Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்நாடக முதலமைச்சராக எடியூராப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12ஆந் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர் ஆகியவற்றை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பா.ஜ.க. 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம் (எஸ்) 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இதனால் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. இதைதொடர்ந்து 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க விடக் கூடாது என முடிவு செய்த காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்தது. இதற்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியும் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சட்டசபை பா.ஜ.க. கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட எடியூரப்பா ஆளுநரை நேரில் சந்தித்து, பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதே போல் காங்கிரஸ் ஆதரவுடன் ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமியும் தனக்கு ஆட்சி அமைக்க அனுமதி வழங்குமாறு கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார்? என்று கர்நாடகம் மட்டுமின்றி நாடே எதிர்பார்த்து கொண்டிருந்தது. இந்த சூழலில், ஆட்சி அமைக்க வருமாறு பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார் என்றும், இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணி அளவில் பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் பதவி ஏற்பு விழா நடக்கிறது என்றும் பா.ஜ.க தலைவர்கள் நேற்று இரவு தெரிவித்தனர்.

மேலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க சார்பில் 15 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டதாகவும், அதற்கும் ஆளுநர் அனுமதி கொடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியானது. பெரும்பான்மையை நிரூபித்த பிறகு மந்திரிகள் பதவி ஏற்க உள்ளனர். இந்த தகவலை ஆளுநர் மாளிகை பின்னர் உறுதி செய்தது.

ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இரவிலேயே விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை இரவே விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நள்ளிரவு 1.45 மணிக்கு ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் காங்கிரஸ் மனுவின் விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற அறை எண் 6இல் விசாரணை நடைபெற்றது. .

ஆளுநர் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாஜக தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆகியோர் வாதாடினர். காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார். காங்கிரஸ் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாதிட்ட சிங்வியின் வாதத்தை முடித்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் தனது வாதத்தை முடித்துக்கொண்டார். அதன்பின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மற்றும் பா.ஜ.க. வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

இதையடுத்து, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பினருக்கும் நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பதவியேற்பை மாலை 4:30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் எனவும், ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலை அளிக்க எடியூரப்பாவிற்கு உத்தரவிட வேண்டும் எனவும் சிங்வி வேண்டுகோள் விடுத்தார். ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கே.கே.வேணுகோபால் மற்றும் முகுல் ரோஹத்கி வாதாடிய நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் ஆய்வில் கீழ்தான் வரும் என நீதிபதி பாப்டே கூறினார்.

சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் உச்ச நீதிமன்ற கோர்ட் நீதிபதி ஏ.கே.சிக்ரி தீர்ப்பை வாசித்தார். ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ முடியாது. எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15ஆம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் கடிதங்களின் நகல்களை நாளை காலை 10:30 மணிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்தகட்ட விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும், என நீதிபதி சிக்ரி தெரிவித்தார்.

0 Responses to கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com