"சனல் 04' தொலைக்காட்சியினால் காண்பிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகள் நிச்சயமாக யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றமையை உறுதி செய்கின்றன என ஐக்கிய நாடுகளின் சட்டவிரோதப் படுகொலைகள் குறித்த விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்டொன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் "எஸ்.பி.எஸ்.' தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே தெரிவித்துள்ள அவர், குறிப்பிட்ட வீடியோ உண்மையானது என மிக உறுதியாகத் தெரிவித்துள்ளதுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சரணடைய முன்வந்தால் அவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அது பாரதூரமான விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறிப்பிட்ட தொலைக்காட்சிக்குக் கருத்துத் தெரிவித்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ், ""யுத்தக் குற்றங்களுக்கான தடயங்கள் உள்ளன. பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிய மக்களின் வாக்குமூலங்களே அதற்கான தடயங்களாக உள்ளன'' எனத் தெரிவித்துள்ளார்.
மோதலில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்க வேண்டாம் என இலங்கையில் தாம் கடமையில் இருந்த சமயம் கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார் எனவும் கோர்டன் வெ´ஸ் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றங்கள்ஆஸ்திரேலிய தொலைக்காட்சிக்கு பிலிப் அல்ஸ்டொன் தெரிவித்துள்ளவை வருமாறு:
சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறுவதற்கும் முடிந்தளவிற்கு அதிக எண்ணிக்கையிலானவர்களைக் கொல்வதற்குமான உறுதிப்பாடு காணப்பட்டுள்ளது. "சனல் 04' வீடியோவில் காணமுடிந்த காட்சிகளை யுத்தக் குற்றங்கள் என்ற பிரிவிற்குள் மிகத் தெளிவாக உள்ளடக்கலாம். ஏனெனில், கைதுசெய்யப்பட்டவர்கள் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர். அவர்கள் தப்புவதற்கு முயலவில்லை. அவர்களிடம் ஆயுதங்களும் இல்லை. இது குறிப்பிடத்தக்க அளவிலான வெளிப்படையான படுகொலை.
தெளிவாக இது ஒரு யுத்தக் குற்றம். இதேவேளை, விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சரணடைய முன்வந்தவேளை அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள், யுத்தக் கைதிகளாக நடத்தப்படுவார்கள் போன்ற எண்ணம் நிலவியது. விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களைக் கைதுசெய்தால் அவர்களைச் சுட்டுக் கொல்லுங்கள் என்ற உத்தரவு வழங்கப்பட்டதா என்ற கேள்வி உள்ளது. அவ்வாறான உத்தரவொன்று வழங்கப்பட்டிருந்தால் அது பாரிய பிரச்சினையாகும் .இதேவேளை, "சனல் 04' ஒளிநாடாவை ஆராய்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் அனைவரும் இத்துறையில் மிகத் திறமைசாலிகளாக விளங்குபவர்கள்.
அவர்கள் அனைவரும் இது உண்மையான சம்பவம் எனத் தெரிவித்தனர். ஒளிநாடா போலியானதாக இருக்க முடியாது - அது போலியானதாக இருக்க முடியாது என்பதற்கு அவர்கள் பல காரணங்களை முன் வைத்தனர். ஆகவே, இலங்கையில் கைது செய்யப்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமையைக் காண்பிக்கும் வீடியோ உண்மையானது என்ற உறுதியான நிலைக்கு வரமுடியும் என்றார் அவர்.
இதேவேளை, இலங்கையில் யுத்த மோதல்கள் உச்சமடைந்த சமயம் இலங்கையில் ஐ.நா. விடயங்களுக்கான பேச்சாளராக இருந்த கோர்டன் வெய்ஸ் இவ்விடயங்கள் குறித்துக் கூறியவை வருமாறு:
முற்றுகைக்குள்ளான பாதுகாப்பு வலயங்களுக்குத் தொடர்ச்சியாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். எனினும், எமது முயற்சிகளுக்குப் பல மட்டங்களில் தடைகள் விதிக்கப்பட்டன. முற்றுகை காரணமாக மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டனர். தகவல்கள் வெளிவருவதைத் தடுப்பதிலும் உண்மைகளை மறுப்பதிலும் இலங்கை அரசு மிகவும் திறமையாகச் செயற்பட்டது.
மக்கள் கொல்லப்படுவதை அரசு நிராகரித்தது. மக்கள் கொல்லப்படுவது குறித்த தகவல்களை நாங்கள் வெளிப்படுத்தினால் அரசு அதனை முதலில் பகிரங்கமாக நிராகரித்தது; கண்டித்தது. பின்னர் தகவலை வெளிப்படுத்தியவரை வெளிவிவகார அமைச்சிற்கு அழைத்துக் கண்டித்தது. நாட்டிலிருந்து வெளியேற்றப் போவதாக மிரட்டியது. இவ்வாறான அழுத்தங்கள் மிகக் கடினமானவை. இவ்வாறான சூழ்நிலைகளில் செயற்படுவதும் மிகக் கஷ்டமானது. இலங்கையில் நடந்தது இரகசிய யுத்தம்.
தற்போது அது முடிவடைந்துவிட்டது. எனினும், பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன. பல மாதங்களாக இலங்கை ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டுவந்தார். இரு நாடுகளின் தலைவர்கள் பேசும்போது அந்தப் பேச்சு நல்லெண்ண அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். 30,000 முதல் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் மோதலின் இறுதிக் காலத்தில் சுமார் பத்தாயிரம் முதல் நாற்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என்பதே ஓரளவு ஏற்றுக்கொள்ளத்தக்க மதிப்பீடாக அமையும்.
அநேகமாக இது முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரையாக இருக்கலாம். விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடையும் விடயத்தில் ஐ.நாவும் தொடர்புபட்டிருந்தது. நோர்வேயும் தொடர்புபட்டிருந்தது. சில சுயாதீன தரப்பினர் மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த சில பத்திரிகையாளர்களும் தொடர்புபட்டிருந்தனர். யுத்தக் குற்றங்கள் தொடர்பான தடயங்கள் உள்ளன. முற்றுகையிலிருந்து தப்பிய ஆயிரக்கணக்கான மக்களின் சாட்சியங்களிலேயே இதற்கான தடயங்கள் உள்ளன. எனக் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு ஐ.நா. அதிகாரிகள் மீளவும் வற்புறுத்து - "சனல் - 4' வீடியோ மிக முக்கிய ஆதாரம்