வரலாறு என்பது வெற்றியீட்டியவர்களாலேயே எழுதப்படுகிறது. அதாவது யாரிடம் அதிகார, ஆதிக்க பலம் உள்ளதோ அவரே வரலாற்றைப் பற்றிய வருணனையையும் ஆய்வையும் வழங்குகிறார்கள். என்ற இந்தக் கட்டுரை அதிர்வு வாசகர்களுக்காக தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உருவாக்கத்துக்கான சமரசப் பேச்சு வார்த்தைதகளின்போது ஸ்ரேர்ன் காங் (Stern Gang) என்ற அமைப்பைச் சேர்ந்த தோற்கடிக்கப்பட்ட ஜியோனிஸ்ட்டுகள் (உலக யூதர் அமைப்பினைப் பின்பற்றுபவர்கள்) எகிப்துக்கான பிரிட்டிஷ் தூதுவர் லோர்ட் மொய்னேயைக் கொலை செய்தார்கள். அத்தோடு 1964 ஆம் ஆண்டில் இவர்கள் ஜெருசலேமில் இருந்த கிங் டேவிட் ஹோட்டலைத் தகர்த்தார்கள். இதில் 91 விருந்தாளிகள் கொல்லப்பட்டனர். ஆனால் இன்று.... 2009 இல் இஸ்ரேல் பாதுகாப்புப் பிரிவினர் காசாவுக்குள் படையெடுப்பை மேற்கொண்டபோதும் கூட ஜிஜோனிஸ்டுகளை மேற்குலக ஊட்கங்கள் கூட பயங்கரவாதிகள் எனச் சுட்டிக் காட்டுவதில்லை. இருப்பினும் வியட்னாம் அமைப்பான வியட் கொங் (Viet Cong) அமைப்பை ஒரு தடவை பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்ட போதும் கூட, வட வியட்னாம் ராணுவமானது போரை வென்ற பின்னர் அப்படி அழைக்கப்படவே இல்லை.
நாசவேலைகள் செய்தவர் எனக் குற்றம் சாட்டப்பட்ட நெல்சன் மண்டேலா வெள்ளை இனத்து தென்னாபிரிக்காவின் அபகீர்த்தியான பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் 1964 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ரோப்பன் ஐலண்ட் சிறைக்குச் சென்றார். ஆனால் வெள்ளை மற்றும் கறுப்பின தென்னாபிரிக்கர்களிடையே படிப்படியாக அதிகாரப் பரவலாக்கம் இடம்பெற்றதும், சிறை சென்ற மண்டேலா 1994 இல் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக ஆனார்.ரிவோனியா விசாரணை என அழைக்கப்படுகின்ற நெல்சன் மண்டேலாவின் விசாரணைகளின்போது, ஒரு தேசத்தின் மனக்குறைகள் என்றுமே அடக்கப்பட் முடியாதவை, எப்பாடுபட்டேனும் மக்கள் தமது மனக்குறைகளை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்து விடுவார்கள் என எதிர்த்தரப்பில் வாதம் செய்த வக்கீல், ஹொரால்ட் ஹன்சன் கூறினார்.
மக்களைப் பொறுத்தவரை குற்றச்செயல்களில் ஈடுபட வேண்டும் என்பது நோக்கமல்ல, ஆனால் அவர்கள் அடையவேண்டியதை, அடையவேண்டும் என்பது மட்டுமே கருத்தாகும். மேலும் வக்கீல் மற்றும் நீதிபதி ஆகியோரும் ஆபிரிக்கர்களே என்பதையும் சுட்டிக்காட்டிய வக்கீல், ஆபிரிக்கர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்தே ஆயுதப்போராட்டம் நடத்தினார்கள், ஆனால் கடைசியில் இவர்களுக்கு பயங்கரவாதிகள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் பட்டம் கூறி தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என அந்த வக்கீல் தொடர்ந்து நீதிபதிக்கு கூறினார். 1900 இல் வெள்ளை ஆபிரிக்கர்களாகிய போயர் ராணுவத்தை பிரிட்டிஷ் தோற்கடித்த பின்னர், நவீனமுறையிலான கெரில்லா தாக்குதல்களை இரு வருடங்களுக்கு தொடர்ந்தனர் ஆபிரிக்கர்கள். கெரில்லா தாக்குதலும் பயங்கரவாதம் என்ற போதும் கூட, மேற்குலகநாடுகள் ஆபிரிக்க அரசாங்கங்களுடன் 1950 முதல் 1980 இன் நடுப்பகுதிவரை உறவுகள் வைத்திருந்தபோது அந்த பயங்கரவாதம் பற்றி அவர்கள் கருத்திலேயே எடுக்கவில்லை.
இலங்கையில் நடப்பது ஆப்கானிஸ்தானில் நடப்பது போன்ற உள்நாட்டுப்போர். இப்படி இருக்கும்போது விரிவான ஆய்வுகள் ஏதும் நடத்தாத அவுஸ்திரேலிய அரசாங்கம் புஷ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு, தமிழீழ விடுதலைப்புலிகளும், தலிபான் அமைப்பினரும் பயங்கரவாதிகள் எனப் பிரகடனப்படுத்தியது. இதில் தலிபான் அமைப்பிலுள்ள பலர் முஜாஹிதீன் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பதும், ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகளை விரட்ட அவர்களுக்கு அமெரிக்கா உதவி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தலிபான் அமைப்பினர் பயங்கரவாதிகள் என்றும் அல் கெய்தாவின் ஆதரவாளர்கள் என்றும் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளதால் நியாயமான ஆய்வு மறுக்கப்படுகிறது.
இலங்கை 1948 இல் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திலேயே பெரும்பான்மையான சிங்களவர்கள் வடக்கிலுள்ள தமிழர்கள் மீது கொடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதால் இலங்கையின் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது. மிகவும் இழிவான முதலாவது செயல் என்னவென்றால், சிங்கள மொழியே உத்தியோகபூர்வ மொழியென 1954 இல் சிங்களவர்களின் இலங்கை சுதந்திர கட்சி தீர்மானம் எடுத்ததாகும். 1956 தேர்தலின் மூலம் இது முக்கியமான அரசியல் சிக்கலானது. இவ்வாறாக தொடர்ந்து அதிகரித்து வந்த அழுத்தங்கள் காரணமாக 1977 இல் பெரும்பான்மைச் சிங்களவர்கள் 125 தமிழர்களைக் கொல்வது வரை இரு சமூகத்துக்கும் இடையிலான உறவுகள் மோசமாகிக்கொண்டே சென்றன. 1983 முதல், தெற்கிலுள்ள சிங்கள பெரும்பான்மையினருக்கும், வடக்கு சிறுபான்மையினரான தமிழர்களுக்குமிடையிலான பிரச்சனை இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
அது இன்றுவரை தொடர்ந்து கொண்டே உள்ளது. ராணுவத்தில் சிங்களவர்களை மட்டுமே கொண்டுள்ளது இலங்கையரசு. தமிழர்கள் உள்ளடக்கப்படாத இந்த சமத்துவமில்லாத நிலையானது பாலஸ்தீனியர்கள் மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்றவற்றை ஒத்தன. ஐரிஷ் ராணுவம் போல, பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதற்காக அமைப்புகளுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு பல வருடங்கள் எடுக்கும். சிங்களவர்களும் சித்திரவதை மற்றும் பயங்கரவாதத்தைப் பயன்படுத்தியமையானது இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியது. நோர்வே அரசாங்கத்தின் பிரதிநிதியான எரிக் சொல்ஹெய்மால் சமாதான பேச்சுவார்த்தைகள் 2002 இல் ஆரம்பிக்கப்பட்டன, ஆனால் இது 2006 இல் குழம்பிப்போய் விட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்குகின்ற புஷ் நிர்வாகத்திடமிருந்து உதவிகள் கிடைக்க, இலங்கை ராணுவமும் மிகப்பாரிய தாக்குதல் நடவடிக்கையை 2008 இன் பிற்பகுதியில் தொடங்கியது. இதன் விளைவு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
கிட்டத்தட்ட 300,000 தமிழர்கள் சுற்றி வளைக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். இந்த முகாம்களோ பெண்கள், சிறுவர்கள், போர்க்கைதிகள் ஆகியோரை அரசு நடத்தும் விதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சட்டங்களோடு முரண்படுகின்ற ஒரு இடமாக உள்ளது. இப்படியான நிலைகளே வெறுப்பு ஏற்படுவதற்கான அடித்தளமாக இருக்கிறது. இலங்கை அரசோ தாம் புலிகளை வேறுபடுத்தி இனம் காண்பதற்காகவே இந்த மக்களைத் தடுத்து வைத்துள்ளதாக வாதம் செய்கிறது. ஆனால், இதுவரைக்கும் அங்கு நடைபெறும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது பழிக்குப்பழி வாங்கும் செயல்களாகத் தோன்றுகின்றன.
இந்த முகாம்களுக்கு ஊடகங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ரகசிய சான்றான தமிழ் இளைஞர்களை சிங்கள ராணுவத்தினர் சட்டத்துக்குப் புறம்பாக சுட்டுக் கொல்வதானது அங்கு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தை விளங்கிக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரில் அவுஸ்திரேலியாவும் தனது பங்குக்கு தமிழர்களை ஓரம்கட்டுகிறது. அதாவது முகாம் மக்களுக்கான நிவாரண உதவிகளை அனுப்புவதற்குப் பதில் தமது கடற்படை பிரதித் தலைவரை கடந்த ஜூன் மாதம் கொழும்புக்கு அனுப்பி இளம் தமிழர்கள் அவுஸ்திரேலியா வருவதைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது. தமிழர்களை தொடர்ந்தும் அச்சம் நிறைந்த முகாம்களுக்குள் தொடர்ந்து தடுத்துவைப்பதற்கு ஆவுஸ்திரேலியாவின் இந்த வாதத்தை இலங்கையரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறது.
இதேசமயம் இலங்கையானது ஒரு ராணுவ ஆட்சி நாடாக மாறியுள்ளது. போர் நிறைவுக்கு வந்துள்ள போதும், வடக்கு கிழக்கில் ராணுவத்தினரை நிறுத்துவதற்காக, இலங்கை ராணுவத்தினர் எண்ணிக்கையானது 200,000 இலிருந்து 300,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. தமிழர்கள் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளனர். சிங்களவர்களால் வெறுத்து ஒதுக்கப்படுகின்றனர். இந்நிலையில் அவர்கள் எங்கு செல்வார்கள்? தொடர்ந்தும் அவர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருக்க முடியாது. அங்கு ஒவ்வொரு மாதமும் 100 குழந்தைகள் வரை இறப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. வேறொரு அவுஸ்திரேலிய நடவடிக்கையானது பயங்கரவாதத்தை மேலும் விரிவாக்குவதாக அமைந்துள்ளது. இந்நடவடிக்கையானது தவறாக வழிகாட்டப்பட்டுள்ள அவுஸ்திரேலிய பெடரல் போலீஸால் எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்றும் புலிகளுக்கு பண உதவியை அனுப்பி வந்தவர்கள் என்றும் கூறி மூன்று இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக குற்றங்களைச் சுமத்தி பயங்கரவாதத்துக்கான தண்டனையை இம்முவருக்கும் பெற்றுக்கொடுக்க விக்ரோரியா உச்ச நீதிமன்றத்தில் தமது வழக்குகளைத் தொடர்ந்து வருகின்றனர். புலிகள் அமைப்பு முற்று முழுதாக ஒழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு கூறுகின்ற இவ்வேளையில் இவ்வாறான வழக்குகள் எதற்கு தொடரப்படவேண்டும்?
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதியுதவிகள் அனுப்பப்பட்டிருந்த சமயங்கள் ஏதாவது இருந்திருந்தால் கூட, வடக்கில் ஒரு அரசாங்கத்தையே நடத்தி வந்த புலிகள் அந்த நிதியை மனிதாபிமானத் தேவைகள், கல்வி, ஏன் ராணுவ தேவைகள் போன்ற ஏதாவது ஒரு நோக்கத்துக்காக பயன்படுத்தியிருக்கலாம். அப்பாவி மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்காக நாட்டின் கடற்படைப் பிரதித் தலைவரை இலங்கைக்கு அனுப்பாமல், அந்த மக்களை தொடர்ந்து சிறையிலடைக்கும்படி அழுத்தம் கொடுப்பதற்காக அப்பிரதி தலைவரை ஒரு நாடு அனுப்பியுள்ளது எனில் அது எவ்வளவு வித்தியாசமான ஒரு நாடாக இருக்க வேண்டும்?
பயங்கரவாதத்தின் தேவைகளுக்கான தண்டவாள பாதைகள் அமைக்கப்பட்டு எங்களுக்கு தரப்பட்டுள்ளன, இந்த பயங்கரவாதமானது பயம், அச்சம் என்பவற்றால் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது. இப்போது தேவையானது என்னவெனில், பயங்கரவாதம் தோன்றுவதற்கான காரணங்கள் பற்றிய நன்கு தரமுயர்த்தப்பட்ட புரிந்துணர்வாகும். நீதி நியாயத்துக்குப் புறம்பான வன்முறைகள் வெடிப்பதற்கு முன்னர், பயங்கரவாதம் உருவாகுவதற்கு வறுமை, இனத்துவேசம், சமத்துவமற்ற அதிகார பரவலாக்கம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நம்பிக்கைத் துரோகத்தின் தாக்கங்கள் என்பன காரணமாக அமையலாம்.
மூலம்: புரூஸ் ஹைய், கன்பெரா ரைம்ஸ் (Bruce Haigh, Canberra Times)
அரசியல் விமர்சகர் மற்றும் இலங்கையில் கடமையாற்றிய முன்னாள் ராஜதந்திரி
தமிழாக்கம் அதிர்வு இணையம்.
நன்றி: அதிர்வு
0 Responses to வெற்றியீட்டியவர்களாலேயே வரலாறு எழுதப்படுகிறது