Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னிப்பகுதியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடைசி நாட்களின்போது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடையப்போவதாக ஐக்கிய நாடுகள் சபையை அணுகி உதவி கோரினார்கள் என்ற விடயத்தை ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் மனித உரிமைகள் விவகாரத்துக்கான விசேட செயலர் சேர் ஜோன் கோம்லஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

சி.என்.என். தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான விவாதத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

"விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் சரணடையும்போது சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" - என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜோன் கோம்லஸ் பதிலளிக்கையில் -

"நிச்சயமாக. விடுதலைப்புலிகள் ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கடைசிவரை தொடர்பிலிருந்தார்கள். கடைசி நேரத்தில் அந்த அமைப்பின் சில தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடையப்போவதாக தெரிவித்திருந்தார்கள். நாங்கள் அந்த தகவலை சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பிவைத்தோம். ஆனால், அதற்கு பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று எமக்கு தெரியாது. அவர்கள் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று தற்போது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து எமக்கு எதுவும் தெரியாது. அந்த குற்றச்சாட்டுகள் உண்மையா என்றும் எமக்கு தெரியாது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதே உண்மையை அறிந்துகொள்வதற்கான படிமுறையாக இருக்கும்" - என்றார்.

"அப்படியானால், அந்த காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை ஏன் அங்கு சென்று அந்த சரணடையும் விடயத்தை கண்காணிக்கவில்லை?" - என்று செவ்வியாளர் கேட்ட கேள்விக்கு ஜோன் கோம்ஸ் பதிலளிக்கையில் -

"சரணடையும் தரப்பினருக்கு உதவி செய்வதற்கு நாம் தயாராக இருந்தோம். ஆனால், அந்த நேரத்தில் அதற்கு சாத்தியமே இருக்கவில்லை. அது மிகவும் குழப்பகரமாக சூழ்நிலையாக இருந்தது. இது நடைபெற்றது கடைசி 24 மணி நேரத்திற்குள்ளாகும். எம்மால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை பற்றி சிந்திப்பதற்கு முன்னரே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது" - என்றார்.

"ஆனால், சரணடைதல் தொடர்பான கோரிக்கை விடுதலைப்புலிகளினால் முன்வைக்கப்பட்டபோது , ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி விஜய் நம்பியார் தான் அங்கு போவதற்கு தேவையிருக்கவில்லை என்று அப்போது கூறியிருந்தார் என்று ஐக்கிய நாடுகள் சபை செய்தி ஒன்று கூறியதே?" என்று கேட்டபோது -

"அங்கு அவர் செல்வதற்கான சாத்தியம் இருக்கவில்லை. அவர் அப்போத நியூயோர்க்கில் இருந்தார்" - என்று கூறினார் ஜோன் கோம்லஸ்.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் தூதுவர் பாலித்த கோகன்னவிடம் செவ்வியாளர் கேட்டபோது -

"விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும்போது சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்ற இந்த குற்றச்சாட்டு அண்மைக்காலமாக எழுந்துள்ள ஒரு கட்டுக்கதை. இது தொடர்பாக ஆரம்பத்தில் எவரும் பேசவில்லை. இந்த குற்றச்சாட்டை சிறிலங்கா அரசு அடியோடு நிராகரித்துள்ளது" - என்று அவர் கூறினார்.

"ஆனால், துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சிலரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனவே, அப்படியானால் அவர்களுக்கு என்ன நடந்தது?" - என்று செவ்வி கண்டவர் கேட்டபோது -

"அவர்கள் மோதல்களில் ஈடுபட்டிருந்தால் நிச்சயமாக சுட்டுக்கொல்லப்பட்டிருப்பார்கள். அது வெளிப்படை உண்மை" - என்றார் கோகன்ன.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to சரணடைவது தொடர்பாக விடுதலைப்புலிகள் கடைசி நேரத்தில் ஐ.நா.வைஅணுகியது உண்மை: ஜோன் கோம்லஸ் தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com