Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“மாகாண சபையில் அமைச்சராக ஒருவரை நியமிப்பதோ அல்லது பதவி நீக்கம் செய்வதோ முதலமைச்சரின் உரிமையாகும். அதற்கு உத்தியோகபூர்வ வடிவம் கொடுப்பது மாத்திரமே ஆளுநருக்குரியது.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உத்தியோகபூர்வ வடிவம் கொடுக்கத் தவறியதால், முதலமைச்சரின் உரித்து எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாரத்துக்கொரு முறை கேள்வி- பதில் வடிவில் ஊடக அறிக்கையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வருகின்றார். இந்த வாரத்துக்கான கேள்வி- பதில் அறிக்கையில், அமைச்சர் பா.டெனீஸ்வரனின் பதவி விலக்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள உச்சநீதிமன்ற வழக்குக் குறித்து பதில் வழங்குகையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது, “டெனீஸ்வரனின் பதவி நீக்கத்தை ஆளுநர் ஏற்று புதிய அமைச்சர் ஒருவரை அவர் இடத்திற்கு நியமித்திருந்தாலும் பதவி நீக்கம் வர்த்தமானிக்கு பிரசுரிக்க அனுப்பப்படவில்லை. இதை ஆளுநரே அண்மையில் ஏற்றுள்ளார். அந்நீக்கம் பிரசுரிக்கப்பட்டிருந்தால் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் நீக்கப்பட்டுவிட்டார் என்பதை ஏற்றிருக்கும். உத்தியோகபூர்வமாக அறிவித்தல்கள் ஏதும் வெளிவராததால் அவர் தொடர்ந்து பதவியில் இருந்து வருகின்றார் என்று முடிவெடுத்து ஆளுநரே பதவி நீக்கம் செய்ய வல்லவர் என்று கூறி சட்டப்படி ஐந்து அமைச்சர்களே இருக்க வேண்டிய இடத்தில் தற்போது; சேர்த்து ஆறு அமைச்சர்கள் இருப்பதால் நியமன அதிகாரம், நீக்கும் அதிகாரம் கொண்டவர் (ஆளுநர்) உரிய நடவடிக்கை எடுத்து சட்டப்படி ஐந்து அமைச்சர்கள் அமைச்சர் அவையில் இடம்பெற ஆவன செய்ய வேண்டும் என்று தீர்மானம் அளித்தது.

தற்போதைய அமைச்சர்களான கலாநிதி சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், வைத்திய கலாநிதி குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் எனது சிபார்சின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்பட்டு நியமனங்கள் வர்த்தமானியிலும் முறையாகப் பிரசுரிக்கப்பட்டன. அவர்கள் நால்வரும் சட்டப்படி நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்கள். தற்போது டெனீஸ்வரனும் ஒரு அமைச்சரே என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சர் ஒருவரை பதவி விலக்கைச் செய்யக் கூடியவர் ஆளுநரே என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர் ஆளுநரே அன்றி முதலமைச்சர் அல்ல. ஆறை ஐந்தாக்குவது ஆளுநரையே சாரும். என்னை எவரும் குறை கூற முடியாது. நடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் ஆளுநர்.

டெனீஸ்வரன் அமைச்சராகக் கடமையாற்றுவதற்கு தற்போதிருக்கும் அமைச்சர்கள் நால்வரில் ஒருவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி அதனை ஆளுநர் ஒருவரே செய்யலாம். மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி அவரே பதவி நீங்கம் செய்ய அதிகாரம் உடையவர். முதலமைச்சர் அல்ல. மேற்படி தீர்மானத்தால் என்னுடைய கைகள் மாத்திரமன்றி ஒன்பது மாகாண முதலமைச்சர்களின் கைகளும் கட்டப்பட்டுள்ளன.” என்றுள்ளார்.

0 Responses to மாகாண சபையில் அமைச்சர்களை நியமிப்பதும், நீக்குவதும் முதலமைச்சரின் உரிமையாகும்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com