Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் நல்லுறவானது முஸ்லிம் உலகுக்கு முக்கிய அச்சுறுத்தலாக அமையும் என பாகிஸ்தான் செனட்டின் சேர்மேன் ராஸா றப்பானி தெரிவித்துள்ளார். அண்மையில் டெஹ்ரானில் நடைபெற்ற 13 ஆவது இஸ்லாமிய நாடுகளுக்கான அமர்வான PUIC இன் போதே இந்த எச்சரிக்கையை றப்பானி விடுத்ததாக புதன்கிழமை செனட் செயலாளரால் வெளியான பத்திரிகை வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.

றப்பானி மேலும் தெரிவிக்கையில் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் இந்த 3 நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இவ்வுறவை எதிர்கொள்ள முஸ்லிம் உலகம் இணைய வேண்டும் என்றும் ஏனெனில் இன்று இது பாகிஸ்தானையும் ஈரானையும் பாதிக்கலாம் ஆனால் நாளை இது வேறொரு முஸ்லிம் தேசத்துக்கும் ஆபத்தாக அமையலாம் என்றும் கூறியுள்ளார். இது தவிர ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததை பாகிஸ்தான் மிக வலிமையாகக் கண்டிக்கின்றது என்றும் இது சர்வதேச சட்டத்தையும் ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானங்களையும் முற்றிலும் மீறிய செயல் எனவும் றப்பானி தெரிவித்துள்ளார்.  மேலும் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் 15 வருடங்களாக முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் இதற்காக ஏற்கனவே பல உயிரிழப்புக்களைச் சந்தித்து விட்டதாகவும் கூறிய அவர் எனினும் வருங்காலத்திலும் மிக மும்முரமாக தீவிரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் ஈடுபடும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரான கவஜா முஹமட் அஸிஃப் அண்மையில் வெளியிட்ட கருத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவுடனான நல்லுறவை சமநிலையுடனும் உறுதியாகவும் பேண முயல்வதாகவும் அமெரிக்காவின் உதவி இன்றி பாகிஸ்தான் இயங்க முடியும் என்ற போதும் அமெரிக்காவுடனான நல்லிணக்கம் இன்றி இயங்குவது கடினமான காரியம் என்று தெரிவித்துள்ளார்.

இதுதவிர மில்லியன் கணக்கான ஆப்கான் அகதிகளை இனி மேலும் பாகிஸ்தானால் உள்வாங்கி சமாளிக்க இயலாது என்றும் இதற்கும் எல்லைப் பாதுகாப்புக்கும் ஆப்கானின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனவும் அஸிஃப் தெரிவித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தான் அரசு மற்றும் இராணுவம் தலிபான்களுக்கும் ஏனைய தீவிரவாத அமைப்புக்களுக்கும் மறைமுகமாக அளித்து வரும் ஆதரவை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில்  பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியுதவியில் 2 பில்லியன் டாலர் பெறுமதியான உதவியைத் தடை செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகியவை முஸ்லிம் உலகுக்கு முக்கிய அச்சுறுத்தல் : பாகிஸ்தான் செனட் சேர்மேன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com