மக்களின் குரல்களைப் பிரதிபலிக்கின்ற ஊடகங்கள் மீதான அடக்குமுறையின் தொடராக வெற்றி மற்றும் சியத்த ஊடக நிலையம் மீதான தாக்குதலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக்கண்டிக்கின்றது என இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அதன் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மக்களின் குரல்களைப் பிரதிபலிக்கின்ற ஊடகங்கள் மீதான அடக்குமுறையின் தொடராக வெற்றி மற்றும் சியத்த ஊடக நிலையம் மீதான தாக்குதலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக்கண்டிக்கின்றது.
இலங்கையில் ஊடகங்களும் அவற்றின் ஊடகர்களும் சுதந்திரமாகச் செயற்படுவற்கான சூழல் இன்றுவரை மறுக்கப்பட்டே வருகின்றது. தமிழர் தாயகம் உட்பட இலங்கை முழுமையிலும் நேர்மையாகச் செயற்பட்டுவந்த தமிழ் மற்றும் சிங்கள ஊடகர்கள் மற்றும் ஊடகச் செயற்பாட்டாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
போர்க்காலத்தில் ஊடகங்கள் மீதான தாக்குதல்களுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் "வெற்றி மற்றும் சியத்த" ஊடக நிலையத்தின் செய்திப் பிரிவின் மீதான தாக்குதலை மேற்கொண்டவர்கள் ஆயுதங்களை வைத்திருந்திருக்கின்றனர்.
வெற்றி எப்.எம். செய்திப் பிரிவின் மீதான தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட துணைச் செய்தியாசிரியரும், செய்தியாளரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இந்தத் தாக்குதலானது தமிழ் ஊடகர்கள் மீதான ஒடுக்குமுறையின் தொடராகவே பார்க்க வேண்டியுள்ளது.
இதே வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளர் ஏ.ஆர்.வி.லோஷனன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த அதேவேளை குறித்த வானொலியின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே குறித்த ஊடகம் மீதான தாக்குதல் தொடர்பிலான பதிலினை வழங்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கே உள்ளது.
உலகில் ஜனநாயகம் முழுமையாக நிலவுகின்ற நாடுகளில் ஊடகர்கள் மிகப் பெறுமதியாக மதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் எமது நாட்டில் ஊடகர்கள் ஒவ்வொருவரும் தமது வாழ்நாள் எந்தவேளையிலும் முடிந்து போகும் என்ற பயப் பீதியுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
தமிழர் தாயகத்தில் பல ஊடகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள போதிலும் அவர்களின் குடும்பங்களுக்கான எந்தவித இழப்பீடுகளும் இதுவரையில் வழங்கப்படவில்லை.
அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவது தொடர்பில் சில நாட்களின் முன்னர் ஊடகத் துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "அவ்வாறான சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என்றும், கிடைத்திருந்தால் தம்மால் அதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும்" என்றும் குறித்த அமைச்சர் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்திருக்கின்றார்.
"ஜனநாயகம் குறித்தும் அனைத்து மக்களும் ஒருதாய் பிள்ளைகள் எனவும் தெரிவித்து வருகின்ற அரசாங்கம் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகர்களுக்கான இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதுடன், இனி வருங்காலங்களிலாவது ஊடகர்களுக்கான அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளும் அதேவேளை உண்மைக்குக் குரல் கொடுக்கும் ஊடகர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றும் துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றது.
என்று சுரேஷ் பிறேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to ஊடகங்கள் மீதான தாக்குதலுக்கு அரசே பதில் கூறவேண்டும்: த.தே.கூ கண்டனம்