Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊழல், மோசடிகளைத் தொடர்வதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த ஆட்சி, தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் 2003ஆம் ஆண்டு தம்முடைய ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் கைகூடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவலறியும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு வருடகாலம் எடுக்கும் என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், 4000 அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு 8000 பயிற்சியளிக்கப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தகவலறியும் சட்டமூலம் மீதான விவாதத்தை ஆளும் கட்சியின் சார்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2003ஆம் ஆண்டு நாம் தகவலறியும் சட்ட மூலத்தை முன்வைத்தோம். அச்சமயம் அதை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளினதும் இணக்கம் எமக்குக் கிடைத்தது. எனினும் 2004இல் எமது அரசாங்கம் தோல்வி கண்டது. அவ்வாறு அன்று அது நிறைவேற்றப்பட்டிருந்தால் ஆசியாவிலேயே முதன் முதலில் தகவலறியும் சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்திய பெருமை எம்மைச் சேர்ந்திருக்கும்.

எவ்வாறாயினும், 2004 லிருந்து 2015 வரையிலான பத்து வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தில் இதற்கான முயற்சிகளை ஆட்சியிலிருந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. அதற்கான தேவையொன்று கிடையாது என அதற்குக் காரணம் கூறினர். இதன் மூலம் 2015 வரை மக்களுக்கான தகவலறியும் உரிமை மறுக்கப்பட்டது.

தகவலறியும் சட்டம் மக்களுக்கான உரிமையாகும். மக்களின் இறைமை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஒரு முக்கிய அம்சம் அது. பத்து வருடங்கள் கடந்து இப்போது அதனை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தெரிவுக் குழுக்கள் இருப்பதால் இதன் மூலம் பலவற்றை மேற்கொள்ள முடியும். தகவலறிதல் இல்லாவிட்டால் பாராளுமன்றத்தை செயற்படுத்துவதும் கஷ்டமாகிவிடும்.

அமெரிக்காவை விட ஆசியாவின் வட்டி விகிதம் அதிகமாக இருந்தது. எமது மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சு வெளிநாட்டுக் கையிருப்பை கையாண்ட விதமே எமக்கு நட்டம் ஏற்படக் காரணமானது. இங்கு வருவோருக்கு போகும் போது ஏதாவது வழங்கியே அனுப்பப்பட்டது. இத்தகைய செயற்பாடுகளினால் 20 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டது.

எந்த தகவலும் வெளியிடப்படாமல் பல கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. ஸ்ரீலங்கன் விமான சேவை உட்பட பலவற்றிற்கான கடனாக 1300 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. தகவலறியும் சட்டம் நடைமுறையில் இருந்திருந்தால் இது தொடர்பில் பல விடயங்களை நாம் அறிந்திருக்க முடியும். கடந்த ஆட்சியாளர்கள் மோசடிகளைத் தொடர்வதற்காகவே தகவலறியும் சட்டத்தைக் கொண்டு வருவதை இழுத்தடித்தனர்.

எம்மால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள தகவலறியும் சட்டமூலம் ஆசியாவிலேயே சிறந்ததொன்று. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக 4000 காரியாலயங்களை ஏற்படுத்தவுள்ளோம். 8000 அதிகாரிகள் இதற்காக பயிற்சியளிக்கப்படவுள்ளனர். 7000 பேர் பயிற்சியளிக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும் இதனால் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு வருட காலம் எடுக்கும்.

நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் ஆட்சி வியூகம் தொடர்பில் தெளிவு அவசியம். அதனைப் பெற்றுக்கொடுப்பது முக்கியம். நாட்டில் இதுவரை இருந்திராத வெளிப்படைத் தன்மை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்துக்கு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து நாம் இந்த சட்ட மூலத்தை சபையில் நிறைவேற்ற முடியும். இது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த சட்டமூலம் என்பதால் அனைவரது ஆதரவும் இதற்குக் கிடைக்கப்பெற்று சட்ட மூலம் நிறைவேறும்.” என்றுள்ளார்.

0 Responses to மோசடிகளைத் தொடர்வதற்காகவே மஹிந்த ஆட்சி தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com