Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பாவின் இதயம் என வர்ணிக்கப்படும் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஈருருளிப் பயணம். சிறீலங்காவில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள், வன்முறைகள் தலைவிரித்தாடிய காலங்களைப் படிப்படியாக கூறிக்கொண்டு வரலாம். அந்தவகையில், கறுப்பு யூலை நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

23ம் திகதி சனிக்கிழமை பி.பகல் ஸ்ராஸ்பூர்க் நகரத்தின் மத்திய பகுதியான பிளாஸ் கிளேபர் என்ற இடத்திலிருந்து, பாரீஸ் நகரம் நோக்கி, ஈருருளிப் பயணத்தை ஆறு பேர் மேற்கொண்டுள்ளனர்.

பி. பகல் 3மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வை ஆரம்பித்து வைக்க சில்ரிகைம் நகர மேயர் ரவால் நிசான் அவர்கள் வருகைதந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் ஈருருளிப் பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் எனவும் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, உறவினர்கள் வாழ்த்துரைக்க, கண்ணீர்த் திவலையுடன் ஆரம்பமானது சுமார் 500கி.மீ ஈருருளிப் பயணம்.

பி.பகல் 5.45மணிக்கு 40 கி.மீற்றர் தூரத்திலுள்ள சவேர்ன் என்ற இடத்தை சென்றடைந்த போது நகர மேயர் உடனடியாக வருகைதந்து பயணத்தை மேற்கொண்டுள்ளவர்களை வாழ்த்தி வரவேற்றார். மீண்டும் நாளை 24.07.2011 பயணம் தொடரும்.

கடந்த மேமாதம் 18ம் திகதி அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றிருந்தது. அதன்போது, தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வுக்கான ஏற்பாடுகளை பிரஞ்சு அரசு மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி மனு கையளிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை பிரஞ்சு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள வேளையில், அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்தப்பயணம் அமைந்துள்ளது.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது. போர்க்குற்றம் புரிந்துள்ளது. இதில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது சிறீலங்கா அரசு.

ஆனாலும் நீதி சாகாது. குற்றமிழைத்தவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் வரை, தமிழ் மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை, புலம் பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய நடைப்பயணங்கள், ஈருருளிப் பயணங்கள் தொடர்ந்தும் வீறு நடைபோட்டு தொடர்கின்றன.

வீழமாட்டோம். வீழ்ந்தாலும் மீண்டு எழுவோம். தொடர்கிறது நீதிக்கான போராட்டங்கள்.

ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரம் நோக்கித் தொடரும் ஈருருளிப் பயணத்தின் விபரங்களை caravane –tamoul என்ற face book.com ல் பார்க்கலாம்.

0 Responses to பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொடங்குகிறது ஈருருளிப் பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com