அரசாங்கத்திலிருந்து வெளியேறி மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு 14 நாட்கள் கெடு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மனோ கணேசனின் ஒப்புதலுடன் பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், பிரபா கணேசனுக்கு அதிகாரப்பூர்வமாக எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.இதுதொடர்பில் பிரபா கணேசன் எம்பிக்கு அனுப்வி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,
இந்த அரசாங்கம் பாராளுமன்றத்திலே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறும் வகையில் வாக்களிப்பு உட்பட எந்தவித நடவடிக்கையிலும் பிரபா கணேசன் கலந்துகொள்ளகூடாது என்றும், தற்சமயம் பிரபா கணேசனின் கட்சி அங்கத்துவம் ஜனநாயக மக்கள் முன்னணியில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும், அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தலைவர் மனோ கணேசனினால் பொதுச்செயலாளரின் தலைமையில் பத்து அரசியற்குழு உறுப்பினர்கள் அடங்கிய ஒழுக்காற்றுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபா கணேசன் எம்பி தொடர்பிலான ஒழுக்காற்று குழுவிலே பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன், மாகாணசபை உறுப்பினர்கள் எஸ்.ராஜேந்திரன், முரளி ரகுநாதன், கங்கை வேணியன், ஏ.ஜெயபாலன், ஜோசப் ஜேகப், எப்.எம்.ஷியாம், வி.முரளிதரன், லே.பாரதிதாசன் மற்றும் எம்.ராஜ்குமார் ஆகியோர் தலைவர் மனோ கணேசனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் கட்சியின் தலைவரினாலும், பொதுச்செயலாளரினாலும் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவுகளை அங்கீகரிப்பதற்காகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழுவின் அவசரக்கூட்டம் செவ்வாய்கிழமை காலை 11.00 மணிக்கு கட்சி தலைவர் மனோ கணேசனின் தலைமையில் கட்சி தலைமையகத்தில் நடைபெறவிருக்கின்றது.
இதற்கான அழைப்பு அனைத்து அரசியற்குழு உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to அரசிலிருந்து வெளிவர பிரபா கணேசனுக்கு 14 நாள் கெடு: ஜ.ம.மு எழுத்துமூலம் அறிவிப்பு