Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“இந்தியாவில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது உண்மையான சரக்கு, சேவை வரி (GST) இல்லை” என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதரம்பரம் தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறைக்கு வந்துள்ள சரக்கு, சேவை வரிக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலவேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பல வேலை நிறுத்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சரக்கு, சேவை வரியைக் கொண்டு வர காங்கிரஸ் முயற்சி செய்தது. இதனை கடந்த 2010இல் நிறைவேற்ற முயற்சி செய்தோம். அப்போது, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்கள் முட்டுக்கட்டை போட்டன. தமிழக அரசும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. சரக்கு, சேவை வரியின் முன்னோடி காங்கிரஸ்தான். இதற்கு விரோதி போல் காங்கிரசை சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. சரக்கு, சேவை வரிக்கு முதல் எதிரி பா.ஜ.க, தான், ஆட்சிக்கு வந்த பின்னர் தங்களது நிலையை மாற்றி கொண்டனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது மூர்க்கதனமாக எதிர்த்தனர்.

உண்மையான சரக்கு, சேவை வரி நாட்டுக்கு நல்லது. அதனை காங்கிரஸ் ஆதரித்தது. தற்போது அமலுக்கு வந்தது சரக்கு, சேவை வரி அல்ல. அமல்படுத்தப்பட்ட சரக்கு, சேவை வரியில் குறை உள்ளதால், காங்கிரஸ் எதிர்க்கிறது. மற்ற நாடுகளை விட சரக்கு, சேவை வரி மிக அதிகம். வரி விதிப்பு 15 சதவீதம் அதிகம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். வரி விதிப்பு முறைகளில் நிறைய குறைகள் உள்ளன. வியாபாரிகளை வகைப்படுத்துவதில் குளறுபடி உள்ளது. எந்த அரசு எந்த வியாபாரியை கண்காணிக்கும் என தெரியவில்லை.

பல மாநிலங்களில் தொழில் செய்வோர், எண்ணற்ற வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இது கடினமாகவும் உள்ளது. மின்சாரம், பெட்ரோல், டீசல், எரிசாராயம் உள்ளிட்ட பல 45 சதவீத வர்த்தக பொருட்கள் சரக்கு, சேவை வரியின் கீழ் வரவில்லை. இது போல் மோசமான மசோதா எதுவும் இருக்க முடியாது.

போக்குவரத்து, மி்ன்சார கட்டணம், வீடு, லாரி வாடகை அதிகரித்துள்ளது. சந்தை பொருளாதாரத்தை நம்பிக்கையில்லாதவர்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டத்தில் பல மோசமான சரத்துகள் உள்ளன. இது உண்மையான, இலட்சிய சரக்கு, சேவை வரி இல்லை. இந்த வரியால் பணவீக்கம் ஏற்படும். கட்டுப்படுத்த என்ன செய்ய போகிறது என தெரியவில்லை. சிறு, குறு வியாபாரிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் தயாராகவில்லை. அவர்களுக்கு கால அவகாசம் அளிக்க மத்திய அரசு பிடிவாதமாக மறுக்கிறது.” என்றுள்ளார்.

0 Responses to தற்போது அமுல்படுத்தப்பட்டது உண்மையான சரக்கு, சேவை வரி (GST) இல்லை: ப.சிதம்பரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com