Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்நாட்டு பங்களிப்பு இல்லாத முற்றுமுழுதான சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற்று முடிந்துள்ளது. அந்த விசாரணை இடம்பெற்று 247 பக்கம் கொண்ட அறிக்கையும் உள்ளது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் தமிழர் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பேசப்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை என்பது என்ன, அதன் பங்களிப்பு, அதனால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

2004ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் பேரவை என்ற உருவாக்கம் ஏற்பட்டது. அதேபோல் 2004ஆம் ஆண்டுக்கு பின்னர் எமது போர் முடிவு ஏற்பட்ட காரணத்தினால் தான் மனித உரிமை பேரவையில் சில விவகாரங்கள் ஆராயக் கூடியதாக அமைந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தீர்மானமே மனித உரிமைகள் பேரவையும் தீர்மானமாக அமையும். இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் தமது நலன்சார்ந்தே செயற்படுகின்றது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் அங்கே மனித உரிமை மீறல்கள் இருக்கின்றன. மனித உரிமைகளை மீறாத நாடுகள் எதுவும் இல்லை, அனைத்து நாடுகளும் மனித உரிமைகளை மீறிய வரலாறுகள் உள்ளன. அவ்வாறான நாடுகள் தான் மனித உரிமைகள் குறித்த தீர்மானங்களையும் எடுக்கின்றன. நாளை எமது பக்கம் திரும்பிவிடக்கூடாது என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நாடும் மனித உரிமை விவகாரங்களை கையாள்கின்றன. இவ்வாறான ஒரு நிலையில் தான் எமது பொறிமுறையை நாம் கையில் எடுத்தோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

தங்களது நாடுகளில் மனித உரிமை மீறல்களை செய்த அரசாங்கங்களை கொண்ட மனித உரிமை பேரவையில் தான் எங்களது மனித உரிமை மீறலுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முன்வந்தோம். ஏனெனில் எமக்கு வேறு பொறிமுறை இல்லை. எனினும் இந்த நாடுகள் சர்வதேச அரங்கில் தம்மை நிருபிக்க கையாளும் நடுநிலைத் தன்மையை நாம் பயன்படுத்தி எமது தீர்வுகளை நோக்கி பயணித்துள்ளோம். மிகவும் அதிகமாக நாம் அதனை பயன்படுத்தியுள்ளோம். இதற்கு மேல் எம்மால் எந்த நலன்களையும் பெற்றுக்கொள்ள முடியாது.

எதிர்வரும் 2019 மார்ச் மாதத்தில் இலங்கை தொடர்பிலான 34/1 தீர்மானத்தின் செயற்பாட்டு காலம் நிறைவடையப் போகின்றது. அந்த தீர்மானம் நிறைவடையும் போது அடுத்து என்ன என்ற கேள்வியும் எழும்பப் போகின்றது. மார்ச் மாதத்தை நெருங்கும் நேரத்தில் மீண்டும் கால அவகாசம் கோரப் போகிறீர்களா என்ற கேள்விகள் எழுப்பப்படும். அதற்கான உண்மைகளை இப்போதே தெரிவிக்க வேண்டும்.

இதில் கால அவகாசம் என்பது தவறான சொற்பிரயோகம். 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும். 2014ஆம் ஆண்டு தீர்மானம் இலங்கை விவகாரத்தில் ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானமானம் நிறைவேற்றப்பட்டது. அதனை இலங்கை அரசாங்கம் எதிர்த்தது, ஆனாலும் பிரேரணை நிறைவேற்றப்பட்டு சர்வதேச விசாரணை ஒன்று நடந்து முடிந்து விட்டது. உள்நாட்டு பங்களிப்பு இல்லாத முற்றுமுழுதான சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற்று முடிந்துள்ளது. அந்த விசாரணை இடம்பெற்று 247 பக்கம் கொண்ட அறிக்கையும் உள்ளது.

அந்த அறிக்கை 2015ஆம் ஆண்டு வெளிவர இருந்த நிலையில் புதிய அரசாங்கம் அந்த அறிக்கையை வெளியிடுவதை தாமதிக்கக்கோரி அந்த அறிக்கை தடுக்கப்பட்டது. பின்னர் 2015 செப்டெம்பர் ஜெனீவா கூட்டத்தொடரில் அது வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை வெளியிடப்பட்ட போது இனப்படுகொலை இடம்பெற்றதா என்ற கேள்வியை கேட்டனர், எனினும் இனப்படுகொலை விவகாரம் உள்ளடக்கப்படவில்லை எனவும் அதற்கான சான்றுகள் இப்போது இல்லை எனவும் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்தார். உண்மையில் அப்போது இது தவறான கேள்வியாகும். தவறான கேள்விகளை கேட்டு எமக்கு வேண்டாத பதிலை உருவாக்கிக்கொள்ள கூடாது. சர்வதேச குற்றங்களில் மிகவும் மோசமான குற்றமாக இனப்படுகொலை உள்ளது. துன்புறுத்தல் கூட அதன் ஒரு வடிவம். இதில் இனப்படுகொலை என்ற விசாரணையை நடத்த அது குறித்து நிரூபணங்கள் இருக்க வேண்டும். இலகுவாக நிரூபிக்கக்கூடிய காரணிகளை அவர்களை அறிக்கையில் உள்ளிட்டிருந்தனர். இதனை விளங்கிக்கொள்ள வேண்டும்.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் இடம்பெற்ற பிரேரணை என்பது முக்கியமானது. 30/1 தீர்மானம் இலங்கையின் தீர்மானம். இரண்டு தடவை இணை அனுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதியாகும். இதனை இலங்கை அரசாங்கம் தவிர்க்க முடியாது. அதேபோல் 2017ஆம் ஆண்டு மார்ச் கூட்டத்தில் கால அவகாசம் கொடுத்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அந்த பிரேரணையை மேற்பார்வை செய்ய 18 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. எழுத்து மூலமாக அறிக்கை கொடுக்க வேண்டும் என்பதற்கான கால அவகாசமே அதுவாகும். அதன் பிறகு சர்வதேச மேற்பார்வை இருக்காது. இது மேற்பார்வை காலமே தவிர விசாரணை கால அவகாசம் அல்ல. சர்வதேச மேற்பார்வை இன்னும் நெருக்கப்பட வேண்டும். எமது விடயங்கள் நிறைவேற்றப்படும் வரையில் சர்வதேச மேற்பார்வை இருக்க வேண்டும். சர்வதேச அழுத்தம் எமது விடயத்தில் இருக்க வேண்டும் என்றால் அதற்கான சர்வதேச மேற்பார்வை காலம் நீடிக்கப்பட வேண்டும்.

இரண்டு ஆண்டுகால காலஅவகாச எல்லை முடிவடையப்போகின்றது, ஆகவே இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். சர்வதேச மேற்பார்வை அதன் மூலமாக நீடிக்கப்பட வேண்டும். எமது கருமங்கள் முழுமையாக முடிவடையும் வரையில் சர்வதேச மேற்பார்வை கால எல்லை நீடிப்பு அவசியம். இந்த பொறிமுறை அழுத்தங்களை மட்டுமே கொடுக்க முடியும், கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது.

எமது தரப்பினர் இல்லாத ஒன்றை இருப்பதாக கனவு கண்டுகொண்டு இந்த பொறிமுறையை வேண்டாம் என கூறும் குரல் எழுகின்றது. நாம் அனைத்தையும் நிராகரித்தால் எமக்குள்ள மாற்று வழிமுறை என்ன? ஆயுதம் ஏந்துவதா எமக்குள்ள மாற்று வழிமுறை? இந்தக் கேள்வியை கேட்டால் எம்மீது முரண்படும் நிலைமை உருவாகின்றது. வழிமுறையை நிராகரிக்கும் நபர்கள் மாற்று வழிமுறையை முன்வைக்க வேண்டும்.

அடுத்த அமர்வுகளில் எமக்கான வாய்ப்புகள் குறைவடையலாம், அமெரிக்காவின் வாக்குகள் இல்லாத மனித உரிமை பேரவையில் ஒரு தீர்மானத்தை அழுத்தமாக பெற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. ஆகவே மாற்று வழிமுறைகளை நாம் ஆராய்ந்து வருகின்றோம். எதன் மூலமாக அழுத்தங்களை பிரயோகிக்கலாம் என ஆராய வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to ஜெனீவாவில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சுமந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com