Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா விவகாரத்திற்கு நேரு, இந்திரா ஆகியோர் வகுத்த பாதையிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் விலகிச் சென்றதோடு மட்டுமல்ல, போர்க்குற்றத்துக்கும் மனித உரிமையை மீறிய செயல்களுக்கும் ஆளான ராஜபட்ச போன்றோருக்கு உலக அரங்கில் ஆதரவு தேடும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுத் தனது மரியாதையை இழந்து இன்று தனித்து நிற்கிறது என்று தெரிவித்துள்ளார் தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் 'தினமணி' நாளிதழில் எழுதியுள்ள பத்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் எழுதியுள்ள முழு விவரம் வருமாறு:-

டிரினிடாட் தீவில் நடைபெற்ற காமன்வெல்த் பிரதமர்கள் மாநாட்டில் அடுத்த மாநாட்டினை 2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த 53 நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் கூடி உலக அரசியல் நிலைமை குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பது வழக்கமாகும். அந்த வகையில் அடுத்த மாநாட்டினை எங்கு நடத்துவது என்பது குறித்துக் கடும் போட்டியிருந்தது.

பிரதமர்கள் மாநாட்டுக்கு முன்பாக நடைபெற்ற வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா உள்பட 45 நாடுகள் இலங்கையில் அடுத்த மாநாட்டினை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

போரில் வெற்றி பெற்ற கையோடு இலங்கையில் இம்மாநாட்டினை நடத்துவதன் மூலம் உலக நாடுகளில் தனக்கு எதிராக எழுந்திருக்கும் கடும் கண்டனத்தைத் திசைதிருப்புவதற்கு இலங்கை அதிபர் ராஜபட்ச திட்டமிட்டார். போர்க் குற்றவாளியாகவும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை ஈவு இரக்கமின்றி நடத்தியவர் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியிருந்த ராஜபட்ச அதிலிருந்து தப்புவதற்கு ஒரு வழியாக காமன்வெல்த் மாநாட்டினை நடத்த பெருமுயற்சி செய்தார்.

ஏற்கெனவே .நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் உதவியோடு தோற்கடித்ததைப்போல இப்போதும் இந்தியாவின் உதவியை ராஜபட்ச நாடினார். இந்தியா கொஞ்சமும் தயங்காமல் உதவ முன்வந்தது. வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியாவின் உதவியால் 45 நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்தன.

பிரதமர்கள் மாநாட்டில் வழக்கமாக வெளியுறவுத் துறை அமைச்சர்களின் முடிவு ஏற்றுக்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை அவ்வாறு செய்யப்படவில்லை. பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் இலங்கையில் மாநாடு நடத்துவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பிரதமர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். போர்க் குற்றம் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் ஈடுபட்ட இலங்கை அரசின் அழைப்பை ஏற்று அங்கு மாநாடு நடத்துவது சரியல்ல என பெரும்பாலான பிரதமர்கள் முடிவு செய்தனர். சர்வதேச அரங்கில் ராஜபட்சவுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு இதுவாகும்.

பிரிட்டிஷ் பிரதமர் முன்நின்று இலங்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததற்குப் பதில் நியாயமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்தான் இவ்வாறு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொண்டதன் மூலம் காமன்வெல்த் அமைப்பில் உள்ள பெரும்பாலான நாடுகளின் மதிப்பிலிருந்து தாழ்ந்துவிட்டார். காமன்வெல்த் அமைப்பிலேயே மிகப்பெரிய நாடு இந்தியாதான். ஆனால் அதனுடைய முயற்சிக்கு இத்தகைய அவமதிப்பு நேர்ந்திருப்பது மன்மோகன் சிங்கின் தவறான அணுகுமுறையின் விளைவாக என்பதை நாம் உணர வேண்டும்.

இதே காமன்வெல்த் அமைப்பின் கூட்டத்தில் 1961-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். தென்னாப்பிரிக்க அரசு நிறவெறிக் கொள்கையைக் கைவிட வேண்டும் அல்லது காமன்வெல்த்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என பிரதமர் நேரு கொண்டு வந்த தீர்மானம் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக தென்னாப்பிரிக்கப் பிரதமர் காமன்வெல்த் அமைப்பில் மட்டுமல்ல, உலக அரங்கில் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.

தென்னாப்பிரிக்காவில் மொத்த மக்கள்தொகையில் 79 சதவீதத்துக்கு மேல் உள்ள கருப்பின மக்கள் (இந்தியர்கள் உள்பட) சுமார் 2 கோடி பேர் வெள்ளை அரசின் நிறவெறிக் கொள்கையின் விளைவாக பல்வேறு இழிவுகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 2 கோடி கருப்பின மக்களுக்கு 13 சதவீத இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. 50 லட்சம் வெள்ளையர்களுக்கு 87 சதவீத இடப்பகுதி ஒதுக்கப்பட்டது. வெள்ளையர்களின் வாழ்விடங்களுக்கு வெளியே ஒதுக்குப்புறங்களில் அவர்கள் வாழ வேண்டுமென ஆணையிடப்பட்டது. பொது இடங்களிலும் அவர்களுக்கு அனுமதி இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கருப்பர்கள் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகினர். மகத்தான தலைவரான நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகாலம் சிறையில் வாட நேர்ந்தது.

இந்திய மக்களுக்காக மட்டுமல்ல, கருப்பின மக்கள் அனைவருக்காகவும் இந்தியா போராடியது. நிறவெறியின் காரணமாக கொடுமைகளுக்கு ஆளான அனைத்து மக்களுக்காகவும் காமன்வெல்த் அமைப்பில் பிரதமர் நேரு நெஞ்சு நிமிர்த்தி நின்று தென்னாப்பிரிக்காவை வெளியேற்ற வேண்டுமென்று போராடினார். வெற்றியும் பெற்றார்.

ஆனால் நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் வழிநடத்தப்படும் மன்மோகன் சிங் நிறவெறியைவிட மோசமான இனவெறியர் ராஜபட்சவுக்கு ஆதரவாக காமன்வெல்த் மாநாட்டில் நடந்துகொண்டது இந்தியாவுக்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.

மன்மோகன் சிங் செய்யத் தவறியதை பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் துணிந்து செயல்பட்டு இலங்கையில் மாநாடு நடத்தப்படுவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அவரும் மற்ற நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தும் திட்டத்தைத் தடுக்காமல் போயிருந்தால் உலக அரங்கில் தன்மீது சாற்றப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து ராஜபட்ச சுலபமாகத் தப்பிக்க வழிபிறந்திருக்கும்.

மன்மோகன் சிங் செய்த மற்றொரு முக்கியமான தவறையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மே மாதத்தில் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக்கொண்ட சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றும் வகையில் தாற்காலிகப் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசை வற்புறுத்திச் செய்ய வைத்து அதைத் தொடர்ந்து அந்த மக்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்க கப்பல்களை அனுப்பி உதவியிருக்க வேண்டும். ஆனால் அந்த மனித நேயம் மன்மோகனுக்கு இருக்கவில்லை.

1983-ம் ஆண்டு கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் மூண்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, பிரதமராக இருந்த இந்திரா காந்தி உடனடியாகத் தலையிட்டார். வெளியுறவுத் துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவை அனுப்பி இலங்கை அரசை எச்சரிக்கச் செய்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை.இரு கப்பல்களை கொழும்புவுக்கு அனுப்பி எஞ்சிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள காங்கேசன் துறைக்குப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்க்க உதவினார்.

பிரதமர் இந்திராவைப்போல செயல்பட்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக்கொண்ட மக்களைப் பத்திரமாக மீட்க மன்மோகன் சிங் எதுவும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல. இதற்கு நேர்மாறாக வரக, விக்கிரகா என்ற இரு இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல்களை இலங்கை அரசுக்குத் தந்து அந்தக் கப்பல்கள் கரையோரத்தில் தஞ்சமடைந்து தவித்த தமிழர்கள் மீது ஏவுகணைகளை ஏவின. இதன் விளைவாகவும் சிங்கள விமானத் தாக்குதல்கள் விளைவாகவும் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதற்குக் காரணமான மன்மோகன் சிங்குக்கு எல்லாவகையிலும் துணை நின்றவர் முதல்வர் கருணாநிதி. அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு எதுவும் செய்ய முன்வரவில்லை. இவருடைய தயவில்தான் அப்போதைய மத்திய ஆட்சி பதவியில் இருந்தது. ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று இவர் மிரட்டியிருந்தால், இந்திய அரசு பணிந்திருக்கும். ஈழத் தமிழர் மக்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள். ஆனால் முதல்வர் கருணாநிதியோ உண்ணாவிரத நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார் அவருடைய விவேகம் அதற்குத்தான் பயன்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு வீரம் இருந்த அளவுக்கு விவேகம் இல்லையென இப்போது நீட்டி முழக்குகிற கருணாநிதி பதைக்கப் பதைக்க ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு மட்டுமே சொந்தமான விவேகத்தை கொஞ்சமும் பயன்படுத்தவில்லையே ஏன்? தில்லியில் மகனுக்கும், பேரனுக்கும் பணம் கொழிக்கும் துறைகளைப் பெற்றுத் தருவதில் அவரது விவேகம் செலவழிந்துவிட்டதோ என்னவோ?

ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரணடையுமாறு கருணாநிதி கூறிய யோசனைக்கு புலிகள் செவிசாய்க்கவில்லை என அங்கலாய்க்கிறார். இவர் இந்த யோசனையைக் கூறுவதற்கு முன்பாக .நா.வின் பொதுச் செயலாளரின் ஆலோசகரான விஜய நம்பியார் அளித்த ஆலோசனையின்படிதானே விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன் புலித்தேவன் ஆகியோர் ஆயிரக்கணக்கான மக்களுடன் ஆயுதங்கள் இல்லாமல் வெள்ளைக்கொடியேந்திச் சென்ற வேளையில் சிங்கள ராணுவ வெறியர்கள் அவர்களை ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொன்ற மாபாதகம் நிகழ்ந்தபோது கருணாநிதி எங்கே போயிருந்தார்? மனித தர்மத்துக்கே எதிராக நடைபெற்ற இந்தக் கொடுமையைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்ல அவர் முன்வரவில்லையே? விவேகத்துக்கு மொத்தக் குத்தகைதாரரான அவர் வாய்மூடி மௌனம் சாதித்தது ஏன்?

இந்தியாவின் பிரதமர்களாக நேரு, இந்திரா ஆகியோர் இருந்தபோது உலகப் பிரச்னைகளில் மனிதநேயத்தோடும் துணிவோடும் செயல்பட்டு உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தார்கள். இதன் விளைவாக உலகில் மிகப்பெரும்பான்மையான நாடுகளின் இயற்கையான தலைமை இந்தியாவுக்குக் கிடைத்தது. வல்லரசுகளுக்குக் கூட கிடைக்காத இந்தப் பெருமை இந்தியாவைத் தேடி வந்தது.

ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் நேரு, இந்திரா ஆகியோர் வகுத்த பாதையிலிருந்து விலகிச் சென்றதோடு மட்டுமல்ல, போர்க்குற்றத்துக்கும் மனித உரிமையை மீறிய செயல்களுக்கும் ஆளான ராஜபட்ச போன்றோருக்கு உலக அரங்கில் ஆதரவு தேடும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுத் தனது மரியாதையை இழந்து இன்று தனித்து நிற்கிறது.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to தறிகெட்டு பயணித்த மன்மோகன் தன்மானம் இழந்து நிற்கின்றார்: பழ.நெடுமாறன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com