Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

படுகொலைகளின் பின்னணியில் இருப்பது யார்?

பதிந்தவர்: ஈழப்பிரியா 04 January 2011

2010ம் ஆண்டின் கடைசி மாதம் யாழ்ப்பாண மக்களின் நிம்மதியைக் குலைத்த ஒன்றாக அமைந்து விட்டது.

இந்த ஆண்டின் பிறப்பைப் கூட அவர்கள் அச்சத்துடனுடனேயே கழிக்க நேர்ந்துள்ளது.

அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள நான்கு படுகொலைகள்- மூன்று ஆட்கடத்தல்கள்- பல ஆயுதமுனைக் கொள்ளைச் சம்பவங்கள் எல்லாமே தான் இந்த நிலைக்குக் காரணம்.

யாழ்ப்பாணத்தில் தோன்றியுள்ள இந்த நிலை குறித்து மக்கள் கவலை கொண்டுள்ள நிலையில்- சிறிலங்கா அரசாங்கமோ இது குறித்துப் பெரிதாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி அமரசேகர- “இதெல்லாம் பெரிய விடயமே அல்ல- நாட்டின் ஏனைய பகுதிகளை விட இங்கு நடந்துள்ளவை குறைவான சம்பவங்களேஎன்று அலட்சியமாகக் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள் தான் இதைப் பெருபித்துக் காட்ட முனைவதாகவும், அந்தளவுக்கு இந்தச் சம்பவங்கள் ஒன்றும் பெரியவை அல்ல என்றும் அவர் கூறியிருக்கும் கருத்து கவனிக்கத்தக்கது.

அதேவேளை இந்தக் கொலைகள், ஆட்கடத்தல்கள், ஆயுதமுனைக் கொள்ளைகளின் பின்னணி என்ன- இதைச் செய்பவர்களின் நோக்கம் என்ன என்று பார்க்கப்பட வேண்டியது அவசியமே.

யாழ்ப்பாணத்தில் நடந்துள்ள சம்பவங்கள் எல்லாவற்றையும் பொலிஸ் அதிகாரி காமினி அமரசேகர கூறுவது போல- பத்தோடு பதினொன்றாகக் கருதிவிட முடியாது.

அத்துடன் இவற்றுக்கு எந்தப் பின்புலமும் கிடையாது என்றும் ஒதுக்கி விட முடியாது.

இவை அரசியல் நோக்கம் ஒன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகவே தெரிகின்றன.

சங்கானையிலும் உரும்பிராயிலும் நிகழ்த்தப்பட்ட கொலைகள்- கொள்ளை முயற்சியின் போது நடந்தது போலக் காண்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

சரசாலையில் நிகழ்ந்த மூன்றாவது கொலை கப்பம் பெறுவதற்காக நடத்தப்பட்டதென்று காண்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

குடத்தனையில் இடம்பெற்ற நான்காவது கொலை- சிங்கள அரசின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் வழக்கமான படுகொலைப் பாணியில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து ஆயுதமுனையில் மக்கள் அச்சுறுத்தப்பட்டு கொள்ளைகள் நிகழ்வதும் சாதாரணமான விடயமல்ல.

அதுபோலவே தான் வெள்ளை வானில வந்து பட்டப் பகலிலேயே ஆட்களைக் கடத்திச் செல்லும் சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.

இவையெல்லாம் 2005-08 கால யாழ்ப்பாணச் சூழலை நினைவூட்டுகின்றன.

அப்போது நடந்த இதுபோன்ற சம்பவங்களுக்கு கருணாவும் டக்ளஸ் தேவானந்தாவும் தான் காரணம் என்று அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய தகவல் குறிப்பை அண்மையில் தான் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.

அண்மையில் கூட கருணா யாழ்ப்பாணம் சென்று வந்ததன் பின்னர் தான் பெரும்பாலான படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் நிகழ்ந்துள்ளன என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற செயற்பாடுகளின் மூலம் யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

மக்கள் தமது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் வகையில் போராட்டங்களை நடத்த முனைவது சிங்கள அரசுக்குப் பிடிக்கவில்லை என்பதை இந்தச் சம்பவங்களின் ஊடாக நிரூபணமாகியுள்ளது.

விரைவில் இரண்டு தேர்தல்கள் வரப் போகின்ற நிலையில் சுதந்திரமான முறையில் தேர்தலில் போட்டியிடுவதற்கு எவரும் முன்வராமல் தடுப்பது கூட இவற்றுக்கான காரணமாக இருக்கலாம்.

ஏனென்றால் வடக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொடியே எங்கும் பறக்க வேண்டும் என்பதே மகிந்த ராஜபக்சவின் விருப்பம்.

சுதந்திரமான சூழலில் நடக்கும் தேர்தலில் தமக்கு எதிராக யாரேனும் போட்டியில் இறங்கினால்- தமது வேட்பாளர்கள் தோல்வியடைந்து விடுவரோ என்ற அச்சமும் அரசதரப்புக்கு இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஒரு உறவுப்பிளவை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இது இருக்கலாம்.

சங்கானைப் படுகொலையில் முன்னாள் போராளிகளும் படையினரும் தொடர்புபட்டுள்ளதாக சிங்களப் படைத்தளபதியே முந்திக் கொண்டு அறிவித்திருந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

முன்னாள் போராளிகளின் விடுதலையை தாமதப்படுத்துதல், சமூகத்தில் அவர்களின் நன்மதிப்பைக் குறைத்து அவர்களைக் குற்றவாளிகள் போன்ற தோற்றப்பாட்டை உருவாக்குவது கூட சிங்கள அரசின் திட்டமாக இருக்கலாம்.

இன்னொரு பக்கத்தில் இதுபோன்ற செயல்கள் முன்னாள் போராளிகளே செய்வதாகக் கூறி- தடுப்புக்காவலில் உள்ளவர்களின் விடுதலையை தாமதப்படுத்துவது, விடுவிக்கப்பட்டவர்களை மீண்டும் தமது பிடிக்குள் வைத்திருப்பதற்கும் கூட இதுபோன்ற காரியங்கள் படைத்தரப்புக்குக் கைகொடுக்கும்.

இதை உறுதிப்படுத்தும் வகையில்- விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை இப்போது தினமும் படைமுகாம்களுக்கு வந்து கையெழுத்திடுமாறு சிங்களப் படையினர் நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

அதுமட்டுமன்றி இதுபோன்ற குற்றச்செயல்களைக் காரணம் காட்டிக் கொண்டு மீளவும் தடைமுகாம்களையும், சோதனைச் சாவடிகளையும் காவலரண்களையும் அமைத்துக் கொள்வதும் படைத்தரப்புக்கு வசதியாகியுள்ளது.

புலிகள் மீள்எழுச்சி காண்பதாகவோ அல்லது இன்னமும் ஆயுதமோதல்கள் முடியவில்லை என்றோ கூறி- தமிழ்மக்களை மீதான அடக்குமுறைகளுக்குப் புதிய வழிகளைத் தேடுவதற்கும் இத்தகைய சம்பவங்கள் கைகொடுக்கின்றன.

போர் ஒன்றுக்குப் பின்னர் இது போன்ற சம்பவங்கள் வழக்கமானதே.

ஆனால் திடீரென இது யாழ்ப்பாணத்தில் எவ்வாறு முளை கொண்டது என்பது தான் சந்தேகம்.

சாதாரணமாக ஆயுதங்களின் பாவனை யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் கடந்த 19 மாதங்களில் இதுபோன்ற ஒரு சில சம்பவங்களாவது நடந்திருக்க வேண்டும்.

நெல்லியடியில் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தவிர அப்படியேதும் நிகழாத நிலையில்- இப்போது திடீரென்று ஒரே மாதத்தில் நான்கு கொலைகள் நிகழ்ந்துள்ளன.

இதிலிருந்தே இவை திட்டமிடப்பட்ட படுகொலைகள் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.

தமிழ்மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் போக்கில் இருந்து அரசாங்கம் இன்னமும் மாறவில்லை.

அத்துடன் யாழ்ப்பாணம் அபிவிருத்தி மாற்றங்களைச் சந்திப்பதையும் சிங்கள அரசு விரும்பாதிருக்கலாம்.

தமக்குப் பிடிக்காத காரியங்கள் நடந்தேறுவதை தடுப்பதற்காகக் கூட இதுபோன்ற குற்றச்செயல்கள் தூண்டி விடப்பட்டிருக்கலாம்.

குறிப்பாக, வடக்கில் இருந்து உயர் பாதுகாப்பு வலயங்களையும், படைத்தளங்களையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை இது போன்ற காரியங்களின் மூலம் பலவீனப்படுத்த முடியும்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழ்மக்களின் நிம்மதியைக் குலைப்பதே இதன் அடிப்படை நோக்கமாகக் கருத முடிகிறது.

யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறுவது போன்று இவையெல்லாம் சாதாரணமானவை அல்ல.

நாட்டின் பிறபகுதிகளில் தப்பிஓடிய படையினரால் தான் இதுபோன்ற குற்றச்செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

ஆனால் யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற சம்பவங்களுக்கும் அவர்களுக்கும் முடிச்சுப் போட முடியாது.

அவர்களுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் வெகுதூரம்.

தப்பிஓடியதால்- தேடப்பட்டு வரும் அவர்கள் ஓமந்தை, ஆனையிறவு போன்ற படையினரின் சோதனைச் சாவடிகளைத் தாண்டி யாழ்ப்பாணத்துக்குள் நுழைய முடியாது.

ஆயினும் இந்தச் சம்பவங்களில் தென்பகுதி சிங்களக் குற்றக் கும்பல்களுக்கும் தொடர்புகள் உள்ளதாகவே நம்பப்படுகிறது.

இவையெல்லாவற்றையும் சிங்களப்படைகளுடன் தொடர்பில்லாத வேறு தரப்பினர் செய்திருந்தால்- முதலாவது கொலைக்குப் பின்னர் மூன்று கொலைகள் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்திருக்காது.

இந்தநிலையில் அரசியல் உள்நோக்கம் கொண்ட படுகொலைகள் வரும் நாட்களில் கூடத் தணியும் என்று எதிர்பார்க்க முடியாதுள்ளது.

இப்போது தான் தமிழ்மக்கள் புலிகளின் தேவையை அதிகமாக உணர ஆரம்பித்துள்ளனர்.

சிங்களக்குடியேற்றங்கள் தொடக்கம் இப்போதைய அச்சநிலை வரை யாழ்ப்பாண மக்கள் நெருக்கடிகளைச் சந்திக்கும் போதெல்லாம் அவர்களையே நினைத்துக் கொள்கின்றனர்.

என்ன தான் சிங்கள அரசு தமிழ்மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்து விட்டதாகப் பீற்றிக் கொண்டாலும்- நடைமுறையில் அது சுத்தப்பொய் என்பது அவர்களால் நன்கு உணரப்பட்டுள்ளது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது இதைத் தான்.

முகிலன்
ஈழநேசன்

0 Responses to படுகொலைகளின் பின்னணியில் இருப்பது யார்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com