தந்தை செல்வா ஆரம்பித்த பயணத்தை மீளத்தொடங்கி தமிழீழம் நோக்கிய முயற்சியாக வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதி செய்துகொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய தமிழர்களின் முயற்சிக்கு தமது பாராட்டுக்களை மருத்துவர் எழிலன் தெரிவித்துக்கொண்டார்.இவர் தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய தமிழ்க்குரல் வானொலிக்கு எதிர்வரும் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு தொடர்பாக வழங்கிய கருத்துப்பகிர்விலேயே அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.
அவர் தனது கருத்துப்பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழர்களின் சுடர் ஏந்திய பயணம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பரிணாமங்களுடன் பயணித்திருக்கிறது. அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில் சனநாயக முறைப்படி தமிழீழம் நோக்கிய பயணம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
போர்க்குற்றங்களை செய்த மகிந்த ராஜபக்ச அரசின் கொடூரங்களை வெளியுலகிற்கு கொண்டுவரும் ஒரு நிகழ்வாகவும் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் இக்கருத்துக்கணிப்புக்கு உண்டு.
அடுத்து கருத்துப்பகிர்வில் இணைந்துகொண்ட தமிழ் உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான தங்கர் பச்சான் தெரிவித்ததாவது,
ஈழத்தமிழர்களின் தீர்வு தமிழீழமே என்பதை உலகத்திற்கு தெரிவிப்பதுடன் அதற்காக ஒவ்வொரு தமிழனும் உறுதியெடுக்கவேண்டிய நிகழ்வாகவே இக்கருத்துக்கணிப்பு அமைகிறது. எவ்வளவு வசதியாக உலகெங்கும் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழர்களுக்கென தனியான சொந்தமான நாடு இல்லை என்பது கவலையானது.
எனவே ஒவ்வொரு தமிழர்களும் நடைபெறவுள்ள கருத்துக்கணிப்பில் பங்குகொண்டு தமிழீழம் நோக்கிய பயணத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும். நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் உங்கள் பங்களிப்பையும் ஆதரவையும் அறிந்துகொள்வதற்காக அனைவரும் ஆவலுடன் இருக்கிறோம்.
உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் இக்கருத்துக்கணிப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.



0 Responses to அவுஸ்திரேலிய தமிழர் தேர்தலுக்கு தங்கர்பச்சான் மற்றும் எழிலன் வாழ்த்து தெரிவிப்பு (ஒலி வடிவம்)