Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக தென்கொரியாவின் தலைநகர் சியோலுக்கான அவரது விஜயத்தை முன்னிட்டு வடகொரியா தனது 4 ஆவது அணுப் பரிசோதனையை நிகழ்த்தப் போவதாக பிரகடனம் செய்திருந்தது.

இதனை வன்மையாகக் கண்டித்துள்ள ஒபாமா வடகொரியா இந் நடவடிக்கையில் இறங்கினால் அதன் மீதான பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கலாம் என சனிக்கிழமை எச்சரித்துள்ளார்.

மேலும் தனது எச்சரிப்பில் முன் எதிர்வு கூற முடியாத வடகொரியவின் அணுப்பரிசோதனை அச்சுறுத்தல்கள் மற்றும் கிழக்காசியப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம் என்பவற்றுக்கு எதிராக தனது நட்பு நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்கா தனது இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒபாமா முன்னதாகத் தனது ஜப்பான் பயணத்தின் போது கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குரிய சென்காக்கு தீவுகள் தொடர்பான பிரச்சினையில் ஜப்பானை ஆதரித்திருந்தார். இதன் விளைவாக இரு சீனக் கடலோரப் பாதுகாப்பு கப்பல்கள் சர்ச்சைக்குரிய கிழக்கு சீனக் கடல் பகுதியில் சனிக்கிழமை ரோந்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடகொரியா தனது நாட்டில் நிலக்கீழ் அணுகுண்டு பரிசோதனையை மேற்கொள்வதற்கான ஆய்த்தப் பணிகளைத் தொடங்கியிருப்பதாக வர்த்தக செய்மதி மூலம் அதனைக் கண்காணிக்கும் 38 நோர்த் என்ற இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளதும் முக்கியமானது ஆகும். இந்நிலையில் அதிபர் ஒபாமா தனது ஊடகப் பேட்டியில், 'யாராக இருந்தாலும் அச்சுறுத்தல்களை விடலாம்! யாராக இருப்பினும் தமது இராணுவத்தை நகர்த்தலாம்! மேலும் ஏவுகணையை காண்பிக்க முடியும்! இந்த நடவடிக்கை எதுவும் குறித்த தேசத்தை வல்லமை வாய்ந்தது என நிரூபித்து விடாது! உண்மையான பலம் எதில் அடங்கியுள்ளது எனில் வெளிப்படையான ஜனநாயகம் மற்றும் திறந்த சந்தைகள் மற்றும் தமது தேசத்தைக் குறித்து சுதந்திரமாக எக்கருத்தையும் கூறக் கூடிய சமூகக் கட்டமைப்பு என்பவற்றிலேயே ஆகும்! என்றுள்ளார்.

ஒபாமா தனது தென்கொரியப் பயணத்தின் போது அமெரிக்க தென்கொரியா இடையேய ஹையுன்டி, சாம்சுங், கொரியன் ஏர், மைக்ரோசாஃப்ட், போயிங் மற்றும் கோல்ட்மான் சாஸ் உட்பட பல முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வர்த்தக பொருளாதார உறவை வலுப்படுத்தும் செயலிலும் ஈடுபட்டார். மேலும் சமீபத்தில் 300 மாணவர்களைப் பலி கொண்ட தென்கொரியப் படகு விபத்தில் பலியான மற்றும் காணாமல் போன உயிர்களுக்கு சியோலில் அஞ்சலி செலுத்தவும் அவர் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வடகொரியாவின் 4 ஆவது அணுப் பரிசோதனையை எச்சரிக்கும் ஒபாமா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com