Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பரிந்துரை செய்துள்ளதன் படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையைப் பறிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த அறிக்கையின் பரிந்துரைப்படி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் சட்டத்துக்கமைய வழக்கு தாக்கல் செய்யப்படுவதை சுதந்திரக் கட்சி எதிர்க்க மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே டிலான் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாரிய இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள அறிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு வழங்க வேண்டிய நிதி சம்பந்தமாக அவர் மீது சிவில் அல்லது குடியுரிமை வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென்றும் அவரது குடியுரிமை இரத்துச் செய்யப்பட வேண்டுமென்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிலான் பெரேரா தெரிவித்துள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வேண்டுமானால் சிவில் அல்லது குடியுரிமை சட்டத்தின்கீழ் வழக்குத் தாக்கல் செய்யலாம். இவ்விடயத்தில் சுதந்திரக் கட்சி ஒருபோதும் தலையீடு செய்யாது. எனினும், மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி எச்சந்தர்ப்பத்திலும் இடமளிக்காது.

குடியுரிமையை நீக்குவது சுதந்திரக் கட்சியின் கொள்கையல்ல. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் கொள்கையே தவிர சுதந்திரக் கட்சியின் கொள்கையல்ல.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையைப் பறிக்க சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது: டிலான் பெரேரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com