Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை குடியரசுத் தலைவரும் நிராகரித்துவிட்ட நிலையில், அவர்களைத் தூக்கிலிடக்கூடாது என்று தமிழகத்தில் அரசியல்வாதிகள் பலர் குரல் எழுப்பி வருகிறார்கள்.

வைகோ, நெடுமாறன் போன்ற தலைவர்கள், அந்த மூவருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என மத்திய அரசை ஏற்கனவே வலியுறுத்திய நிலையில், இன்று சனிக்கிழமை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பப் போவதாகத் தெரிவித்தார்.

போரில் பெருமளவில் தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமையும் என்று திருமாவளவன் கருத்துத் தெரிவித்தார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே நேரத்தில், ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

எனினும், குடியரசுத் தலைவரும் கருணை மனுவை நிராகரித்துவிட்ட நிலையில், அந்த மூவருக்கும் வேறு ஏதாவது வாய்ப்புக்கள் இருக்கிறதா என்று உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எம்.என். கிருஷ்ணமணி அவர்களிடம் கேட்டபோது,

ஏற்கனவே குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான வாய்ப்புகள் அதிகளவில் இல்லையென்று அவர் சுட்டிக்காட்டினார்.

குடியரசுத் தலைவரிடம் மீண்டும் ஒரு முறை கருணை மனுக் கொடுத்தாலும் முதல் மனு நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அதுவும் நிராகரிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் தண்டனையை நிறைவேற்றாவிட்டால் கைதிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் முன்னர் அளித்திருந்த தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு பின்னர் மாற்றியமைத்து விட்டது என்றும் அவர் கூறினார்.

ஆனால், ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டில் 20 ஆண்டுகளாக இவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள நிலையில் அது மரண தண்டனையைவிடக் கொடியது என்றும் அதையே காரணமாகக் காட்டி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ரிட் மனுச் செய்யலாம் என்றும் வழக்கறிஞர் கிருஷ்ணமணி தெரிவித்தார்.

இந்தியாவில் தூக்கு தண்டனைகள் அபூர்வமாகத் தான் நிறைவேற்றப்படுகின்றன. கடைசியாக 2004 ம் ஆண்டில் தான் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரதமர் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை கைதிகள் மூவர் தொடர்பில் தொடரும் வாதங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com