகளை மீட்க தமிழ் காளையர்கள் சீறட்டும். வெல்வோம்.

பெருநம்பிக்கையோடு,
வ.கெளதமன்.

0 Responses to உரிமைகளை மீட்க தமிழ் காளையர்கள் சீறட்டும்-இயக்குநர் வ.கெளதமன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com