Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ­ ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து பிரதமர் வேட்பாளர் பதவியில் தன்னை நிறுத்துமாறு கேட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் மஹிந்தவின் கோரிக்கையை மைத்திரி அடியோடு நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை மைத்திரி-மஹிந்த சந்திப்பில் பேசப்பட்ட ஏனைய விடயங்கள் என்ன? என்பது இன்னமும் வெளிவரவில்லை.

கால ஓட்டத்தில் அவை வெளிவரக் கூடும். எதுவாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மஹிந்த ராஜபக்­ஷ  சந்தித்ததற்குள் இருக்கக்கூடிய உள் நோக்கங்களை மேலோட்டமாகப் பார்த்துவிட முடியாது.

மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதன் மூலம் பின்வரும் நோக்கங்களை அடையமுடியும் என மஹிந்த எதிர்பார்த்திருக்கலாம். இதில் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து ஒரு உறவு நிலையை ஏற்படுத்துவதன் மூலம் தன்னை எதிர்த்து மைத்திரியோடு சேர்ந்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவது. அதாவது சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் இச்சந்திப்பால் கடுப்படைவர். இதன் ஊடாக மைத்திரியுடனான அவர்களின் உறவை பாதிப்படையச் செய்தல்.

மைத்திரியுடனான சந்திப்பை ஏற்படுத்துவதன் மூலம் தனக்கு எதிராக வரக்கூடிய சர்வதேச போர்க்குற்ற விசாரணையை மழுங்கடித்தல். ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து என்னை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும்படி கேட்டேன். ஆனால் அவர் முடியாது என்று விட்டார். ஆகையால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் புறம்பாக ஒரு கட்சியை ஆரம்பித்து அதில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த என்னை பிரதம வேட்பாளராக்க முடியவில்லை என்றால், என்னருமை சிங்கள மக்கள்தான் இதற்குப் பதில் கூறவேண்டும் என்றொரு பிரசாரத்தை ஏற்படுத்தல்.

தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் எழக் கூடிய ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரியின் உதவியைப் பெறுதல். அதாவது பிரதம வேட்பாளர் பதவியில் போட்டியிடுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் தர முடியாது என்றால், ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்தாவது எங்களை விடுவிக்கலாம் அல்லவா? என்றொரு மாற்றுக் கோரிக்கையை முன்வைத்தல்.

என்றவாறாக பல்வேறு இலக்குகளை மையப்படுத்தி மைத்திரிபால சிறிசேனவை மஹிந்த ராஜபக்ஷ­ சந்தித்தார் என்று சொல்ல முடியும். எது எப்படியாயினும் சோதிடர் சுமணதாச அபே குணவர்த்தனவிடம் கேட்டு தேர்தல் நடத்திய மஹிந்த, இப்போது மைத்திரியிடம் சென்று எனக்கு பிரதம வேட்பாளர் பதவி தாருங்கள் என்று கேட்பது நகைப்புக்குரியதாகும்.

இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்து விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இறுமாப்பில், உணர்ச்சி மேலீட்டால் விமான நிலையத்தின் புற்றரையில் விழுந்து இலங்கை மண்ணை வணங்கிய மகாராஜா மஹிந்த இன்று மைத்திரியை வணங்கி பிரதம வேட்பாளர் பதவி கேட்பது; காலம் கறுத்தாருக்கு மட்டுமல்ல மஹிந்தவுக்கும் பிழைக்கும் என்பதையே சொல்லி நிற்கிறது.

மகாராஜா மஹிந்த ராஜபக்ஷ­வே எங்களின் சூரிய சந்திரர் என்று புகழ்பாடிய காலம் இவ்வளவு கெதியாகக் கலையும் என்று யார் நினைத்தார்.

இதுதான் நிலைமை. இதை அனைவரும் உணர்ந்து தத்தம் கடமைகளை ஒழுங்காகச் செய்து, கடவுள் நீதிக்குத் தலை வணங்கினால் எல்லாம் நல்லதாக அவன் நடத்திவிப்பான் என்பது முழுவதும் உண்மை.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ சோதிடர் சுமணதாசவை சந்திக்காமல் மைத்திரியை சந்தித்தது ஏன்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com