Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக் காக்க வேண்டிய கட்டாயத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கொள்கையில் உறுதியாகவுள்ளோரை இனங்கண்டு மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சங்கதிக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

"இன்று நாம் ஒரு பொதுத்தேர்தலை சந்தித்துள்ளோம். இத்தேர்தலின் மூலம் வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும். அதுவும் எமது அடிப்படை தேசியத்துடனான கொள்கையில் உறுதி கொண்டவர்களின் பிரதிநிதித்துவமே காப்பாற்றப்பட வேண்டும்.

தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக எமது அடிப்படைக் கொள்கையில் தளம்பல் போக்குள்ளவர்களை அல்லது வேறு சக்திகளின் பின்னால் குறிப்பாக இந்தியா போன்றவற்றின் பின்னால் செல்பவர்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படுவதால் தமிழ் மக்களுக்கு எந்தவித விமோசனமும் ஏற்படப்போவதில்லை. இதனை வடகிழக்கு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

இதனால்தான் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் தொடர்பாக மக்கள் விழிப்படைந்துள்ளனர். தாயகம், சுயநிர்ணய உரிமை, தேசியம், இறைமை என்பனவற்றை அடிப்படையில் புறந்தள்ளிவிட்டு ஐக்கிய இலங்கை என்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சிலர் விடாப்பிடியாக நின்றதன் விளைவே தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக நின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. அத்தருணத்தில் எனது கருத்துக்களையும் அவர் பெற்றிருந்தார்.

எனினும் இத்தேர்தலில் இருந்து விலகுவதால் அடிப்படை கொள்கையில் உறுதிப்பாடு இல்லாதோர் மக்கள் பிரதிநிதிகளாக வரும் பட்சத்தில் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தை தமிழ் மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அதைத் தடுத்து நிறுத்துவதென்றால் இத்தேர்தலில் தனித்து நின்றாவது போட்டியிட வேண்டும் என்ற முடிபு எடுக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படுவதற்கு அக்கட்சியில் அதிகாரத்தைத் தமது கையில் எடுத்துக் கொண்ட குறிப்பிட்ட ஓரு சிலரின் நடவடிக்கைகளே காரணம்.

இவர்கள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்றோ அல்லது அனைவரையும் அரவணைத்தோ நடக்காததனால் ஏற்பட்ட விளைவே இதுவாகும். எனினும் நாம் கூட்டமைப்புக்குள் எந்தவித பிளவும் ஏற்படக் கூடாது என்பதற்காக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவன் என்ற வகையில் அந்நாட்களில் நாங்கள் ஓரிருவர் இதற்காக பட்ட கஸ்டங்களும் துன்பங்களும் எனக்குள் இன்றும் உறைந்து போயுள்ளது.

இந்த வகையில் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படுவதையோ அல்லது சிதைவதையோ நான் விரும்பவில்லை. அதற்காக நாங்கள் பல முயற்சிகள் விட்டுக் கொடுப்புகளைச் செய்தும் பலனில்லை. அவர்கள் தமது பிடிவாதத்திலிருந்து இறங்கிவர முடியாதவர்களாக தமது முடிவுகளை ஏனையோரிடம் திணிப்பவர்களாகவே இருந்தனர். உண்மையில் நான் உட்பட கொள்கையில் விட்டக் கொடுக்காமல் இருந்தவர்களை எப்படியாவது கட்சியில் இருந்து அகற்றிவிட வேண்டுமென்ற முடிவில் அவர்கள் உறுதியாக இருந்தனர். இது இந்திய அரசின் திட்டமும் கூட.

இந்த நிலையில் எதிர்காலத்தில் இந்தியாவின் வழிகாட்டலில் ஐக்கிய இலங்கைக்குள் குறைந்த பட்சம் கிடைக்கக் கூடிய தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடியவர்களாகவே இவர்கள் இருப்பர். இந்தத் தீர்வு இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்ட மாகாணசபை நிருவாக முறைமையைவிட குறைவானதாக இருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே இன்றைய நிலையில் தமிழ் தேசியத்தைக் காப்பாற்றக் கூடிய அக்கொள்கையில் தளராமல் உறுதியாக உள்ளவர்களை இனங்கண்டு அவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டிய கடமை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உள்ளது. இதையே வடகிழக்கு மக்கள் தற்போது உணர்ந்தும் உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே தவிர தனிமனிதர்களின் சுயநலத்திற்காக உருவானதல்ல. இந்த வகையில் கொள்கையை புறந்தள்ளிவிட்டு சுயநல அரசியல் நடத்த இடமளிக்க முடியாது. எனவே இதன் பின்னணியில் காலத்தின் தேவையாகவும் கட்டாயத்தின் நிமிர்த்தமும்; கொள்கையின் அடிப்படையில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி இரு மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள மக்கள் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களை தெரிவு செய்யும் வகையில் சிந்தித்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. தவிர கொள்கையை உதட்டளவில் கோசமிட்டுக் கொண்டும் மக்களை ஏமாற்றும் கருத்துக்களைக் கூறிக் கொண்டும் போட்டியிடுபவர்களை இம்மக்கள் இனங்கண்டு தக்க பாடம் புகட்டுவார்கள். இதன் மூலம் தமிழ் தேசியத்தை எதிர்வரும் காலங்களில் நாம் கட்டிக்காக்கவும் காப்பாற்றவும் முடியும்.

இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த ஒருசிலரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தைத் தமது கையில் வைத்துக் கொண்டு ஏனையோரின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சசையாகச் செயற்பட்டவர்கள். இவர்கள் அரசியல் தீர்வுத் திட்ட வரைபு உட்பட பெருமளவான விடயங்களில் தன்னிச்சையாகவே செயற்பட்டனர். ஏனைய உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள் என்பதைக் கூட அலட்சியம் செய்தவர்களாகவே நடந்து கொண்டனர்.


கடந்த ஐனாதிபதி தேர்தலில் எடுத்த முடிவு, நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் முடிவு என்பன கூட பக்கச் சார்பானதாகவே இருந்தன. நீண்டகாலம் வெளிநாட்டில் வாழ்ந்த ஒரு சிலர் கூட வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பலர் ஓய்வூதிய வயதைக் கொண்டவர்களாக உள்ளனர். ஒரு சிலர் சிங்கள தேசியக் கட்சியில் உறுப்பினராக இருந்தவர்கள், மேலும் ஒருசிலர் கொள்கைப்பற்று இன்றி ஆயுதக்குழுக்களுடன் இறுதிவரை தொடர்பு வைத்திருந்தவர்கள். இவர்களுக்கே கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மற்றும் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். எனவே இந்த யதார்த்தத்தை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களித்து ஆதரவு வழங்குவதன் ஊடாகவே எதிர்காலத்தில் எமது தாயகம், தேசியம், இறைமை, சுயநிர்ணய உரிமை என்பதை விட்டுக் கொடுக்காமல் காப்பாற்ற முடியும். அத்துடன் ஏனைய மாவட்டங்களில் இருந்து கூட்டமைப்பின் ஊடாகத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களையும் இணைத்துச் செயற்படமுடியும்.

இதனால் எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக எந்தவொரு சக்தியுடனும் பேரம் பேசமுடியும். இதற்கான ஏதுநிலையை ஏற்படுத்துவது இன்றைய காலத்தில் ஒவ்வொரு தமிழ் மக்களின் கடமையாகவும் உள்ளது. இதற்கிடையில் புலம் பெயர் தேசத்திலும் சரி தாயகத்திலும் சரி சிலர் வடகிழக்கு அரசியல் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் அதனூடாக தாயகம், சுயநிர்ணய உரிமை, இறைமை, தேசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சிந்திக்காமல் பிரதேசவாத கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கிவிட்டனர். இது எமது தாயக ஒருமைப்பாட்டுக்கு மிகவும் ஆபத்தான கருத்தியலாகவே உள்ளது.

இவ்வாறானவர்கள் வடகிழக்கு பிரிக்கப்பட்டதை மானசீகமாக ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கின்றார்களோ என்ற ஐயப்பாடும் எனக்கு எழுகின்றது. அது மாத்திரமின்றி சில ஊடகர்கள் இப்பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதன் ஊடாக அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, மக்களுக்கான சலுகைகளை பெறமுடியும் எனவும் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவை அனைத்தும் மக்களுக்கு இன்னியமையாதவைதான். ஆனால் இவை வெறும் சலுவைகளே தவிர தமிழர்களின் உரிமைகள் அல்ல என்பதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வடகிழக்கின் ஒருமைப்பாட்டின் ஊடாகவே நாம் எமது தாயகவிடுதலையை பெறமுடியும் அதற்காகவே நாம் இரத்தம் சிந்திப்போராடினோம் என்பதையும் எவரும் மறந்துவிட முடியாது.

கடந்த 30 வருட போராட்ட காலத்தில் எமது இனத்தின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர்களின் இலட்சிய கனவுகளை நாம் மறந்துவிட முடியாது. அவர்களின் கல்லறைகளின் மேல் நின்று நாம் களிப்படையவும் முடியாது. அவர்களின் கனவுகளை நாம் நனவாக்க வேண்டும்.

நான் தேசியத் தலைவரை கடந்த 2008 நவம்பர் மாதம் சந்தித்தபோது அவர் கூறிய ஒரு விடயம் இன்றும் என் இதயத்தில் ஆழமாய் பதிந்துள்ளது. "நாம் எமது இறைமையையும் உரிமையையும் எக்காரணம் கொண்டும் எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. எமது இனத்தின் விடுதலைக்காக தமிழர்கள் இறுதிவரை போராட வேண்டும். அதன் மூலமே எமது இனம் விடுதலை பெறமுடியும்." என்றார். இதுதான் உண்மை எமது உரிமையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. யாரிடமும் அடவு வைக்கவும் முடியாது.

இந்த யதார்த்தத்தை நாம் அனைவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். எனவே வடகிழக்கின் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் தேசியத்தில். கொள்கையில் உறுதியாக உள்ளவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். என்று ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

0 Responses to தேசியத்தில், கொள்கையில் உறுதியாக உள்ளவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்: ஜெயானந்தமூர்த்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com