மலேசியாவிலிருந்து சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பியது சரியான நடவடிக்கையே என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 16ம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள். பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுக்க கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த அவரை விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் குடியுரிமை அதிகாரிகள். இந்தியாவுக்குள் நுழைவதற்கான உரிமை உங்களிடம் இல்லை என பார்வதி அம்மாளையும் அவருக்கு துணையாக வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணையும் தடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
மருத்துவ சிகிச்சைக்காகவே தான் சென்னை வந்திருப்பதாக பார்வதி அம்மாள் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லியும் அனுமதி மறுக்கப்பட்டதோடு அவர் மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
தகவல் அறிந்து வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை விமான நிலையம் சென்றனர். ஆனால் அவர்களுக்கும் பார்வதி அம்மாளைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.
இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பார்வதியை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல. ராஜீவ் காந்தியை கொன்றதற்காக பார்வதி முதலில் கண்டனம் தெரிவிக்கட்டும். அதன்பிறகு அவரை இந்தியாவுக்குள் அனுமதிப்பது பற்றி பிறகு பரிசீலிக்கலாம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.



0 Responses to தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல: சுப்பிரமணியன்