Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை சிறிலங்காவின் அரசதலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் அலரி மாளிகைக்கு அழைப்பித்து, எதிர்வரும் அரசதலைவர்த் தேர்தலை ஒட்டிய விடயங்கள் குறித்து அவருடன் பேச்சு நடத்தினார் என அறியவந்துள்ளது. எனினும், இந்தப் பேச்சுகளின் பெறுபேறு குறித்து கூட்டமைப்பின் உயர் வட்டாரங்கள் அதிருப்தியே தெரிவித்தன. அரசதலைவர் தரப்பிலிருந்து காட்டப்பட்ட சமிக்ஞைகள் தமிழர் தரப்பின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பைக் கூட நிறைவு செய்வனவாக அமையவில்லை என்று அவை குறிப்பிட்டன.

எதிர்வரும் அரசதலைவர்த் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவைத் தமக்குப் பெறுவதற்காகவே சம்பந்தரை அரசதலைவர் தனியாக அழைத்துப் பேசினார் என்று கூறப்படுகின்றது.

வடக்கு கிழக்கைப் பிரித்த அரசு

இந்தப் பேச்சுகளின்போது, அரசதலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்கள், விபரீதங்களை சம்பந்தர் எம்.பி., எடுத்துக்காட்டினார் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சந்திப்பில் இடம்பெற்றவை எனத் தெரிவித்து கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் கூறிய தகவல்கள் வருமாறு:-

"உங்கள் ஆட்சியின் கீழ்தான் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது. ஒரு சட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட முடியும் என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டால் அதை ஆதரிக்க .தே.கட்சி தயாராகவும் இருந்தது. ஆனால் நீங்கள் அப்படிச் செய்ய மறுத்துவிட்டீர்கள். ஆகவே வடக்கு கிழக்கைப் பிரித்தது உங்கள் அரசுதான்'' என சம்பந்தர் சுட்டிக்காட்டினார். இப்பிரச்சினைக்குத் தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யக்கூடிய பதிலோ, உறுதிமொழியோ அரசதலைவர் தரப்பிலிருந்து கோடி காட்டப்படவில்லை.

"இனப்பிரச்சினைத் தீர்வுக்கென அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற ஒன்றை நீங்களே உருவாக்கினீர்கள். அதன் சார்பில் நிபுணர் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தனர். அதை ஏற்க மறுத்துக் கிடப்பில் போட்டீர்கள். அதன் பின்னர் அனைத்துக் கட்சிக் குழு பயனற்றுப் போயிற்று.'' என்று சம்பந்தர் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட அரசதலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க, "நீங்கள்தான் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலேயே பங்கேற்கவில்லையே. அது உங்கள் தவறு அல்லவா?'' என்று கேட்டார்.

அதை மறுத்துரைத்தார் சம்பந்தர். "கூட்டமைப்புக்கு அந்தக் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு எப்போதுமே அழைப்பு விடுக்கப்படவில்லை. தென்னிலங்கையின் இணக்கப்பாட்டைக் காணவே இந்த அனைத்துக்கட்சி நிறுவப்பட்டது என்பதால் அதன் கூட்டங்களுக்கு தமிழ்க்கூட்டமைப்பை அழைக்கத் தேவையேயில்லை என்று கூறிய அரசதலைவர்யே இங்கு இருக்கிறார். அதனை அவரிடம் உறுதிப்படுத்தலாம்.'' என அரசதலைவரின் செயலாளருக்குத் தகுந்த பதிலடி தந்தார் சம்பந்தர்.

எந்த முகத்துடன் வாக்குக் கேட்பது?

"விடுதலைப் புலிகளை அழித்தல் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரம் பேர் உங்கள் ஆட்சியில் கொல்லப்பட்டனர். சர்வதேசமும் நாங்களும் எவ்வளவு கெஞ்சியும் அதை நீங்கள் தடுத்து நிறுத்தவில்லை.மாறாக, அனுமதித்துப் பார்த்திருந்தீர்கள். அத்தகைய உங்களின் ஆட்சிக்கு வாக்களியுங்கள் என்று எந்த முகத்துடன் போய் நாம் எமது மக்களிடம் கேட்க முடியும்?'' என்று சம்பந்தர் அரசதலைவரிடம் கேட்டார்.

அகதிகளாக்கப்பட்ட மக்கள் இன்னும் மீள்குடியமர்த்தப்படவில்லை என்று சம்பந்தர் சுட்டிக்காட்டியபோது அனைவரும் விரைவில் மீள்குடியேற்றப்படுவர் என உறுதிமொழி தர விழைந்தார் அரசதலைவர்.

இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பின்னர் மீளக்குடியமர்வு

கண்டி வீதிக்கு கிழக்கே மீள் குடியேற்றம் நடைபெறவேயில்லை என்று சம்பந்தர் சுட்டிக்காட்டியபோது அங்கும் மீள்குடியேற்றம் விரைவில் நடக்கும் என்றார் அரசதலைவர்.

""இல்லை. கண்டி வீதிக்குக் கிழக்கே பல இடங்களில் இராணுவமே நிலைகொண்டுள்ளது. மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை.'' என்றார் சம்பந்தர்.

"ஆம். சில இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவேண்டியுள்ளன. அப்பணி முடிந்ததும் எஞ்சிய இடங்களில் மீள்குடியமர்வு இடம்பெறும்.'' என அரசதலைவர் பதில் தந்தார்.

நாம் தமிழர் தாயகத்தில் இராணுவ நிலை நீக்கத்தை வலியுறுத்த, அரசதலைவர்யோ இராணுவத்தை நிரந்தரமாக நிலைநிறுத்துவது பற்றிப் பிரஸ்தாபிக்கின்றார் என சம்பந்தர் தமது கூட்டமைப்பு சகாக்களிடம் பின்னர் விசனத்துடன் சுட்டிக்காட்டினார்.

"யாழ் குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இருபது வருடங்களுக்கு மேலாக மக்களின் மண் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்போது யுத்த பீதி நீங்கியுள்ளதால் இந்தப் பிரதேசம் அந்த மக்களிடம் விடுவிக்கப்பட வேண்டும்'' என சம்பந்தர் வலியுறுத்திய போது, "இவ்விடயத்தில் அவசரப்பட வேண்டாம், அவசரப்படக்கூடாது. பொறுத்துக் கொள்ளுங்கள். ஆறுதலாகப் பார்க்கலாம்'' என்ற பாணியில் அரசதலைவர்யின் பதில் அமைந்திருந்தது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆம் திருத்தம் மற்றும் "பிளஸ் பிளஸ்" என்று அரசதலைவர் கோடி காட்டினார். ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்புக்கான எந்த சமிஞ்ஞையையும் அரசதலைவர் காட்டவேயில்லை.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழான பொலிஸ் அதிகாரம் பரவலாக்கப்படமாட்டாது என்பதே தமது நிலைப்பாடு என்பதை அரசதலைவர் வெளிப்படுத்தினார். அத்தகைய பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்குப் பரவலாக்கும் அளவுக்கு நாட்டு மக்கள் பக்குவப்படவில்லை என்றார் அரசதலைவர். வடக்கு, கிழக்கு இணைப்பையும் மறுத்து,பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பரவலாக்கும் சட்ட ஏற்பாட்டையும் மறுக்கும் அரசதலைவர், அத்தகைய தமது திட்டத்தைப் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் உத்தேசம் என்று கூறுவது வேடிக்கையானது எனக் கூட்டமைப்புக் கருதுகிறது.

0 Responses to சம்பந்தர் - மகிந்த இடையில் நடைபெற்ற சூடான சந்திப்பு: நடந்தது என்ன?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com