Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தாய்லாந்தில் படும் கஸ்ட நிலைமைகளை யாருமே அறியவே இல்லையா?

அன்பார்ந்த உலகத் தமிழர்களே:

ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தாய்லாந்தில் படும் கஸ்ட நிலைமைகளை யாருமே அறியவே இல்லையா? நாங்கள் இங்கு வந்து 3, 4, 5, 6 இப்படி பல வருடங்கள் ஆகின்றன. நாங்கள் இங்கு வரும்போது 2006ம் ஆண்டு அரிசி, இறைச்சி, வாடகை (அறை) என்பன மிகவும் குறைவாக இருந்தது.

தற்போது யூஎன் (UN) எங்களுக்குத்தரும் பணம் ஒரு தனி நபருக்கு 2500வாத் (Baht). ஆனால் தாய்லாந்துப் பணம் மூன்று மடங்காய் அதிகரித்துவிட்ட நிலையிலும் கூட, யூஎன் (UN) தரும் பணம் அதிகரித்தபாடில்லை.

அகதிகள் அனைவரும் இந்த நிலை பற்றி யூஎன் இடம் கோரிக்கையிட்ட போது, உங்கள் நாட்டில் பிரச்சினை தீர்ந்துவிட்டது, நீங்கள் அங்கு சென்று வாழலாம் என்கிறார்கள். இலன்கையில் யூஎன் நிறுவனத்திற்கே பாதுகாப்பு இல்லை, அதைவிட வன்னியில் யூஎன் அலுவலகம் திறப்பதற்கே அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும், கொழும்பிலுள்ள யூஎன் அலுவலகம் மூடப்படவேண்டும் என்று, விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபொழுது, ஸ்ரீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ஷ, தங்கள் நாடு ஜனநாயக நாடு அதனால்தான் அவர் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால் தமிழர்கள் 30 வருடங்கள் மந்தவெளியில் போராடி எந்தவொரு பலனும் கிடைக்கவில்லையே. தியாகி திலீபன், அன்னை பூபதி, தந்தை செல்வா, இவர்க்களெல்லாம் எந்த பூமியில் போராடினார்கள்? பாங்கிமூன் விமல் வீரவன்சவின் உண்ணாவிரதத்தின் போது போர்குற்ற விசாரணைகளை நடத்தவேண்டாம் என்றபோது என்ன நடந்தேறியது?

இறுதிக்கட்டப் போரின்போது உலகத்தமிழர்கள் எத்தனை பேர் தீக்குளித்தார்கள், எத்தனை பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். அதிலும் இலண்டனைச் சேர்ந்த பரமேஸ்வரன் புனிதமாக இருந்த உண்ணாவிரதத்தை ஸ்ரீலங்கா அரசின் துணையோடு இருந்த பத்திரிகைக்காரர்கள் அநியாய வளியில் குற்றம் சுமத்தினார்கள்.

கடைசியில் பரமேஸ்வரனால் மீண்டும் போராடி ஈழத்து தமிழன் என்று நிரூபித்துக்காட்டி, ஈழத்துத் தமிழர்களுக்கே பெருமை சேர்த்தார். பரமேஸ்வரன் வன்னிமக்கள் உயிர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக, போரை நிறுத்தும்படி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.

ஆனால் பாங்கிமூன் என்ன செய்தார். இறுதியில் 50 000 உயிர்களையும் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் கொன்று குவித்தபின் உலங்குவானூர்தியில் சென்று சுடுகாடுகளைப் பார்வையிட்டார். இவைமட்டுமல்ல, அகதிகளாக வாழும் எங்களை பிரச்சினை தீர்ந்துவிட்டது ஸ்ரீலங்காவில் சென்று வாழுங்கள் என்கிறார்கள்.

மன்னார் உயிலங்குளம் என்னுமிடத்தில், 74 வயதான மூதாட்டி ஒருவரை 5 ஸ்ரீலங்கா இராணுவம் கற்பழித்த சம்பவம் உலகிற்கே தெரியும். அப்படியென்றால் அதைவிட குறைவான வயதில் உள்ள பெண்கள் அங்கு எப்படி வாழமுடியும். இவையெல்லாம் தாய்லாந்தில் வாழும் தமிழர்களுக்கு நன்கு தெரியும்.

இந்த நிலையில் எப்படி நாங்கள் மீண்டும் ஸ்ரீலங்காவில் சென்று வாழமுடியும்? தாய்லாந்தில் இருக்கும் ஸ்ரீலங்கா அகதிகளுக்கு UN சட்டப்படி என்ன சுதந்திரம் இருக்கிறது? முழுமையான சாப்பாடு, கல்வி, அறைவாடகை, வெளியில் நடமாடும் சுதந்திரம், உடுப்பதற்கு உடுபுடவை, சிறுபிள்ளைகளுக்கு பால்மா, காயப்பட்டு கைகால் முறிந்த நிலையில் வந்தவர்களுக்கு வைத்தியம் எதுவுமே இங்குள்ள அகதிகளுக்குக் கிடைப்பதில்லை.

இவர்களுக்காக குரல் கொடுப்பதற்கும் யாரும் இல்லை. UN இல் அகதி அந்தஸ்து பெற்ற குற்றத்திற்காக 4, 5 வருடங்களாக ஸ்ரீலங்கா அகதிகள் பலபேர் சிறையில் வாடுகிறார்கள். இத்தனை வருடங்களாக எந்த முடிவும் தெரியாமல் சாப்பாடு, கல்வி, மருத்துவம் எந்த வசதியுமின்றி மிகவும் கஸ்டப்படுகிறார்கள். சில கணவன்மார்கள் சிறையிலும், மனைவி மற்றும் பிள்ளைகை வெளியிலும் இருக்கும்பொழுது, அவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் ஏராளம்.

எந்தவொரு நிறுவனமோ எங்களைப் பார்த்து இரக்கப்படுவதே இல்லை. மூன்றாவது நாட்டில் வாழ்வதற்கான நேர்காணல் நடைபெற்றால் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் நிராகரித்துவிடுவார்கள். இந்த நிலைமையில் இந்த அகதிகள் பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கையை நினைத்து, பிள்ளைகளும் பெற்றோரும் உளநலன் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவர்களாக அலைகின்றார்கள்.

எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே, எங்களுக்காக குரல் கொடுங்கள். எங்கள் நிலைமைகளை வெளிக்கொண்டுவாருங்கள். எங்களை இங்கு வந்து பாருங்கள், நாங்களும் தமிழர்கள்தான். இங்கு கிட்டத்தட்ட 1000 தமிழர்கள் இருக்கின்றார்கள். தாயை, தகப்பனை, பிள்ளையை, கணவனை, சொத்துக்களை, கை கால்களை இழந்த நிலையில் இங்கு வந்தோம்.

இறுதியில் எங்கள் ஒவ்வொருவரின் நிலைமை குடும்பத்துடன் UN முன்னால் தற்கொலை செய்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை. கல்வியை கேட்டோம், இல்லை, பணத்தைக் கேட்டோம், இல்லை, வேறு நாட்டுக்கு அனுப்புங்கள் என்று கேட்டோம், இல்லை, மருத்துவம் இல்லை. தாய்லாந்து சட்டப்படி நாங்களாகவே இங்கு உழைத்து வாழக்கேட்டோம். எந்த உரிமையும் எங்களுக்குக் கிடையாது.

இந்த நிலைமையில் இன்னும் எத்தனை காலம் இங்கு வாழப்போகின்றோம் என்றும் தெரியாது. பிள்ளைகளின் கல்வி மறுக்கப்பட்டு கலாச்சாரம் போய்விட்டது. தயவுசெய்து உலகத் தமிழினமே எங்களையும் பாருங்கள். இந்த நிலைமையில் இருந்து எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் விடுதலை செய்யுங்கள்.

தாய்லாந்தில் வாழும் அனைத்து இலங்கைத் தமிழர்களின் பணிவான வேண்டுகோள் இது, தயவு செய்து இந்தப் பிரச்சினையை எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியிட்டு எங்களுக்காகவும் பாடுபடுங்கள்.

இங்ஙனம்

தாய்லாந்தில் வாழும்

இலங்கை அகதிகள்.

******************************************
மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தாய்லாந்திலிருந்து ஓர் கண்ணீர்க் கடிதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com