இன்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டத் தொடரின் முடிவில் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையின் ஊடாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் முதல் மாலை வரை நடைபெற்ற கூட்டத் தொடரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குகொண்டிருந்தனர். நிகழ்விற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தின் போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், மக்களின் மீள் குடியேற்றம், மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
கூட்டத்தின் நிறைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பத்திரிகை அறிக்கை ஊடகவியலாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் சாராம்சம்..
கடந்த போர் அனர்த்தங்களால் மக்களில் பலர் நாட்டைவிட்டும், தமது மாவட்டங்களைவிட்டும் வெளியேறியுள்ளமையாலும், இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களிலும் வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றமையாலும் பெருமளவான மக்கள் வாக்களிக்கமுடியவில்லை.
இதனைவிடவும் அச்சுறுத்தல், மோசடி, ஊழல் நிறைந்ததாகவே கடந்த தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் மக்கள் தேர்தலில் விருப்பார்வத்துடன் பங்கெடுக்கமுடியவில்லை.
ஆனாலும் இத்தனை நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வடக்கு கிழக்கு மக்கள் தமிழர் தாயகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது ஆதரவினை வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்துள்ளார்கள்.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைத் தேர்வு செய்த மக்களுக்கு கூட்டமைப்பு தலைவணங்குகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ள அவ் அறிக்கையில்,
மக்களின் ஆணையை ஏற்று அதன்படி, தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான தீர்வு, மீள்குடியேற்றம் மற்றும் உடனடி அபிவிருத்திப் பணிகள் குறித்த நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் அதேவேளையில் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கான அபிவிருத்தி புனர்வாழ்வு உட்பட்ட உடனடித் தேவைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அரசு விரும்பினால் அதுகுறித்து ஆரோக்கியமாக பரிசீலிப்பதற்கும் கூட்டமைப்பு தயாராக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், மாவை சேனாதிராசா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராகலிங்கம், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், க. செல்வராசா, கே.பியசேன மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.



0 Responses to கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்றக் குழுவின் முதல் கூட்டத்தொடரும், அதன் முடிவுகளும்!