Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பிலான கொள்கை மற்றும் நீதிப்பொறிமுறைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில் ஆழ்ந்த அவதானத்தை செலுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வியாழக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமைச்சரவை பத்திரமாக கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டதும் ஊடகங்களில் பிரசுரமாகியிருந்ததுமான இந்த வரைபு பொறிமுறையின் கட்டளைகள் தொடர்பில் எம்மோடு ஆலோசிக்கப்படவில்லை.

இந்த வரைபு பொறிமுறையானது, சிவில் உரிமைகளை கட்டுப்படுத்துவதாகவும் அரச பாதுகாப்பு அமைப்புகள் மீதான நீதித்துறையின் கட்டுப்பாட்டினை குறைவடைய செய்வதாகவும், அத்தோடு கூட சாத்தியமான துஸ்பிரயோகத்திற்கும் துன்புறுத்தலுக்கும் வழிவகுப்பதாக அமைந்திருப்பதனையிட்டு நாம் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.

நாம் சந்தேகத்திற்கிடமின்றி, அடிப்படை உரிமைகளை உள்வாங்கியதும், சட்ட ஒழுங்கிற்கு இசைவானதும், சட்டத்திற்குட்பட்ட வகையில் பயங்கரவாதத்தை தடுப்பதும், தண்டனை வழங்குவதுமான ஒரு நீதிப்பொறிமுறைக்கு ஆதரவு வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளோம். இன்று வரை நாம் பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமாக செயற்பட்டுளோம். எனவே இந்த வரைபு தொடர்பில் அரசாங்கத்தின் திருப்பத்திணையிட்டு நாம் அமைதியற்ற ஒரு சூழ் நிலைக்கு உள்ளாகியுள்ளோம்.

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கான வரவிலக்கணமானது, சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்பிலான எல்லைகளுக்கு அப்பால் செல்லுவதை நாம் அவதானிப்பதோடு, மேலும் கடந்த காலங்களில் மாற்று கருத்து கொண்ட அசாத் சாலி போன்ற அரசியல்வாதிகளையும் மற்றும் திஸ்ஸநாயகம் போன்ற ஊடகவியலார்களையும் தண்டிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பேச்சு சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளுக்கு வலுச் சேர்க்கும் ஒன்றாக காணப்படுவதனையும் அவதானிக்கிறோம்.

இந்த வரைவிலக்கணங்களானது பாரியளவில் தெளிவற்றவையாகவும், பதில் இல்லாதவையாகவும் காணப்படுவதோடு, இலங்கையில் பரந்த வேற்றுமைக்கு ஆதரவான பரிந்துரையாடல் தொடர்பில் சிக்கலான தாக்கத்தினை கொண்டிருக்கும்.

மேலும் முன்மொழியப்பட்டுள்ள இந்த வரைபு பொறிமுறையானது, சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டாலும் நீதிபதி நிறைவேற்று அங்கத்தில் ஒரு பகுதியாக இருக்கும்படிக்கான அரசியல் யாப்பிற்கு எதிரான நீதித்துறையின் தனித்துவத்தினை இல்லாமல் செய்வதற்கு உதவியாக இருக்கின்றது.

சித்திரவதையினை தடுப்பதற்கான பாதுகாப்பான முக்கிய அம்சங்களில் ஒன்றான – வாக்குமூலங்களை இல்லாதொழித்தல் போன்றவை ஆரம்பத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அவை மாற்றப்பட்டுள்ளன. தற்போதுள்ள பொறிமுறையானது சில சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்களை சேர்த்துக்கொள்வதற்கு ஊக்கமளிப்பதாக இருக்கின்றது, ஆனால் இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெறும் பாரியளவிலான சித்திரவதைகளை கொண்டு நோக்குகின்றபோது சித்திரவதைகளை தடுப்பதற்கு அவை போதுமானதாக இல்லை. மேலும் இந்த சட்டமானது பயங்கரவாதத்தோடு எவ்வகையிலும் தொடர்பில்லாதவர்களின் உரிமைகளை பாரியளவில் மீறுவதற்கு அனுமதி அளிக்கின்றது.

அடிப்படை தேவையான சித்திரவதை மற்றும் வலிந்து காணாமற்போக செய்யப்படுதல் போன்றவற்றை தடுக்குமுகமாகவும், துஸ்பிரயோகத்தினை தடுத்து பயங்கரவாதத்திற்கான உண்மையான அச்சுறுத்தலை ஆக்கபூர்வமாக விசாரணை செய்யும் படியாகவும் இந்த வரைபினை அவசரமாக மீளாய்வு செய்வதனை மறுபரிசீலனை செய்யுமாறு நாம் அரசாங்கத்தினை வலியுறுத்த விரும்புகிறோம். முன்மொழியப்பட்டுள்ள இந்த வரைபானது நாட்டின் பாதுகாப்பையோ அல்லது இலங்கையர்களின் சுதந்திரத்தையோ உறுதி செய்யும் ஒன்றாக காணப்படவில்லை. மாறாக இது மக்கள் மீதான கேள்வி கேட்க முடியாத நிறைவேற்று அதிகாரத்திற்க்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவும், பன்முகத்தன்மை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்க்கு தடையாகவும், மற்றும் சித்திரவதை துன்புறுத்தல்கள் மேலும் இடம்பெற வழிசமைக்கும் ஒன்றாகவுமே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பயங்கரமான சித்திரவதைகளின் பின்னணியில், எமது மக்களின் உரிமைகளின் பாதுகாப்பானது, வர்த்தக நன்மைகள் என்ற பலிபீடத்தில் பலியிடப்படமுடியாது என்பதனை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.” என்றுள்ளது.

0 Responses to புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் த.தே.கூ விசனம் வெளியிட்டுள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com