Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினரிடம் அளித்த புகார் மீது விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரி தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினரான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அவர் தனது மனுவில், "ஓ. பன்னீர்செல்வம் மாநில அமைச்சர் என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக சொத்துக்களை குவித்து தனது மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், சுப்புராஜ் என்ற தனது நண்பர் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் பேரில் முதலீடு செய்துள்ளார்.

தனது மகன்களான ரவீந்திரநாத் குமார், ஜெயப்ரதீப், மகள் கவிதாபானு ஆகியோர் இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, துருக்கி, இந்தோனீஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளனர்.

25 வயது கூட நிரம்பாத அவரது மகன் 3 நிறுவனங்களில் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

அவரது மகன்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களில் மற்ற இயக்குநர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட மூன்று மடங்கு சம்பளம் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

எஸ்.ஆர்.எஸ். நிறுவனம் என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வரும் சேகர் ரெட்டி மூலம் சட்ட விரோதமாக பலன் அடைந்த நபர்களின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

தனது மகன்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கு கூடுதல் மதிப்பீட்டு வரியில் சலுகை அளிக்க ஏதுவாக, அவர் முதலமைச்சராக இருந்த 2015ஆம் ஆண்டு ஓர் அரசாணை வெளியிடப்பட்டு அதன் மூலம் அந்த நிறுவனம் சட்ட விரோதமாக பலன் அடைந்து உள்ளது.

இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் கடந்த மார்ச் மாதம் அனைத்து விபரங்களும் அடங்கிய புகார் கொடுக்கப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரியிருந்தோம்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநருக்கு உத்திரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஜூலை 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர், ஆர்.எஸ்.பாரதியின் புகார் மனு தலைமைச்செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் கடந்த மூன்று மாதங்களாக ஏன் விசாரணை நடத்தவில்லை என்றும், சேகர் ரெட்டியின் டைரியில் ஓ. பன்னீர்செல்வத்தின் பெயரும் உள்ளதாக ஆர்.எஸ். பாரதி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதால் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று - ஜூலை 25- நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துணை முதல்வர் மீதான புகார் குறித்து கடந்த 18ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு பதிவுசெய்து, ஆரம்ப கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதி, இந்த விசாரணையை விரைவாக நடத்தவேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், "ஓ. பன்னீர்செல்வம் மட்டுமல்ல, விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் வழக்குகள் வரும். இதற்காக நீதிமன்றத்திற்குச் செல்லவிருக்கிறோம். இவர்கள் ஆட்சியைவிட்டு அப்புறப்படுத்தப்படுவதோடு, சிறைக்கும் செல்வார்கள்" என்று கூறியிருக்கிறார்.

தற்போது தமிழகத்தின் துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் இதுவரை மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவிவகித்துள்ளார்.

முதல் முறையாக ஜெயலலிதா தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது 29.09.2001 முதல் 1.03.2002 வரையும் அதற்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது 28.09.2014 முதல் 22.05.2015வரையிலும் பிறகு, ஜெயலலிதா மரணமடைந்தவுடன் 6.12.2016 முதல் 05.02.2017 வரையிலும் தமிழக முதலமைச்சராக அவர் பதவி வகித்தார்.

இதற்கிடையில், வருவாய்த்துறை அமைச்சர், பொதுப் பணித் துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகிய பொறுப்புகளையும் வகித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

பிபிசி

0 Responses to பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com