வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால் சூறையாடப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு சொந்தமான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வன்னிமீதான இன அழிப்புப் போரினை அடுத்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் வழிபாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. மிக நீண்ட கால தொன்மை வாய்ந்த, உலகப் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாக வற்றாப்பளை அம்மன் ஆலயம் விளங்கி வருகின்றது. ஆலயம் தோன்றிய காலத்தில் இருந்து 2008ம் ஆண்டுவரை வைகாசி மாதத்தில் விசாக பௌணமியை அண்மித்த வரும் திங்கட் கிழமைகளில் வைகாசி பொங்கல் நடைபெற்றுவரும். ஆங்கிலேயர் காலத்தில் குறிப்பிட்ட ஆலயத்தின் வழிபாடுகளை இடைநிறுத்த வெள்ளையர்கள் மேற்கொண்ட முயற்சிகூட அம்மனின் புதுமையால் தோல்வியடைந்ததாக ஆலயவரலாறு குறிப்பிடுகின்றது.
ஓயாத அலைகள் -01 படை நடவடிக்கை மூலம் முல்லைத்தீவு படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்படுவதற்கு முன்பாகக் கூட முல்லைத்தீவிற்கு மிக சமீபமாக உள்ள இவ் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் நடைபெற்றிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
ஆனாலும் கடந்த ஆண்டு அந்த ஆலயத்தில் பொங்கல் பெருவிழாவை நிகழ்த்துவதற்கு சிறீலங்காப் படையினர் அனுதிக்கவில்லை. ஆலயத்தின் தொன்மை வரலாற்றில் கடந்த ஆண்டு மட்டுமே இவ் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் இடம்பெற்றிருக்கவில்லை. இதற்கான அனுமதியினை சிறீலங்காப் படையினர் ஆலய நிர்வாகத்திற்கு வழங்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந் நிலையில் அண்மையில் அப்பகுதியைச் சென்று பார்வையிடுவதற்கு குறிப்பிட்ட ஆலயத்தின் உறுப்பினர்கள் சிலர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கு சென்று பார்த்த போது ஆலயத்தின் தேவைகளுக்கு என வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான மரத்தளபாடங்களும், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பழம் பெரும் பொருட்களும் காணாமல் போயுள்ளதாக அவர்கள் ஊர் மக்களிடம் கவலை வெளியிட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் வற்றாப்பளை மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையால் இந்த ஆண்டு சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்புக்குள் வைகாசிப் பொங்கல் நடைபெறுவதற்கான சூழல் எதிர்கொள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to வற்றாப்பளை அம்மனைக் கூட சிறீலங்காப் படையினர் விட்டுவைக்கவில்லை!