Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா வடக்கில் மீள்குடியமர்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினிச் சாவினை எதிர்கொள்ளும் அபாய நிலையினை எதிர்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் மக்கள் வெளி இடங்களில் உள்ள தமது உறவினர்களுக்கு அறிவித்துள்ளனர்.

வவுனியா வடக்குப் பகுதியில் அனைத்து மக்களும் முழுமையாக மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி சாள்ஸ் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டு இருபத்து நான்கு மணிநேரத்திற்குள்ளாக மேற்குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆயிரத்து ஐநூற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் மீள்குடியமர்த்தப்பட்டிருந்தனர். அந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட நாளில் இருந்து இன்றுவரையில் அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களோ, உலக உணவுத் திட்டத்தின் நிவாரணப் பொருட்களோ வழங்கப்படவில்லை.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த பிரதேச மக்கள் எந்தவித தொழில்வாய்ப்பும் இன்மையால் பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தை தெரிந்ததே.

இந்நிலையில் மீளக்குடியமர்த்தவெனக் கொண்டுசென்று இறக்கப்பட்டதும் அவர்களுக்கான ஒருவேளை உணவினைக்கூட பெற்றுக்கொள்வதற்கான எந்தவித வழிவகைகளும் இல்லை.

குழந்தைகளுக்கான பால்மாக்கள், நாளாந்த தேனீருக்கான சீனி உட்பட்ட பொருட்கள், உணவிற்கான அரிசி, மா உட்பட்ட பொருட்கள் என்பன எதுவும் இல்லாத நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் சோர்வடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேநிலை, தொடர்ந்தால் உயிரிழப்பு அபாயங்களும் தவிர்க்கப்படமுடியாததாகவிடும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்படுவோரது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் தம்மைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு உரியவர்களைக் கேட்டுக்கொள்ளுமாறும் வெளியிடங்களில் உள்ள தமது உறவினர்களை குறித்த கிராம மக்கள் கேட்டுவருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

0 Responses to வவுனியா வடக்கு மீள்குடியேறி மக்கள் முகம்கொடுத்துள்ள பட்டினிச்சாவு அவலம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com