Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த இரு வருடங்களுக்கு முன் யுத்த பூமியாக இருந்த வன்னி தற்போது புத்த பூமியாக மாற்றமடைந்து கொண்டு வருகிறது. அரச மரங்கள் அரசாட்சியின் சின்னங்களாக எங்கும் முளைவிடச் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு அப்பால் பெரியமரங்கள் வேருடன் இடம்மாறி அமைந்து புத்தருக்கு நிழல் கொடுக்கின்றன. இவ்வாறு அரச மரத்துடன் அரசாட்சி வேர் பதித்து விரவி நிற்க ஒரு நாடு ஒரு தேசம் என்ற இலக்கை நோக்கி வன்னி நிலம் அடிக்கப்பட்டு நகர்த்தப்படுகிறது.

அரச மரத்துடனான அரசாட்சியுட்ன் ஒரு தேசம். ஒரு கொள்ளைக்குள் தமிழர்களின் அரசியல் அபிலாஷை கள் அதனை நோக்கிய அதிகாரப் பரவலாக்கல்கள் பேசாப் பொருளாகிவிட்டன. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவேனும் அரசியல் தீர்வு குறித்து பேசப்பட்டது. இப்போது அந்த காலாசாரம் கூட மலையேறி விட்டது.

இன்று வடக்கின் வசந்தத்துக்குள் ஒளி வீசும் அபிவிருத்தி பற்றியே பேசப்படுகிறது. கடந்த சில வாரங்களாக குறிப்பாக வட பகுதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரப் பீரங்கிகளாலும் இலவசங்களாலும் அதிர்ந்து போனது. யுத்த காலத்தில் மக்கள் தமது உயிரை பணயம் வைத்து வாழ்ந்தமை மறக்க இயழாது. அமைதி திரும்பிய பின்னும் உயிர்கள் பறிபோன போதும் அவை ஆங்காங்கே இடம்பெற்ற சம்பவங்களாகவே பார்க்கப்பட்டன.

ஆனால் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் அல்லது படைத்தரப்பாக இருக்கலாம். நாய்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. அவைகள் தாராள சுதந்திரத்துடன் சுற்றி திரிந்தன. விமானக் குண்டு வீச்சாலும் சரமாரியான துப்பாக்கிச் சூட்டுக்குமிடையில் அகப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் தற்போதைய உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது நாய்கள் தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி இருந்தன.

தம்மை நோக்கிய ஆபத்தை அறியாத நாய்கள் வெட்டியும் சுட்டும் சாய்க்கப்பட்டு தலை இல்லாத முண்டங்களாக மனிதர்களைப்போல் எதிரணி வேட்பாளர்களின் வீடுகளின் முன்னாலும் அவர்களது கிணறுகளிலும் வீசப்பட்ட புது தேர்தல் கலாசாரம் யாழில் அரங்கேறியுள்ளது. சுதந்திரமாக நடமாடித் திரிந்து வாழும் உரிமை மறுக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்காகவும் நாம் பேசியாகவேண்டும். சில வேளைகளில் தேர்தல் முடிவுடனான வெற்றி தோல்விகளின் வெளிப்பாடாகத் தேர்தல் காலத்தில் போன்று நாய்கள் மாத்திரமின்றி மனிதர்களும் வேட்டையாடப்படலாம்.

இது பற்றி யாரும் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. நாய்களுக்கும் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்ணில் ஜநாயகம் தழைக்குமா என்பதும் கேள்விதான். இலங்கையில் முக்கியமான தேர்தல் எனக் கணிக்கப்படும் தேர்தல் பிரசாரங்கள் தமிழ் மக்களின் அபிலாஷை குறித்து பேசாது இடம்பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்கா முதற் கொண்டு சர்வதேச சமூகம் முதலாக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவரை தமிழ் மக்களுக்காக அரசியில் தீர்வு குறித்து பேசுகின்றனர்.

போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய விசாரணை நடத்தவில்லையென்றால் இலங்கைக்காக உதவிகள் றிறுத்தப்படுமென்று அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்ர்களோ புலம் பெயர் தமிழர்கள் உட்பட ஜெயலலிதாவும் ஹிலாரியும் தமிழர் விவகாரம் குறித்து பேசுவார்களா என்று பட்டி மன்றம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.

முதலில் எமக்காக மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது குறித்து பட்டி மன்றங்கள் நடத்துவதை விடுத்து எமக்கிடையிலான முரண்பாடுகளை தூர வீசி எறிந்துவிட்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கேற்ற நடைமுறைச்சாத்தியமான உறுதியான தூரநோக்குடனான திட்டங்களை வகுத்து நாம் செயற்பட முன்வரவேண்டும்.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்மென்று அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றதை நாம் அனைவரும் அறிவோம். ரொபேர்ட் பிளேக் கூட்டமைப்பினரை சந்தித்தபோது அரசியல் தீர்வை முன்வைக்குமாறு கோரியதுடன் முன் வைக்கப்படும் தீர்வுப்பொதிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார். இப்போது பந்து தமிழர் பக்கமே உள்ளது.

வி. தேவராஜ்

0 Responses to நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்: வி.தேவராஜ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com