அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் குடிவரவு விடயமும், படகுகளில் தஞ்சம் கோரி வருகின்ற இலங்கை உட்பட்ட அகதிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ள விடயமும் மிக முக்கிய விவகாரமாக அமைந்துள்ளதென்று கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வரும் அகதிகளே அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலமாக அதிகளவில் செல்கின்றனர்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இவ்வாறாக அகதிகளாகச் சந்தேகிக்கப்படுவோரை ஏற்றிவந்த 80 கப்பல்கள் ஆஸ்திரேலிய கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2008இல் நூறு பேருக்கும் குறைவாக இருந்த கடல் வழியாக வருகின்ற ஆட்களின் எண்ணிக்கை 2009இல் கிட்டத்தட்ட மூவாயிரமாகவும், இந்த ஆண்டு கிட்டத்தட்ட நான்காயிரமாகவும் அதிகரித்துள்ளது.
ஆளும் தொழிற்கட்சியின் கொள்கைகள் தோல்வியடைந்துள்ளன என்பதையே இது காட்டுகிறது என்பது எதிர்க்கட்சியான லிபரல் கட்சித் தலைவரின் வாதம்.
ஆனால் எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தும் அளவுக்கு அகதிகள் பிரச்சினை நிஜத்தில் பெரிய பிரச்சினையாக இல்லை என்று தொழிற்கட்சி வேட்பாளரும் தற்போதைய பிரதமருமான ஜூலியா கில்லார்ட் கூறுகிறார்.
அவுஸ்திரேலிய மக்கள் நினைக்கும் அளவுக்கு அந்நாட்டுக்கு அகதிகள் வரவில்லை என ஆஸ்திரேலிய அகதிகள் சபை என்ற அமைப்பின் தலைவரான போல் பவர் கூறுகிறார்.
உலகில் மற்ற மற்ற இடங்களோடு ஒப்பிடுகையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைகின்ற தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.
உலகில் தஞ்சம் கோருபவர்கள் அதிகம் நாடக்கூடிய இடங்களின் வரிசையில் அவுஸ்திரேலியா முப்பத்து மூன்றாவது இடத்தில்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்
0 Responses to அவுஸ்திரேலிய தேர்தலில் முக்கிய விடயமாகும் இலங்கை அகதிகள் விவகாரம்