அம்பாறை மாவட்டத்தில் சிங்களப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக்குழுவின் தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இந்த அலுவலகத்தை அகற்ற மக்கள் காவல்துறைக்கு மூன்று நாள் அவகாசம் கொடுத்திருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று காவல்துறை நிலையத்துக்கு அருகில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி புதிய அலுவலகம் ஒன்றை அண்மையில் திறந்துள்ளது.
இந்த அலுவலகத்தை அங்கிருந்து அகற்றுமாறு கோரியே காவல்துறையின் தடையையும் மீறி நேற்று 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்ட காவல்துறையினர் அவர்கள் கலைந்து செல்லாததையடுத்து ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். அதனை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்சி அலுவலகத்தை நோக்கி கற்களை வீசினர் என்றும் இதனால் அலுவலகத்துக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு விரோதமாகவும் வாசக பெருமளவுக்குச் அட்டைகளைத் தாங்கியிருந்த இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், முதலமைச்சரே அம்பாறை மாவட்டத்தில் கால் பதிக்காதே, தமிழர்களை முஸ்லிம்களிடம் காட்டிக் கொடுக்காதே எனவும் முழக்கமிட்டனர்.
0 Responses to அம்பாறையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு