Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்களாக வாழ்ந்து எமது முதிர்ந்த அரசியல் போராளியாக, மதியுரைஞராக ,ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றிற்கு மேலாக தேசியத்தலைவரின் உற்ற நண்பனாக இருந்து ஊக்கமும், உத்வேகமும் அளித்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 3 ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 27.12.2009 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள LSC மண்டபத்தில் நினைவு கூரப்பட்டது.

பிற்பகல் 4.30 மணிக்கு தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்திருந்த முன்னைநாள் பா.மா.கட்சி உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும், பேராசிரியரும் தமிழின உணர்வாளருமான திரு. தீரன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க அதனுடன் அகவணக்கமும், மலர்வணக்கமும், அறிமுகவுரையும் இடம்பெற்றது.

இந்த வணக்க நிகழ்வின் கலைநிகழ்வாக சோதியா கலைக்கல்லூரி மாணவர்கள் வழங்கிய விடுதலைப்பாடல் வாத்திய இசையும், கலைபண்பாட்டுக்கழக கலைஞர்கள் வழங்கிய விடுதலைப்பாடல்களும் இடம்பெற்றன. வெண்திரையில் தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் நினைவுகளை மீட்கும் விவரணம் ஒளிபரப்பாகியது.

Darncy தமிழ்ச்சோலை மாணவிகள் உலகே உனக்கு கண்ணில்லையா என்ற பாடலுக்கு அபிநய வடம்பிடித்தனர். அதனை தொடர்ந்து 2009 மாவீரர்நாள் கலைத்திறன் போட்டியில் தனிநடிப்பில் வெற்றிபெற்ற வில்லியே லூபெல் தமிழ்ச்சோலை மாணவர்களின் தனிநடிப்பு நடைபெற்று மக்களின் மனதில் இடம்பெற்றது.

நிகழ்வின் சிறப்பு பங்காளராக கலந்து கொண்ட தமிழின உணர்வாளர் பேராசிரியர் திரு தீரன் அவர்கள் 1மணிநேரத்திற்கு மேலாக தனது சிறப்புரையை நிகழ்த்தியிருந்தார் அவர் தனதுரையில் எவருக்கும் கிடைக்காத ஓர் உயரிய புகழுக்குரிய சொல்லானதேசத்தின் குரல்என்ற பெருமையை தேசியத்தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்ட பாலா அண்ணர், இந்த விடுதலைக்கு அவர் செய்த அர்பணிப்பும், சர்வதேசரீதியல் அரசியல் சாணக்கியர்களே பயப்படுகின்ற அளவில் தமிழனத்தின் பெருமையை கொண்டு சென்றவர் என்றும்.

அவர் போராளிக்கு போரளியாகவும், பொதுமக்களுக்கு பொது மகனாகவும், துன்பத்தின் நேரத்தில் போராளிகள் துவண்டுவிடாமல் இருக்க விகடகவியாகவும், அரசியல் மேடையில் மிகுந்த ராஜதந்திரியாகவும், மதிநுட்பவானாகவும் பன்முகப்பட்ட ஆளுமைமிக்க மனிதராக இருந்ததையும், இன்று எமது தியாகம் நிறைந்த போராட்டம் மௌனமாக்கப்பட்ட போதும் இனி வரும் காலங்களில் அவர்கண்ட கனவை நனவாக்க அரசியல் ரீதியான போராட்டங்களை வெகு தீவிரமாக அர்த்தமுள்ளதாக வல்மைமிக்கதாக கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதையும் அதற்கான அங்கீகாரத்தை அண்மையில் தமிழீழ மக்கள் இங்கு நடைபெற்ற கருத்துக்கணிப்பு தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை அளித்துள்ளார்கள் என்பதையும், அந்த தேர்தலின் அவசியத்தையும், தேவையையும் தெரிவித்திருந்தார்.

அண்மையில் டென்மார்க்கில் நடைபெற்ற உலகசுற்றாடல் பாதுகாப்பு மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான அரசஅரசசார்பற்ற அமைப்புகளுக்கு தாயக தேசத்தில் நடைபெற்ற இந்த ஆண்டின் மிகப்பெரும் மனிதப்படுகொலையும், மனிதவுரிமைமீறல் பற்றிய புகைப்பட கண்காட்சியும், லட்சக்கணக்கான துண்டு பிரசுமும் வெளியிடப்பட்டு பரப்புரை செய்த தமிழ்நாட்டு உணர்வாளர்களையும் பாராட்டி இவை பெரும் பலனளித்துள்ளது என்பதனையும் குறிபிட்டிருந்தார்.

எதிர்காலத்தில் எமது இளைய தலைமுறையினர் இன்றைய தமிழினத்தின் தேவையை அறிந்தும், உணர்ந்தும், சட்டத்துறை அரசியல்துறைகளில் கல்வி கற்கவேண்டும் என்று குறிப்பிட்டதுடன் தமிழ்நாட்டு மக்களின் தமிழின உணர்வுகளையும் ஆட்சியில் உள்ள பொறுப்பற்றவர்களின் அரசியலால் தமிழீழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களின் உயிர்கள் பலியாவதற்கு காரணமாகி விட்டது என்றும் அதற்கான பலனை அவர்கள் நிச்சயமாக அனுபவிக்க வேண்டிவரும் என்பதையும் தமிழீழம் நிச்சயம் மலரும்,மாவீரர்கள் கனவு நனவாகும் என்றும் கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து சோதியா கலைக்கல்லூரி மாணவிகள் உலகத்தமிழினமே எண்ணிப்பார் என்ற பாடலுக்கு வடம் பிடித்து நிகழ்வுக்கு வந்த மக்களுக்கு விடுதலை உணர்வை மெருகேற்றி தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வை 7.45 மணிக்கு நிறைவு செய்தனர்.








0 Responses to தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 3 வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு: பிரான்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com