தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்து, உயிர்க்கொடையளித்த தியாகி திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு, இளையோர்களின் பேச்சாற்றலை வளர்க்கும் நோக்குடன் அவுஸ்திரேலியா மாநிலங்கள் தழுவிய பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் அறிவித்துள்ளனர்.அவர்களால் வெளியிடப்பட்ட அறிவித்தலின் முழுவடிவம் வருமாறு:
தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்து, உயிர்க்கொடையளித்த தியாகி திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு, இளையோர்களின் பேச்சாற்றலை வளர்க்கும் நோக்குடன் அவுஸ்திரேலியா மாநிலங்கள் தழுவிய பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது.
தியாகி திலீபனின் நினைவுநாள் நிகழ்வு, தியாகி திலீபன் உயிர்த்தியாகமடைந்த 23 வருட நினைவுநாளான, எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 26 ஆம் திகதி நியு சவுத்வேல்ஸ் மாநிலத்திலும், விக்ரோரிய மாநிலத்திலும் நடைபெறவுள்ளது.
இந்நினைவு நாளையொட்டி நடைபெறவுள்ள பேச்சுப்போட்டியில் பங்குகொள்ளவிரும்பும் இளையோர்கள், உங்கள் பெயர் விபரங்களை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்கள் ஊடாக பதிவுசெய்துகொள்ளலாம்.
போட்டியாளர்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றினை தெரிவுசெய்து, தமது பேச்சினை தயார் செய்வதுடன் அப்பேச்சானது 3 – 5 நிமிடங்களுக்கு உட்பட்டதாகவும் அமைத்துக் கொள்ளவேண்டும்.
1. தமிழ்மொழியும் தமிழர்களும்
2. தியாகி திலீபனின் தியாகம்
3. தாயக மக்களும் எமது பங்களிப்புகளும்
மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ள இப்பேச்சுப்போட்டியில் எட்டு அகவைக்கு உட்பட்டோர் கீழ் பிரிவிலும், பன்னிரண்டு அகவைக்கு உட்பட்டோர் மத்திய பிரிவிலும், பதினாறு அகவைக்கு உட்பட்டோர் மேல்பிரிவிலும் பங்குகொள்ளமுடியும்.
உங்கள் பதிவுகளை செப்ரம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்பதாக பதிவுசெய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
29 – 07 - 2010.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to தியாகி திலீபன் நினைவாக அவுஸ்திரேலியாவில் பேச்சுப்போட்டி