இலங்கைத்தீவின் பூர்வீகக் குடிகளான ஈழத்தமிழர்கள், இலங்கையின் சிங்கள பேரினவாத அரசின் திட்டமிடப்பட்ட இன-அழிப்பிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், மற்றும் சர்வதேச சமூகத்தினராலும், சர்வதேச சட்டங்களாலும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்றானதுமான தமது இனத்தின் உயிர்வாழும் உரிமைக்காகவும், கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகப் போராடி வருகின்றனர் என்பது இன்று பல அறிஞர்களாலும், கல்விமான்களாலும், உலகத்தலைவர்களாலும், உலகின் பெரும்பான்மை மக்காளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கின்றது.
முள்ளிவாய்க்காலுடன் ஈழத்தமிழினத்தின் தனது உயிர்வாழும் உரிமையையும், தனது மற்றைய அடிப்படை மனித உரிமைகளையும் வென்றெடுப்பதற்குமான "உரிமைப் போர்" முடிந்து விடவில்லை என்பதனை சிங்கள பேரினவாதிகளுக்கும், சர்வதேச சமூகத்தினருக்கும் ஓங்கி உரத்துக் கூறும் முகமாகவும், மற்றும் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற அனைத்து நேசசக்திகளையும் ஒருமுகப்படுத்தும் முகமாகவும், புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ் மக்களினால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு மாபெரும் மக்கள் சுதந்திர இயக்கம்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகும்.
வரலாறு கற்றுத்தந்த பாடங்களைக் கொண்டும், இன்றைய காலமாற்றத்தின் தேவைகளை நன்கு உணர்ந்து கொண்டும், சர்வதேச சட்டவிதி நடைமுறைகளை ஏற்றுக்கொண்டும், “தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் - ஜனநாயகம்- வெளிப்படைத்தன்மை” போன்ற அதிஉயர் மனிதக் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, உலகின் மூலை முடுக்குகளில் எங்கினும் எங்கெல்லாம் தமிழர்கள் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு இன்னல் பட்டுக்கொண்டிருக்கின்றார்களோ; அங்கெல்லாம் தமிழர்களின் "உரிமைக்குரலாக" இன்று சர்வதேச அரங்கினில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
இலங்கையில் ஈழத்தமிழினம் தன்மானத்தோடும், கௌரவத்தோடும், அனைத்து மனிதஉரிமைகளோடும் வாழ வேண்டுமானால், அதற்கு "தனித் தமிழீழமே ஒரே தீர்வு" என்று உலகமென்கினும் உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். இலங்கையில் ஈழத்தமிழினத்தின் மீது பேரினவாத சிங்களஅரச பயங்கரவாதம் ஆண்டாண்டு காலமாக அவிழ்த்துவிட்டிருப்பது "வேறொன்றுமல்ல, அது ஒரு இனப்படுகொலையே" என்று சர்வதேச சமூகத்தினரை இன்று விழிப்படைய வைத்துக் கொண்டிருக்கின்றது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
இறைமை, ஜனநாயகம், பயங்கரவாதம்" எனும் திரைமறைவில், காலம் காலமாக சிங்கள பேரினவாத அரசு ஈழத்தமிழர்களின் மீது அவிழ்த்துவிட்டிருப்பதானது, “நன்கு திட்டமிடப்பட்ட தமிழின-அழிப்பு” என்பதனையும், ஈழத்தமிழர்களின் மீது சிங்கள அரச-பயங்கரவாதப் படைகள் மேற்கொண்டுவருவது “இனப்படுகொலை, மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரிய மனித உரிமை மீறல்களே” என்பதனையும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது சர்வதேச சமூகத்தினருக்கும் மற்றைய அனைத்து மனித உரிமைகள் அமைப்புக்களுக்கும் இன்று வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
தமிழீழத்தின் சுதந்திரத்தை நோக்கி, சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ள ஜனநாயகப் பாதையில், சர்வதேச அரங்கினில் இன்று வெற்றிகரமாக வீறு நடை போட்டுக் கொண்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, ஒரு மக்கள் விடுதலை இயக்கமே. புலத்தில் வாடிக்கொண்டிருக்கின்ற தமது உறவுகளின் விடியலிற்காக, புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற மிகச்சாதாரண ஈழத்தமிழ் மக்களால் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒரு மாபெரும் மக்கள் சுதந்திர இயக்கமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகும்.
ஆகவே, சர்வதேச உறவுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பலமும், அந்த பலத்தைக் கொண்டு அரசாங்கம் எதிர்காலத்தில் தனது இலட்சியத்தில் அடையவிருக்கின்ற வெற்றி தோல்விகளின் பலனும், அனைத்து உலகத்தமிழ்மக்களும், குறிப்பாக புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ்மக்கள், அவர்களது அரசாங்கத்திற்குக் கொடுத்துக்கொண்டிருக்கின்ற அல்லது எதிர்காலத்தில் கொடுக்கவிருக்கின்ற தார்மீக-ஆதரவின் பலத்திலேயே தங்கியுள்ளது என்பதானது, ஒரு நிதர்சனமான உண்மை ஆகும்.
- தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் -
நன்றியுடன்,
ஜெயசங்கர் முருகையா. (நா.க.த.அ. உறுப்பினர்)
0 Responses to உலகத்தமிழர்களின் “உரிமைக்குரலாக” நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!