இராணுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும், முப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தனது கையடக்கத் தொலைபேசி மூலம் அவரது இரு மகள்மாருடன் உரையாட இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.இந்நிலையில் அவர் அதன் மூலம் தனது இரு மகள்மாருடன் மாத்திரமே உரையாட முடியும். அதற்கான அனுமதி மாத்திரமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை விசேட சலுகையின் அடிப்படையிலேயே ஜெனரல் பொன்சேகா, கையடக்கத் தொலைபேசியினை உபயோகிப்பபதற்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் எந்தவொரு உத்தரவினையும் பிறப்பிக்கவில்லை.
சலுகையின் அடிப்படையிலேயே அவர் தமது பிள்ளைகளுடன் உரையாடுவதற்காக கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் ஜெனரல் பொன்சேகாவைச் சந்திப்பதற்காகச் செல்லும் அவரது மனைவி அவருக்கான கையடக்கத் தொலைபேசியினை எடுத்துச் செல்வார். அதன் மூலமாகவே அவர் தனது பிள்ளைகளுடன் உரையாடி வந்தார்.
இருப்பினும் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த அந்த அனுமதி கடந்த சனிக்கிழமை இரவு முதல் வாபஸ் பெறப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார். இதனால் அவரது நலனை கருத்திற் கொண்ட பாதுகாப்பு அமைச்சு நேற்று முதல் மீண்டும் அவருக்கு தொலைபேசி பாவனைக்கான அனுமதியினை வழங்கியது.
விஷேட சலுகையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியின் பிரகாரம் ஜெனரல் பொன்சேகா தனது இரு மகள்மாருடன் மாத்திரமே உரையாட முடியும். அதற்கான அனுமதி மாத்திரமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனது பிள்ளைகளுடன் தொலைபேசியில் பேசுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதையடுத்து ஜெனரல் சரத் பொன்சேகா தான் மேற்கொண்டிருந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



0 Responses to உண்ணாவிரதத்தை கைவிட்டார் பொன்சேகா