Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடுகடந்த தமிழீழ அரசு: வலியா? வரமா?

பதிந்தவர்: தம்பியன் 13 March 2011

தமிழீழ விடுதலைக்கான போராட்டமானது பல்வேறு வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் முடக்கப்பட்டபோது, தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் அதியுயர் நிலையை தக்கவைப்பதற்கான முனைப்பு பல்வேறு தரப்புகளிடமிருந்து முன்வைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நாடு கடந்த தமிழீழ அரசானது நிறுவப்பட்டதுடன் அதற்கான பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் மூலம் தமிழீழ மக்களின் அதியுச்ச அரசியல் உரிமைக்கான வெளி இன்னமும் திறக்கப்பட்டே உள்ளது என்ற யதார்த்தத்தை தமிழர்களுக்கு எதிரான சிங்களதேசமும் இன்னபிற சக்திகளும் புரிந்துகொண்டன.

ஆனால் மனிதவரலாறுகளில் காணமுடியாத வடுவானது, தமிழர்களின் வரலாற்றில் உருவாகிவிட்டதுபோன்ற தோற்றத்தை உருவாக்கி, கடந்த ஒரு வருட காலமாக தமிழர்கள் தரப்பில் வளர்ந்த குழுநிலைவாத நிலைப்பாடுகள் முனைப்புப்பெற்று, தமிழ்த்தேசிய எழுச்சியை திசைமாற்றக்கூடிய ஏதுநிலைகள் உருவாகியுள்ளமை தமிழர்களின் வரலாற்றின் கறுப்புப் பக்கமாக எழுதப்பட்டு வருகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசானது மற்றைய நாடுகளின் நேரடியான ஆதரவின்றி அதன் முழுமையான நிலையை அடையமுடியாவிட்டாலும், தமிழர்களின் தேசிய எழுச்சியை தொடர்ந்தும் தக்கவைக்கின்ற ஓர் ஊடகமாகவாவது அது நிலைத்து நிற்பது மிகமுக்கியமானதாகும்.

ஒரு குறித்த காலத்திற்கு தமிழர்களின் தேசியவிடுதலைக்கான வேட்கையை புலத்துவாழ் தமிழர் தரப்பால் தக்கவைக்கமுடியுமானால், அதன் தொடர்ச்சியை தாயக தமிழர்கள் வீச்சோடு முன்னகர்த்துவதற்கான காலவெளி கிடைத்துவிடும்.

ஆனால் தற்போது சிலநாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான கட்டமைப்பிலிருந்து வெளியேறிய சிலர், தமிழீழத் தேசிய எழுச்சியுடன் வளர்ந்துவருகின்ற இளையோர்களைத் தவறான வழியில் நெறிப்படுத்தி தமிழின வரலாற்றின் கருமையான பக்கங்களுக்கு தாங்களும் பங்காளிகளாகி வருகின்றமை பலரினது கவலைக்குள்ளான விடயமாக இருக்கின்றது.

முதன்மையான கட்டமைப்பாக செயற்படவேண்டிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் ஆர்வத்துடன் இணைந்து நின்ற தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் பலர், குழுநிலைவாத முதன்மைத்துவத்தை வெளிப்படுத்திய சிலரின் முதிர்ச்சியற்ற நடத்தைகளால் அதிலிருந்து விலகிநின்றனர்.

ஆனாலும் தமிழின விடுதலையே நோக்காகக் கொண்ட பலரும், உறுதியுடன் தேர்தல்களில் இணைந்துநின்று தமது தேசியத்திற்கான பற்றுதலை வெளிப்படுத்தினர். அதேவேளைபடங்காட்டுகின்றஒரு சிலரும் இந்த இடைவெளியில் உள்ளே நுழைந்துகொள்வதும் எதிர்பார்க்ககூடியதே. ஆனாலும் அனைவரும் தமிழ்த்தேசியத்தை உறுதியாக பற்றிக்கொண்ட தேசியவாதிகளே என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் தன்னைச் சுடுமாறு தனது போராளிகளுக்கு கட்டளை வழங்கிய தலைவர் பிரபாகரனைப் போல, தமிழீழத் தனியரசிற்கான கோரிக்கையை உறுதியோடு முன்னெடுக்கும் ஒருவரால்தான் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக இருக்கமுடியும் என்பதை உருத்திரகுமாரனோ அல்லது நாடுகடந்த தமிழீழ அரசின் ஏனைய பிரதிநிதிகளோ அறியாதவர்கள் அல்ல.

ஆனால் தொடக்கத்தில் நாடுகடந்த தமிழீழ அரசின் யாப்பு பிழையானது என வாதிட்ட ஒரு குழுவினர், தங்களின் பொய்மைத்தன்மையை தாங்களாகவே உணர்ந்துகொண்டு (நாடு கடந்த அரசின் யாப்பைத் தயாரித்ததில் பணியாற்றிய முதன்மையான இருவர் இப்போது அதை எதிர்த்துக் கொண்டு நிற்கும் குழப்ப அணியின் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரண்) அதனை இப்போது தவிர்த்துக்கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசில் தற்போது செயற்போடுவோரின் தனிமனித செயற்பாடுகளை விமர்சிப்பதும் அதனை விலைபேசுவதாக தமது செயற்பாடுகளை மாற்றியமைத்துக்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாகவே நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்களுக்கு மட்டுமே என அனுப்பப்பட்ட கடிதத்தை, ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியது தவறென்றும் 102 உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை, ஊடகங்களுக்கு போகாமல் தடுத்திருக்கவேண்டும் எனவும் அவ்வாறு அதனை தடுக்கமுடியாவிட்டால், நாடு கடந்த தமிழீழ அரசால் எவ்வாறு செயற்படமுடியும் என கேட்கின்றார்களாம்.

அத்தோடு தாங்கள் அனுப்பிய கடிதத்துக்கு ஒரு கிழமைக்குள் பதில் அளிக்கமுடியாத நாடு கடந்த அரசு தமிழ் மக்களுக்கு எவ்வாறு பதில் அளிக்கும் எனக்கேட்கிறார்களாம்.

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக நியமிக்கப்பட்ட உருத்திரகுமாரனை நரியென்றும் தமிழினத்தின் கறையென்றும் கூவித்திரிந்த இவர்களுக்கு பத்துநாட்களுக்குள் அவர் பதில் அளிக்கவேண்டும் என கேட்டிருப்பது சனநாயகத்தின் இன்னொரு அம்சம்தான்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தமிழர்களின் விடிவிற்கான ஒரே வழியென்றும் அதுவே தமிழீழத்தை பெற்றுத்தரும் என்றும் புலுடா விடுவதும் எமது நோக்கமல்ல. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசானது தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க காத்திரமான பங்கை அதனால் வழங்கமுடியும் என்பதே எமது நம்பிக்கையாகும்.

நாம் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருவதுபோல, சமாந்தரமான வழிகளில் ஒவ்வொரு முனைகளில், எமது பொது எதிரிக்கு எதிராக, எமது விடுதலைக்கான முன்னெடுப்புக்களை விரைவுபடுத்தவேண்டும். மாறாக எமக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தி எமது பலத்தைச் சிதறடிப்பதன் மூலம் இன்னொரு கருணா குழுவாக மாறிவிடாதீர்கள் என்பதே எமது வேண்டுகோளாகும்.

தவறான வழிகளில் தமிழ் மக்களின் தேசியத்திற்கான போராட்டம் திசைதிருப்பப்படுமானால், முதலில் எம்மை தூய்மைப்படுத்திக்கொள்வதற்காக வீதியில் இறங்கவும் எமது மக்கள் தயாராகவேண்டும். பொது எதிரிக்கு எதிராக நாம் ஒருமைப்பட்டு கூர்மைப்படுத்தப்பட வேண்டுமானால் எம்மை நாமே சுத்தப்படுத்திக்கொள்வது மிக அவசியமானது.

அரிச்சந்திரன்
ஈழநேசன்

1 Response to நாடுகடந்த தமிழீழ அரசு: வலியா? வரமா?

  1. இன்றைய எம் கையறு நிலையில் எல்லோரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டிய தருணமிது. தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டி அதை களைய முயல்வதே உசிதம். அஃதன்றி குட்டையைக் குழப்பிக் கொண்டு பிரிந்து சென்று குழு குழுவாய் திரிவார்களே ஆனால் அது எம் இன அழிப்பிற்கு கொலைவெறி சிங்களமும் உலகும் எமக்கு செய்த கொடூரத்திற்கு இணையான செயல். தமிழர் என்றும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com