Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கட்சி நலனைப் பிரதானமாகக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்தும் நோக்கிலே எல்லை நிர்ணயத்தை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் கண்காணிப்பகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர்களாலே இம்மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சுட்டிக்காட்டின.

பெப்ரல், கஃபே, சி.எம், இ.வி மற்றும் தேர்தல் வன்முறைகளை மேற்பார்வை செய்யும் மத்திய நிறுவனம் ஆகியன நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஒன்றுகூடி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அறிவிக்கப்பட்டுள்ளதன்படி எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மனுதாரர்கள் கூறுவதுபோல் அவர்களது தேர்தல் தொகுதியில் முன்னெடுக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தில் பிரச்சினை இருக்குமாயின், அத்தொகுதிகளை தவிர்த்து ஏனைய உள்ளூராட்சி சபைகளில் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க தேர்தல் கண்காணிப்பகங்கள் தயாரென்றும் அவை தெரிவித்தன.

தேர்தலுக்கு தயாரில்லை என்பதற்காக போலிக் காரணங்களைக்கூறி, அதனை இழுத்தடிப்பது ஜனநாயகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் என்றும் அந்த அமைப்புக்கள் தெரிவித்தன.

தேர்தல் வன்முறைகளை மேற்பார்வை செய்யும் மத்திய நிலையத்தின் செயலாளர் மஞ்சுள கஜநாயக்க கருத்து தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு வருகிறது. கடந்த அரசாங்கத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான அமைச்சு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினாலேயே செயற்படுத்தப்பட்டு வந்தது. எனினும், தற்போது உள்ளூராட்சி மன்ற அமைச்சு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டு வருவதாக.” விமர்சனம் வெளியிட்டார்.

இதேவேளை, எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை வெளிவந்து ஒன்பது மாதங்கள் ஆகியுள்ள நிலையில் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யாதவர்கள் தேர்தல் நடத்தப்படுவது அறிவிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருப்பது சந்தேகத்தை தோற்றுவித்திருப்பதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

குழு அறிக்கைப் பற்றி நாட்டின் பல பாகங்களிலும் கருத்துக்கள் பெறப்பட்டன. மனுவை தாக்கல் செய்துள்ள அறுவரும் அப்போது தமக்கு நேர்ந்துள்ள அநீதியை பற்றி கூற முன்வராதது ஏன்? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

மனுவை தாக்கல் செய்துள்ளவர்களுள் ஒருவர் கண்டியைச் சேர்ந்தவர். இவர் தனக்கு இந்த வழக்குப் பற்றி எதுவுமே தெரியாதென கூறியுள்ளார். அதனடிப்படையில், எவரொருவரதும் உதவியின்றி வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆறு பேரை ஒன்றிணைத்து அதிக கட்டணம் அறவிடும் சட்டத்தரணி ஒருவருக்கூடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்க இயலாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"இதுபோன்ற அடுத்தடுத்து இடம்பெறும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கில் அனைத்தும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருப்பது நன்கு புலப்படுகிறது." என்றும் பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்தார்.

அத்துடன் வேட்பாளர் பட்டியலில் ஊழல் மோசடியாளர்கள் இடம்பெற்றால், அவர் எக்கட்சியைச் சேர்ந்தவராக இருப்பினும், அவர் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்த நாம் பின்வாங்க மாட்டோம் என்றும் கூறினார்.

சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கஃபே அமைப்பின் செயலாளர் கீர்த்தி தென்னகோன் இதன்போது தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தாங்கள் தயாரில்லை என்பதற்காக முதலில் பாராளுமன்றத்திலும் அடுத்ததாக உள்ளூராட்சி மன்ற அமைச்சிலும் அதற்கு அடுத்தபடியாக வர்த்தமானியை பிரசுரிப்பதிலுமாக இழுத்தடித்தனர். இப்போது தேர்தல் நடத்தப்படபோவதாக அறிவிக்கப்பட்டதும் எல்லை நிர்ணயத்துக்கெதிராக திட்டமிட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர். தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயகத்துக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to கட்சி நலனுக்காக உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த சுதந்திரக் கட்சி முயற்சி; தேர்தல் கண்காணிப்பகங்கள் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com