Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லெப்.சங்கரின் பின்னால் பலவடிவங்களில் மாவீரர்களின் தியாகப் பயணங்கள் பதிவாகி வருகின்றன. இலட்சியத்தில் மாற்றம்பெறுகின்ற எமது விடுதலைப்போரின் ஒவ்வொரு மாற்றங்களிலும் வித்தியாசமான தியாக வடிவங்கள் பிரசவித்திருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு யாழ்குடா வடமராட்சியை முற்றுமுழுதாய் ஆக்கிரமித்துவிடவேண்டுமென்ற துடிப்புடன் படைநடவடிக்கையை மூர்க்கமாக முன்னெடுத்த சிங்களப் படைகளுக்கு கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய படைமுகாமில் கொடுத்த கரும்புலித் தாக்குதல் அன்றைய கால சூழ்நிலையே மாற்றிப்போடும் அளவிற்கு வீரப்பதிவு ஒன்றை எமது போராட்டத்திற்கு தந்திருந்தது.

 அந்த ஒரு மாவீரனின் உயிர்க்கொடை சிங்கள தேசத்தின் அத்தனை வீரிய இராணுவ மாமேதைகளையும் ஒரே நொடியில் அதலாபாதாளத்தில் வீழ்த்தியது. அந்த மாற்றத்தால் அப்போதைய ஜெ.ஆர்.அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு செல்லவேண்டி கட்டாயம் வந்தது என்பது வரலாறு.

 அதன்பின் இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஒன்று உருவாக அமைதிப்படை என்ற பேரில் இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் வந்திறங்கியது. தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு வழிகோலாத அந்த ஒப்பந்தம்குறித்தும், இங்கு வந்திறங்கிய அமைதிப்படையின் சுயவடிவம் குறித்தும் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியாகவேண்டிய தருணமது. அமைதிப்பேச்சுக்கள் உடன்பாடு நிர்ப்பந்தங்களென அமைந்த அந்த சூழலில் பொதிந்துகிடக்கும் பின்னிலை அபாயங்கள் தமிழ்மக்களுக்கு சாதகமற்றதாகவே இருந்தது.

 இந்நிலையில் இந்திய அரசின் உண்மைத்தோற்றத்தையும் தமிழீழ பகுதி எங்கும் ஆயுதங்களுகடன் குவிந்து கிடக்கும் இராணுவப் பிரசன்னத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டும் தருணத்திற்காய் எமது ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டம் அன்று அகிம்சைப் போராட்டம் ஒன்றை நடத்தவேண்டியதாயிற்று. நல்லூர் கந்தன் முன்றலில் லெப்.கேணல் திலீபன் தமிழ்மக்களின் பிரச்சினைத் தீர்விற்கான ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாநோன்பை தொடக்கினான்.

இலட்சக்கணக்கில் மக்கள் கண்ணீருடன் திரண்டிருந்த 12 நாட்கள் தொடர்ந்த அந்த அகிம்சைப் போருக்கு இந்தியா இறுதிவரை செவிசாய்க்கவில்லை. அந்த மக்கள் முன்னிலையிலேயே அந்த அகிம்சை நெருப்பு அணைந்துபோனது. ஆனால் தமிழர் மனங்களில் இலட்சிய நெருப்பு வேகமெடுத்தது. அந்தத் தியாக மரணம் எமது விடுதலைப்போராட்ட வீரர்கள், வல்லரசு ஒன்றுடன் பொருதும் மனஉறுதியை பெற்றுத்தந்தது.

அச்சம்பவத்திற்குப் பின்னே இடம்பெற்ற இந்திய இராணுவத்துடனான மோதல் எமது விடுதலைப்போராட்டத்தின் முதல் பெண் மாவீரரை இந்த மண்ணில் விதையாக்கியது.

தொடரும் ...

0 Responses to உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் வாரம் - மூன்றாம் நாள் இன்று

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com