ரூனிசியா, எகிப்து, லிபியாவுக்குள் நுழைந்த மக்கள் போராட்டம் இந்தியாவிலும் ஆரம்பித்துவிட்டதா..?
இப்போது இந்திய செய்திகள் முழுவதும் காந்திக்குல்லாய் போட்ட அன்னா ஹர்சரேயைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றன. கமல் நடித்த இந்தியன் திரைப்படத்தில் வந்த இந்தியன் தாத்தாபோல ஒரு பாத்திரம்.
இவர் இந்தியாவில் உள்ள ஊழலை எதிர்த்து தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். சட்டம் – நீதி – நிர்வாகம் ஆகிய சட்டவாட்சியின் மூன்று துறைகளும் ஊழல் என்ற சீமெந்தால் குழைத்துக் கட்டப்பட்ட ஒரு நாட்டில் ஊழலுக்கு எதிராக போராட்டம். இதனால் அந்த நாட்டின் அரசுக்கட்டிடமே கொல கொலக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்திய நடுவண் அரசால் நிலமைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டு, இப்போது அமெரிக்காவே இதன் பின்னணியில் இருப்பதாக அது குற்றம் சுமத்தியுள்ளது. இந்திய நாட்டை துண்டு துண்டாக உடைப்பதற்கு அமெரிக்கா சதி செய்கிறது என்றளவுக்கு அதன் கோபம் உச்சமடைந்துள்ளது. மறுபுறம் இதற்கும் தமக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்று அமெரிக்கா வழமைபோல மறுத்திருக்கிறது. இருந்தாலும் அமெரிக்கா மீது குற்றம் சுமத்தி விடயத்தை திசை திருப்ப முடியாதளவுக்கு வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது.
2 ஜி உலக மகா ஊழல், சுவிஸ் வங்கியில் நாட்டின் பணத்தை பொதுக்கிய அரசியல் தலைவர்கள் என்று முற்று முழுதான ஊழல் அம்பலத்திற்கு வந்துள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் உண்மை இருப்பதை ராசா, கனிமொழி கைதுகளே உணர்த்துகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவைக் குற்றம் சுமத்தி 2ஜி ஊழலை மறைக்க முடியாதல்லவா..?
எகிப்தில் நடந்தது போன்ற ஒரு போராட்டம் இந்தியாவிற்குள் வரலாம் என்பதை பல மாதங்களுக்கு முன்னரே அறியக்கூடியதாக இருந்தது. ரூனீசியா, எகிப்து, ஏமன், சிரியாவுக்குள் நுழைந்த மக்கள் போராட்டம் அதே வழியாக பயணித்து இந்தியா, சிறீலங்கா, பர்மா வழியாக சீனாவுக்குள் போகும் என்பதும் மிக வெளிப்படையாகவே தெரிந்தது.
ஆசிய தலைவர்கள் பூனை கண்களை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று கருதுவதைப்போல இதையெல்லாம் பார்க்காமல் கண்களை மூடினார்கள். இந்தப் போராட்டங்களை தமது நாடுகளில் ஒளிபரப்புவதை தடையும் செய்தார்கள்.
ஆனால் இணையம், பேஸ்புக் போன்றன மக்களிடம் அவற்றை வெகு விரைவாக எடுத்துச் சென்றுவிட்டன. தலைவர்கள் இறுகக் கண்களை மூடிக்கொண்டிருக்க அந்தக் குருட்டுப் பூனைகளை இவை கச்சிதமாக ஏமாற்றிவிட்டு உள்ளே புகுந்துவிட்டன. கூகுள் மீது சீனாவும் இந்தியாவும் கொண்ட கோபம் இதற்கு ஓர் உதாரணம்.
இணையம் மூலம் விக்கிலீக்ஸ் இரகசியங்களை கசியவிடுகிறது என்ற போர்வையில் அம்பலமான செய்திகள் பல நாடுகளின் ஆட்சியாளரின் கட்டில்களை ஆட்டங்காண வைத்தன. விக்கிலீக்ஸ் இந்திய தலைவர்களின் சுவிஸ் பண முதலீடு தொடர்பான தகவல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தியது. இந்தியத் தலைவர்கள் ஊழல் செய்கிறார்கள் என்பது மக்கள் மனதில் ஆழமாக படிவதற்கு விக்கிலீக்ஸ் பிரதான காரணமாகியது.
இது நடந்துகொண்டிருக்க:
இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு உலகப் பொருளாதார மந்தம் மேலை நாடுகளில் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது. மூன்றாவது உலக யுத்தம் ஒன்றை நடாத்தி மறுபடியும் பொருளாதாரத்தை சீர்செய்ய முடியாது. மூன்றாம் உலகப்போர் அணுப்போராக மாறி முழு உலகத்தையும் அழித்துவிடும். ஆகவே புதுவகையான போர் ஒன்று தேவைப்பட்டது, அது ரூனிசியாவில் ஆரம்பித்தது. கடாபியின் வெளியேற்றம் இன்றோ நாளையோ என்ற நிலையில் இருக்கிறது. இன்று சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டை பதவி விலகிப் போகும்படி அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். இப்போது அமெரிக்காவை இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.
இப்பொழுது நடைபெறும் மக்கள் போராட்டம் எண்ணெய்வளமுள்ள நாடுகளுக்குள் நுழைந்து உலகின் பொருளாதார வளர்ச்சியின் முன்னணி நோக்கி செல்லும் சீனா, இந்தியாவிற்குள்ளும் நுழையும் என்பது வரலாற்றின் யதார்த்தமே. அன்னா ஹர்சரே ஆரம்பித்துள்ள ஊழலுக்கு எதிரான போராட்டம் எகிப்தில் ஏற்படுத்திய மாற்றத்தைப்போல இந்திய அரசியலில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இந்தியத் தலைவர்கள் காலங்கடந்து உணர்ந்து கொண்டு இப்போது அமெரிக்காவை குற்றம் சுமத்தியுள்ளார்கள். ஆனால் 21 ம் நூற்றாண்டுக்கான மாற்றங்களை உலகம் சந்திக்கத் தொடங்கிவிட்டது, அதைத் தடுத்து நிறுத்துவது சுனாமியை தடுப்பதைப் போன்ற செயலாகும்.
மறுபுறம் :
இப்படியான போராட்டங்கள் ஆசியாவில் நடந்தால் அதை எப்படி அடக்குவோம் என்பதை ஆசிய மக்களுக்கு இந்தியாவும், சீனாவும் இணைந்து செய்து காட்டியுள்ளன. சிறீலங்காவில் நடைபெற்ற போரை காட்டுமிராண்டி யுத்தமாக மாற்றி, அதற்கு இரும்பு மனதுடன் இந்தியாவும், சீனாவும் ஆதரவு கொடுத்து, ஆசிய மக்களுக்கு எச்சரிக்கை செய்தன.
அந்த எச்சரிக்கை இப்போது வினையாகியிருக்கிறது. போர்க்குற்றம் உலகில் அனைவருக்கும் பொருந்தும் என்ற நிலையை தோற்றுவித்துள்ளது.
மேலும் சிறீலங்காவில் நடந்தது மிகவும் பழைய போர் முறையாகும். இதே சிறீலங்காவில் கண்டிக் கலவரம் நடைபெற்றபோது கைதாகும் போராளிகளை முற்றாக தோலுரித்து, இரத்த வெள்ளத்தில் கட்டித்தூக்கி ஊர்வலமாக கொண்டு போவார்கள் பிரிட்டன் இராணுவத்தினர். இதனால் மக்கள் மனதில் ஒரு பீதியை வளர்க்கலாம் என்று கருதினார்கள். அதுபோல கண்டி மன்னன் சிறீவிக்கிரமராஜசிங்கள் தனது எதிரியின் சிறு பிள்ளையை துண்டு துண்டாக வெட்டி உரலில் போட்டு இடித்து அச்சத்தை ஊட்டினான். இந்த அச்சங்கள் மக்களை அடக்கிவிடவில்லை அச்சத்தை ஏற்படுத்தியவர்களை அகற்றவே உதவியது என்பதே சிறீலங்கா தரும் வரலாறு. அதைக்கூட தெரிந்து கொள்ளாத பாமர அரசியலையே சிறீலங்காவில் சீனாவும், இந்தியாவும் நடாத்தியுள்ளன.
அதற்குப் பின் உலக யதார்த்தம் அடியோடு மாறியுள்ளது :
மக்கள் போராட்டங்களை அடக்க இராணுவத்தை பயன்படுத்தினால் அது போர்க்குற்றமாக மாறும். எகிப்திலும், லிபியாவிலும் இது நிதர்சனமாகிவிட்டது. எனவே சிறீலங்கா பாணியில் ஒரு முன்னெடுப்பை உலக அரங்கில் இனி எந்தவொரு நாடும் முன்னெடுக்க முடியாது.
சிறீலங்காவில் தமிழ் மக்களை அழிக்காமல் நீதியான ஒரு தீர்வை வேண்டிக் கொடுத்திருந்தால் இந்தியாவும், சீனாவும் இந்த நிலை உருவாகாமல் தடுத்திருக்கலாம். பாவம் விதி அவர்களை விடவில்லை.
இதை மேலும் தெளிவாக விளங்க :
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் புதிதாக ஒரு குழுவை நியமனம் செய்தது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. போர்க்குற்றத்தை செய்யும் நாடுகளின் மீது விசேட அவதானிப்பும், தேவை ஏற்படின் தாக்குதல் நடாத்தவும் விசேட விமானப்படை தயாராகிறது. மேலும் 120 நாட்கள் அவகாசத்தில் இது தயாராக வேண்டும் என்றும் கூறியிருந்தது. ( அது நடந்துகொண்டிருக்க சிறீலங்கா மீது அமெரிக்க விமானங்கள் பறந்து தகவல் எடுத்துள்ளதும் தெரிந்ததே. )
இவைகள் அனைத்தும் யதார்த்தம் :
இந்த நிலையில் இந்தியா என்ன செய்யலாம்..? மொறோக்கோ மன்னரும், சவுதி மன்னரும் செய்ததுபோல அடிப்படை மாற்றங்களை உடன் செய்ய வேண்டும். மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்களை பரவலாக்கம் செய்ய உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்யுமா..
அடுத்து சிறீலங்கா அரசுடன் உறவை முறித்து புதிய பாதையில் நடக்க வேண்டும். சீறீலங்காவுடன் உறவு வைத்தால் சீனாவுடன் இயல்பாகவே இந்தியா உறவு கொண்டுள்ளது தெரியவரும். வடக்கும் கிழக்கும் இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை இந்தியாவே அமல் செய்ய வேண்டும். மேலும் சீனாவுக்கு வரும் ஆபத்தை இந்தியா குறுக்கே விழுந்து சுமக்க நினைக்கும் போக்கையும் மாற்ற வேண்டும்.
செய்யுமா.. சாத்தியமே இல்லை.. இந்தியாவின் தன்மானம் அதற்கு இடம் கொடுக்காது.
மேலும் இப்படிச் செய்தாலும் இவை காலம் கடந்த விடயங்களாகவே அமையும். பிரான்சில் நடைபெற்ற நேட்டோ நாடுகளின் இராப்போசனம் கிறீத்துவின் கடைசி இராப்போசனம் போல பல உலக மாற்றங்களை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது என்பதை இதுவரை ஆசிய தலைவர்கள் எவரும் கவனத்தில் எடுக்கவில்லை.
எகிப்து, ரூனிசியா போல ஒரு போராட்டம் இந்தியாவில் ஆரம்பிக்குமா என்று பலர் சந்தேகப்பட்டார்கள். அன்னா ஹர்சரே ஆர்பாட்டத்தின் பின்னால் அமெரிக்கா இருக்கிறதென்று இந்தியா குற்றம் சுமத்தி அப்படியொரு போராட்டம் ஆரம்பித்துவிட்டதாக இப்போது தானே பிரகடனப்படுத்தியிருக்கிறது.
இனி என்ன செய்வது..?
இவற்றையெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல.. கொஞ்சம் பொறுமையுடன் படித்துப் பார்க்க வேண்டும்…
அலைகள் சர்வதேச புத்தறிவியல் பிரிவு 19.08.2011
0 Responses to இந்தியத் தலைவர்களின் காலம் கடந்த சுடலை ஞானம்