Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புலம்பெயர் தமிழர்களுள் ஒரு பிரிவினரையும், இங்கு அரசுக்கு ஆமாம் சாமி போடும் ஒரு பிரிவினரையும் உள்ளடக்கிய தமிழ் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் நடவடிக்கையில் அரச தரப்பு அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது.

வடக்கில் செல்வாக்கிழந்து வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும், அதேநேரம் மக்களின் செல்வாக்கைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் இதன்மூலம் இல்லாமல் செய்துவிடவேண்டும் என்பதே அரசின் நோக்கம். இப்படிச் சாடுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன்.

கொழும்பில் உதயன் செய்தியாளரிடம் சுரேஷ் பிறேமச்சந்திரன் மேலும் கூறியதாவது:

யுத்தம் முடிந்துவிட்டது, சமாதானத்தை ஏற்படுத்திவிட்டோம், வடக்கு, கிழக்கில் மக்களை மீள்குடியேற்றிவிட்டோம் என்று அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் இப்பொழுது உண்மைகள் வெளிப்பட ஆரம்பித்துவிட்டன.

இந்த உண்மைகளை மூடி மறைக்க வடக்கில் அரசசார்பு அமைப்பு ஒன்று இல்லை. அரசுக்குக் காவடி தூக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதை புலனாய்வுத் தரப்பினர் அரசுக்கு தெளிவுபடுத்தி உள்ளனர்.

அதேவேளை, ஆயிரம் அடக்குமுறைகள் இருந்தாலும் மக்களின் உள்ளார்த்தமான ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உண்டு என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இனிமேலும் டக்ளஸ் தேவானந்தாவை நம்பி இருப்பதில் நன்மை ஏதும் ஏற்படப்போவதில்லை என்பதை அரச தரப்பினரும் தெரிந்துகொண்டனர்.

இதற்கு மாற்று உபாயமாகவே புதிய கட்சி ஒன்றை வட பகுதியினரைக் கொண்டே உருவாக்கும் சதியில் அரசு இறங்கியுள்ளது. இதற்கு துரும்புச்சீட்டாக கே.பியை அரசு பயன்படுத்துகின்றது.

கே.பி. சர்வதேச மட்டத்தில் தேடப்படும் ஒரு கிரிமினல். ஆயுதக் கடத்தல்காரர். வெளி உலகில் நடமாட முடியாத இவருக்கு அரசு அடைக்கலம் கொடுத்து அவரிடம் இருந்து தகவல்களையும் பெறுகின்றது.

சர்வதேச மட்டத்தில் புலிகளின் அமைப்புகள் எங்கு எங்குள்ளன, அவற்றின் சொத்துகள் எந்தப் பெயரில் இருக்கின்றன, புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் யார், அதிருப்தியாளர்கள் யார், எந்த எந்த நாடுகளில் அவர்கள் இருக்கின்றனர், அவர்களுடன் எப்படி தொடர்புகளை ஏற்படுத்துவது என்ற விவரங்களை கே.பியிடமிருந்து பெறும் அரச தரப்பினர் புலம்பெயர்வாழ் தமிழர் அமைப்பை உடைக்கும் வகையில் அங்குள்ள சில அதிருப்தியாளர்களை வலை வீசி பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

அதேபோன்று வடக்கிலும், சிவிலியன்கள் மத்தியில் இருந்தும் சில பிரமுகர்களையும் இணைத்து புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கவும், அந்த அமைப்பின் மூலம் வடக்கில் பிரச்சினைகளே இல்லை என்று கூறவைக்கவும் அரசு திட்டமிடுகிறது.

சர்வதேச நெருக்கடிகளையும், கேள்விகளையும் சமாளிக்க முடியாத அரசதரப்பு நெருப்பின்மேல் பஞ்சைப் போட்டு மூடி விடலாம் என்று நினைக்கிறது. என்றார் சுரேஷ்.

0 Responses to புலம்பெயர் தமிழர்களுள் ஒரு பிரிவினரையும், இங்கு அரசுக்கு ஆமாம் சாமி: சுரேஷ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com