Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் வடக்குப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் தமிழர் கட்சிகளின் கூட்டணி வெற்றியைச் சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உலகின் 194-வது நாடாக தமிழீழத்தை அறிவிக்க ஐ.நா. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழர் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

வடக்கு மாநிலத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இலங்கை படையினர் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். ஆளும் கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது.

இவற்றையெல்லாம் மீறி வடக்கு மாநிலத்தில் மொத்தமுள்ள 20 உள்ளாட்சி அமைப்புகளில் 17-ஐ தமிழ் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, பதிவான வாக்குகளில் 75 விழுக்காட்டுக்கும் அதிக வாக்குகளை அக்கூட்டமைப்பு பெற்றுள்ளது.

இதன் மூலம், ராஜபக்ஷ தலைமையிலான சிங்கள இனவெறி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதையும், தங்களுக்கென தனித்தமிழ் தலைமை தேவை என்பதையும் ஈழத்தமிழர்கள் உணர்த்தியிருக்கின்றனர்.

இதை தனித்தமிழ் ஈழம் அமைவதற்கான கருத்துக்கணிப்பு முடிவாகவே உலக நாடுகள் கருதவேண்டும்.

இலங்கையில் சிங்களவர்கள் வாழும் பகுதிகளை பொறுத்தவரை தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ராஜபக்ஷ கட்சி தான் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் இலங்கையில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இதை உணர்ந்து, தமிழர்கள் வாழும் பகுதிகளை பிரித்து, தனித் தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக ஈழத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு தைமூர், தெற்கு சூடான் ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக உலகின் 194-வது நாடாக தமிழீழத்தை அறிவிக்க ஐ.நா. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

0 Responses to 194-வது நாடாக தமிழீழத்தை அறிவிக்க ஐ.நா. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!: ராமதாஸ் வலியுறுத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com