Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்மக்கள் கண்கள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக 'சனல் - 4' தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளி நம்பகத்தன்மையானது என்றும் அதில் எந்த இடைச்செருகலும் செய்யப்படவில்லை என்றும் லண்டனிலிருந்து வெளியாகும் 'ரைம்ஸ் ஒன்லைன்' ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட காணொளியை தமது விசாரணை அதிகாரி மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள 'ரைம்ஸ் ஒன்லைன்' தமது விசாரணை அறிக்கையை நேற்றுமுன்தினம் சிறிலங்கா அரசுக்கு அனுப்பிவைத்துள்ளது.

விசாரணையை மேற்கொண்ட கிரான்ட் ப்ரெடறிக் அமெரிக்காவின் 'எவ்.பி..' நிறுவனத்தின் தேசிய அக்கடமியின் ஆலோசகர்களில் ஒருவரும் சுயாதீன தடயவியல் நிபுணரும் கனடா வங்குவர் மாநில காவல்துறை தடயவியல் பிரிவின் தலைவரும் ஆவார்.

'சனல் - 4' தொலைக்காட்சி ஒளிபரப்பிய குறிப்பிட்ட காணொலி குறித்த விசாரணைகளை மேற்கொண்டபின்னர் அவர் தெரிவித்துள்ளதாவது:-

குறிப்பிட்ட காணொளி வடிவம் 'எடிட்டிங்' செய்யப்பட்டதோ அல்லது மறு ஒளி - ஒலி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதோ அல்ல. ஒவ்வொருவராக இழுத்து வரப்பட்டு அவர்கள் சுடப்படும்போது துப்பாக்கியிலிருந்து வெளிவரும் புகை, சுடப்படுகின்றபோது பின்னணியில் இன்னனொரு சிப்பாய் சிரிக்கும் ஒலி ஆகியவை யதார்த்தமாக உள்ளன. அந்த மாதிரியான விடயங்களை இடைச்செருக்கப்பட்டவையாக இருப்பதற்கு சந்தர்ப்பமே இல்லை.

அத்துடன் சுடப்பட்டதும் அவரது தலையிலிருந்து வெளியாகும் இரத்தம் மற்றும் அவர் பின்னாலே சரிந்து விழுவது ஆகிய விடயங்களும் திரைப்படங்களில் எடுக்கப்பட்டது போல் அல்லாது மிக மிக யதார்த்தமாக காணப்படுகிறது.

காணொளியானது கையடக்கத்தொலைபேசி 'கமராவினால்' தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட காட்சி என்பது அப்பட்டமான உண்மை. அதில் எந்த இடத்திலும் நிறுத்தி எடுக்கப்பட்டதற்கான அறிகுறியோ, திரைப்பட ஒளிப்பதிவு போல வேறு வேறு கோணங்களில் வைத்து ஒளிப்பதிவு செய்ததற்கான தடயங்கள் எதுவுமே இல்லை - என்று கூறியுள்ளார்.

ப்ரெடறிகின் அறிக்கை நேற்றுமுன்தினம் சிறிலங்கா அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதில் எதனையும் சிறிலங்கா அரசு தரப்பு தெரிவிக்கவில்லை என்று 'ரைம்ஸ் ஒன்லைன்' தெரிவித்துள்ளது.

இந்த விசாரணை முடிவு சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கு தெளிவான - நம்பகரமான - ஆதாரம் என்று 'ரைம்ஸ் ஒன்லைன்' தெரிவித்துள்ளது.

0 Responses to சனல்4, காணொளி நம்பகரமானது: ரைம்ஸ் ஒன்லைன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com