Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவில் 6வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்தது.

இந்த தேர்தலில் ஒரு கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வாக்குப் பதிவுக்காக 11,098 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.தேர்தலையொட்டி அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

தமிழர் பூமியான யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை தொடர் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் வாக்காளர்கள் பீதி அடைந்து வாக்களிக்க வர மாட்டார்கள் என நினைத்து ஒரு தரப்பினர் இவ்வாறு செய்ததாக கருதப்பட்டது.

ஆனால், காலையிலிருந்தே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருப்பதாக அங்கிருந்து வந்த செய்திகள் முதலில் தெரிவித்தன.

ஆனால், பிற்பகல் வரை அங்கு வெறும் 5 சதவீத வாக்குகளேப் பதிவானதாக தற்போது வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக 15 சதவீத வாக்குகள் பதிவாகலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.சுன்னாகம் ரோமன் கத்தோலிக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் ஒரு கும்பல் கையெறி குண்டை வீசித் தாக்கியது. இருப்பினும் இதில் யாரும் காயமடையவில்லை.

நேற்றைய மற்றும் இன்றைய வன்முறையில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.அதேசமயம், மக்கள் தனித்தனியாக வாக்களிக்க செல்லாமல் குழு குழுவாக சென்றதைக் காண முடிந்தது.

மன்னாரில் 28 வாக்களிப்பு நிலையங்களும், மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 42 வாக்களிப்பு நிலையங்களும் மொத்தமாக 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 103 வாக்களிப்பு பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மலையக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்பட்டனர். இன்று பெரும்பாலான தோட்டங்களில் காலையில் வேலைக்குச் சென்று 11.00 மணியளவில் திரும்பி வந்து வாக்களிக்க ஆரம்பித்தனர்.

பொகவந்தலாவை, ஹட்டன், மஸ்கெலியா போன்ற நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம் பெற்றுக் கொண்டிருந்தன.

கொழும்பு மற்றும் கொழும்பு வடக்குப் பகுதியில் இதுவரையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் 30 சதவீதமும், திரிகோணமலை, அம்பாறையில் மொத்தமாக 60 சதவீத வாக்குகளும் பதிவானது எனத் தெரிகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவிலும் மகா மந்தமான வாக்குப் பதிவு நடந்தது.

இதற்கிடையே, ராஜபக்சே ஆதரவு டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர், யாழ்ப்பாணத்தில் பெரு்மளவில் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணம் எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாங்கள் சுட்டிக் காட்டும் நபர்களுக்கு எந்தவித கேள்வியும் கேட்காமல் வாக்கு அட்டைகளை வழங்குமாறு டக்ளஸ் கட்சியினர் தபால் அதிகாரிகளை நிர்ப்பந்தப்படுத்தவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முகாம்களில் இருக்கும் தமிழர்களின் பெயர்களைப் பயன்படுத்தி போலியான வாக்கு அட்டைகளை விநியோகித்து முறைகேடு நடப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கிடையே, வவுனியா மானிக்பாம் முகாமில் உள்ள இடம்பெயர்ந்தோர் தமது வாக்குகளை செலுத்துவதற்காக யாழ்ப்பாணத்திற்கு செல்லமுடியாத நிலையில் இருப்பதாக ஜே வி பி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் எம்.பியான ஹெரத் கூறுகையில், யாழ்ப்பாணத்திற்கான பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் முகாமில் உள்ள இடம் பெயர்ந்தோர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது.

அரசாங்கம் திட்டமிட்டே இந்த வாக்காளர்கள் வாக்குகளை அளிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி வைத்துள்ளது.

ஏற்கனவே இந்த இடம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்க பஸ் சேவைகளை ஏற்படுத்தி தருவதற்கு அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும் தற்போது அதனை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றார்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் அதிகாரி பாக்கியசோதி சரவணமுத்து கூறுகையில், வடக்கில், வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிப்பதில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.

மாலை 4 மணிக்கு தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 888 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நாளை காலை முழுமையாக எண்ணப்பட்டு முடிவுகள் தெரிய வரும்.இருப்பினும் இன்று நள்ளிரவு வாக்கில் முன்னணி நிலவரம் தெரிய வரும்.

தமிழர்கள் மத்தியில் தேர்தல் குறித்த ஆர்வமே இல்லை. ஆனால், இவர்களின் வாக்கு வங்கிதான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என்பதால் இவர்கள் யாருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொன்சேகா பக்கம் நிற்கிறது. அதேபோல முக்கிய எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும் ஆதரவுடன் பொன்சேகா நம்பிக்கையுடன் காணப்படுகிறார்.

ராஜபக்சேவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட சறுக்கல்கள். அவருடைய நெருங்கிய கட்சிகள் பலவும் பொன்சேகா பக்கம் போய் விட்டன. அதற்கு உச்சமாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா திடீரென பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டார்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் இந்தத் தேர்தலில் அதிபர் ராஜபக்சேவும், முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகாவும் நேருக்கு நேர் மோதலில் உள்ளனர். இவர்கள் தவிர தமிழர்கள் சார்பில் சிவாஜிலிங்கம் உள்பட 22 பேர் களத்தில் உள்ளனர்.

இன்று மாலை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாளை காலை வெற்றி விபரம் தெரியும்.

0 Responses to சிறிலங்கா அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்: தமிழர்கள் மத்தியில் தேர்தல் குறித்த ஆர்வமே இல்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com