Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியாவிற்கு மீண்டும் பிரதமராக பதவியேற்கவிருக்கும் டேவிட் கமரூன் அவர்களுக்கு அவசரமாக இக்கடிதத்தை வரைகின்றோம்.

உயர் பீடங்களில் இருப்பவர்களை சந்திக்க முடியாதாயினும் கடிதம் எழுதுவதன் மூலம் நமது கருத்துக்களை அவர்களுக்கு தெரியப்படுத்தலாம் என்பது நமது முடிவு. ஆகையால் தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடன் உங்களுக்கு ஈழத்தமிழர்கள் எழுதும் முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்கும்.

டேவிட் கமரூன் அவர்களுக்கு அன்பு வணக்கம்.

ஈழத்தில் தமிழினம் படும் வேதனைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இப்பொழுது எங்கள் வேதனைகளை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு பிரித்தானிய தேசத்திற்கு மறுபடியும் பிரதமர் ஆகும் உங்களுக்கு எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் சேவை பிரித்தானியா வாழ் மக்களுக்கு தேவை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதனால்தான் உங்களை மீண்டும் பிரதமர் ஆக்கியுள்ளார்கள் பிரித்தானிய பிரஜைகள்.

எனில் உங்களிடம் இருக்கும் ஆட்சி சிறப்புப்பற்றி மக்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதே அதன் பொருள். இவ்வாறான மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான நீங்கள் மீண்டும் பிரதமர் பதவியில் அமருவதை பார்த்து ஈழத்தமிழினம் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றது.

நமது மதிப்பிற்குரிய டேவிட் கமரூன் அவர்களே,

ஈழத்தமிழர்கள் உலக நாடுகளுக்கும், ஐக்கிய சபைக்கும் கடிதங்களும் மனுக்களும் எழுதி எந்த பலனுமின்றி மூலையில் குந்தியிருந்து அழுதுகொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

எங்களுக்கு கடிதம் எழுதுவதும் மனுக்கள் கொடுப்பதும் கால்கடுக்க வெயிலில் ஆர்ப்பாட்டம் செய்வதும் ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் எந்த கடிதத்திற்கும், எந்த மனுவிற்கும், எந்தவொரு ஆர்ப்பாட்டத்திற்கும் இதுவரை தீர்வு கிடைத்ததாக வரலாறில்லை.

இவ்வாறு இருக்கையில் இன்று பதவி ஏற்கும் உங்களுக்கும் ஒரு கடிதத்தை வரைந்து பார்ப்போம் என்னும் நோக்கிலேயே இக்கடிதம் உடன் வரையப்படுகின்றது.

ஐயா!  இலங்கை என்னும் நாடு இன்று இவ்வளவு அழிவுகளுக்கும் இரத்த பெருக்கிற்கும் உங்கள் மூதாதையர்கள் செய்த வேலையின் விளைவு தான் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

1815 ஆம் ஆண்டு இலங்கையின் கண்டியை கைப்பற்றிய உடன் உங்கள் மூதாதையர்களாகிய அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்கள் சுயநல மற்றும் இலகுவான ஆட்சிக்கும் வருமானத்திற்காகவும், இரண்டு தேசமாய் கிடந்த இலங்கை தேசத்தை 1833ஆம் ஆண்டு கோல்புரூக் கமரூன் சீர்திருத்த யாப்பின் அறிமுகத்தின் மூலம் நாட்டை ஒரு நிர்வாக அலகின் கீழ் கொண்டுவந்தார்கள்.

இலங்கையை காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர்கள் அதனை பாரம்பரிய முறைப்படி ஆட்சி செய்திருப்பார்களாயின் நிலமை இன்று இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்க மாட்டா.

ஆனால் எப்பொழுதுமே தங்களின் சித்தாந்தத்தின் மூலம் ஆட்சி செய்தவர்கள் எங்கள் இனத்தின் பூர்வீக தேசங்களை சிங்கள தேசத்தோடு இணைத்து எமது கௌரவத்திற்கும் தமிழர் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

ஆக 1833ம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாப்பே தமிழர்களின் அரசாட்சிக்கு வைக்கப்பட்ட ஆப்பாக மாறியது.

அதுவே 1948 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறும் போது ஆட்சி அதிகார முறைகளை தமிழர் சிங்களவர் என்கின்ற ஆட்சியின் பழைய அலகுகளை கொடுப்பது தானே முறை.

ஆனால் அதையும் பிரித்தானிய அரசாங்கம் செய்யவில்லை. ஒட்டுமொத்த இலங்கை ஆட்சி அதிகாரங்களையும் சிங்களப்பிரதிநிதிகளிடம் கொடுத்துவிட்டு சென்றார்கள். அதனை நமது தமிழ்த் தலைமைகளும் பெருந்தன்மையோடு ஏற்றது.

1948ம் ஆண்டு காலகட்டங்களில் இலங்கையை விட்டு பிரிந்து சென்ற நீங்கள் அதாவது உங்கள் மூதாதையர்கள் இலங்கை தமிழ், சிங்கள இளைஞர்களிடையே தீராத பகையை மூட்டிவிட்டு சென்றீர்கள்.

இதனால் இந்த நாடு இன்றுவரை இரத்த கண்ணீர் வடித்துக்கொண்டு நிம்மதிப் பெருமூச்சுக்காய் காத்திருக்கின்றது.

பிரித்தானியர்களின் ஆட்சியின் போது நமது தமிழர் தரப்பு நிறைந்த கல்வி அறிவைப்பெற்றது என்பதை நாம் எப்பொழுதுமே மறக்கவோ, மறைக்கவோ மாட்டோம்.

அன்றைய கால கட்டங்களில் உயர்ந்த பட்டங்களாகிய சேர் பட்டங்களையும் பெற்றார்கள், உயர் பதவிகளையும் தமிழர் தரப்பு பெற்றது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஆனால் அவைகள் யாவும் ஒரு உயிரைக் காக்க கூட பயன்படவில்லை என்பது தான் வேதனை. மாறாக சிறைப்பிடிக்கப்பட்ட சிங்களவர்களை மீட்கவே பயன்பட்டது என்பது உண்மையாயிற்று.

இவற்றை ஏன் உங்களுக்கு மடலில் வரைகின்றோம் எனில் வரலாற்றில் பிரித்தானிய அரசாங்கம் விட்ட தவறினை உங்களால் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

வன்னியின் இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரம் அடைந்த வேளை சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமும், செஞ்சிலுவைச் சங்கத்திடமும் வன்னித் தமிழினம் நடு வீதியில் போய் படுத்திருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

எங்களை அநாதரவாய் விட்டுச்செல்லாதீர்கள் துணையாய் இருங்கள் என்று கதறியது தமிழினம். ஆனால் மக்களுக்கு சேவையாற்ற வந்தவர்கள் அந்தோ கதியாக விட்டுச்சென்றார்கள்.

சாட்சியமற்ற போரை நடத்த அரசாங்கத்திற்கு வழியமைத்துக்கொடுத்து விட்டு சென்றார்கள் அவர்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்கள் தெருத் தெருவாய் அலைந்து திரிகின்றார்கள் காணாமல் போனவர்களைத்தேடியும், கடத்தப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும். ஆனால் எதற்குமே பதில் கிட்டவில்லை.

இந்நிலையிலேயே நீங்கள் பொதுநலவாய மாநாட்டிற்கு இலங்கை வந்த பொழுது அகதி முகாம்களுக்குள் சென்று நேரடியாக எங்கள் துன்பங்களைப்பார்த்த பொழுது உலகின் தலைவர் ஒருவர் நம்மைப்பார்க்க வந்திருக்கிறாரே என்று உங்களை நினைத்து பெருமை கொண்டது ஈழத்தமிழினம்.

அண்டை நாட்டுத்தலைவர்கள் உலங்கு வானுர்தியிலும், கொழும்பு ஹோட்டல்களிலும் தங்கள் சந்திப்புக்களை முடித்துவிட்டு இலங்கையில் தமிழர்கள் நலமாக வாழ்வதாக ஊடகங்களுக்கு கருத்துரைத்துவிட்டு சென்ற காலகட்டத்தில் உங்களின் இந்த நடவடிக்கைகள் எங்களை நெகிழவே வைத்தது.

ஐயா! தமிழன் உலகின் பல மூலையிலும் அகதியாக வாழ்கின்றான். அந்த நாடுகளில் அவர்கள் வாழ்வதற்கு பிரித்தானிய நாடும் மூல காரணம். அதாவது இலங்கையில் யுத்தம் ஏற்பட பிரித்தானியா காரணமெனில் அந்த யுத்தத்தால் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலைக்கும் நீங்கள் தானே காரணம்.

நாட்டை இணைத்து அதை சிங்களவன் கையில் கொடுத்து நாட்டில் யுத்தம் ஏற்பட்டு அந்த யுத்தத்தால் நாட்டை விட்டு நிம்மதியான வாழ்வைத் தேடி புலம் பெயர்ந்தனர் தமிழர்கள்.

அந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் கணிசமான வாக்குகள் கூட இன்று உங்களுக்கு கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியாயின் உங்கள் நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பூர்வபந்த தொடர்புண்டா என்று எண்ணத்தோன்றுகின்றது.

அமைக்கப்போகும் உங்கள் ஆட்சியில் ஈழத்தமிழினத்தின் துயர்துடைக்க நமக்கு கரம் கொடுங்கள். அதுவே உங்கள் மூதாதையர்கள் ஈழத்தமிழினத்திற்கு செய்த பாவச்செயலுக்கான விமோசனமாக அமையும்.

இதுவே தமிழினம் உங்களிடம் கேட்கும் ஒரு உதவியாகும். இதை உங்கள் தலைமையிலான அரசாங்கம் செய்து கொடுக்கும் என்று தமிழினம் நம்புகின்றது. அந்த நம்பிக்கையில் நீங்களும் மண்ணை அள்ளிப்போட்டுவிடாதீர்கள்.

இப்படிக்கு உங்கள் நாட்டால் அழிவுகளை சந்தித்து நடுத்தெருவிற்கு வந்த உலகின் பாவப்பட்ட இனம்? 

நன்றி

- எஸ்.பி.தாஸ் -

0 Responses to டேவிட் கமரூனுக்கு ஈழத்தமிழினம் எழுதும் அவசர மடல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com